ஆதியாகமம் 24:12-20

ஆதியாகமம் 24:12-20 TAERV

அவன், “என் எஜமானனின் தேவனாகிய கர்த்தாவே இன்று அவரது குமாரனுக்குப் பெண் தேட உதவி செய்யும். என் எஜமானரான ஆபிரகாம் மீது கருணை காட்டும். நான் இந்தக் கிணற்றருகில் நின்றுகொண்டிருக்கிறேன். நகருக்குள் இருந்து ஏராளமான இளம் பெண்கள் தண்ணீரெடுக்க வருகின்றனர். ஈசாக்குக்குச் சரியான பெண் யாரென்று அறிந்துகொள்ள நான் ஒரு சிறப்பான அடையாளத்துக்காகக் காத்திருக்கிறேன். அதாவது, நான் ஒரு பெண்ணிடம், ‘குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும்’ என்று சொல்லும்போது எந்தப் பெண், ‘குடி உன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் தருவேன்’ என்று கூறுகிறாளோ அவளையே ஈசாக்கின் மனைவியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி நடந்தால், அவளே நீர் ஈசாக்கிற்காக தேர்ந்தெடுத்த சரியான பெண் என்றும் அதன்பின் நீர் என் எஜமானன் மீது கருணை காட்டினீர் என்றும் நம்புவேன்” என்றான். அந்த வேலைக்காரன் இவ்வாறு பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள் ஒரு இளம் பெண் தண்ணீரெடுக்க கிணற்றருகே வந்தாள். இவள் பெத்துவேலின் குமாரத்தியாகிய ரெபெக்காள். பெத்துவேல் நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த குமாரன். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். அவள் தோளில் குடத்தை வைத்துக்கொண்டு தண்ணீரெடுக்க வந்தாள். அவள் மிகவும் அழகுள்ளவளும், புருஷனை அறியாத கன்னிகையுமாயிருந்தாள். அவள் கிணற்றருகே சென்று தண்ணீரெடுத்து தன் குடத்தை நிறைத்தாள். வேலைக்காரன் அவளிடம் போய், “நான் குடிக்கக் கொஞ்சம் தண்ணீரை உன் குடத்திலிருந்து தா” என்று கேட்டான். உடனே ரெபெக்காள் தோளிலிருந்து குடத்தை இறக்கி, “இதைக் குடியுங்கள் ஐயா” என்றாள். அவன் குடித்து முடித்ததும் அவள், “உங்கள் ஒட்டகங்கள் குடிக்கவும் நான் தண்ணீர் ஊற்றுவேன்” என்று சொல்லி, குடத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் ஒட்டகம் குடிக்குமாறு ஊற்றினாள். பிறகு கிணற்றுக்குப் போய் மேலும் தண்ணீரெடுத்து வந்து எல்லா ஒட்டகங்களுக்கும் ஊற்றினாள்.