ஆதியாகமம் 21:22-34

ஆதியாகமம் 21:22-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தளபதி பிகோலும் ஆபிரகாமிடம், “நீர் செய்யும் எல்லாவற்றிலும் இறைவன் உம்முடனேகூட இருக்கிறார். ஆகையால் நீர் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, எனது சந்ததிகளுக்கோ எவ்விதத் தீங்கும் செய்யமாட்டேன் என்று, இறைவனுக்குமுன் எனக்கு ஆணையிட்டுக்கொடும். நான் உமக்குத் தயவுகாட்டியதுபோல், எனக்கும் நீர் அந்நியனாய் வாழும் இந்நாட்டிற்கும் எப்பொழுதும் தயவுகாட்டும்” என்றான். அதற்கு ஆபிரகாம், “அப்படியே ஆணையிட்டுக் கொடுக்கிறேன்” என்றான். பின்பு அபிமெலேக்கின் வேலைக்காரர் கைப்பற்றிய கிணற்றைப்பற்றி, ஆபிரகாம் அபிமெலேக்கிடம் முறையிட்டான். அதற்கு அபிமெலேக்கு, “இதைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் எனக்கு இதை அறிவிக்கவில்லை; நான் இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டேன்” என்றான். அப்பொழுது ஆபிரகாம், செம்மறியாடுகளையும் மாடுகளையும் கொண்டுவந்து, அபிமெலேக்குக்குக் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தெடுத்தான். அப்பொழுது அபிமெலேக்கு, “இந்த ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பிரித்து வைப்பதன் பொருள் என்ன?” என்று ஆபிரகாமைக் கேட்டான். அதற்கு ஆபிரகாம், “நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்குச் சாட்சியாக, நீர் இந்த ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளையும் என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், அந்த இடம் பெயெர்செபா என்று அழைக்கப்பட்டது. பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்தபின், அபிமெலேக்கும் அவன் படைத்தளபதி பிகோலும், பெலிஸ்திய நாட்டிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் பெயெர்செபாவிலே தமரிஸ்கு மரத்தை நட்டு, அங்கே நித்திய இறைவனான யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். ஆபிரகாம் பெலிஸ்தியருடைய நாட்டில் அநேக நாட்கள் தங்கியிருந்தான்.

ஆதியாகமம் 21:22-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தகாலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: “நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். ஆகையால், நீ எனக்காவது, என் மகனுக்காவது, பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான். அதற்கு ஆபிரகாம்: “நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன்” என்றான். ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர்கள் கைப்பற்றிக்கொண்ட கிணற்றிற்காக ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான். அதற்கு அபிமெலேக்கு: “இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்குத் தெரிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதைத்தவிர, இதற்குமுன் அதை நான் கேள்விப்படவே இல்லை” என்றான். அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் எதற்கு?” என்று கேட்டான். அதற்கு அவன்: “நான் இந்தக் கிணறு தோண்டியதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால், அந்த இடம் பெயெர்செபா எனப்பட்டது. அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்துகொண்டபின்பு அபிமெலேக்கும், அவனுடைய படைத்தலைவனாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை அந்த இடத்தில் தொழுதுகொண்டான். ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.

ஆதியாகமம் 21:22-34 பரிசுத்த பைபிள் (TAERV)

இவைகளுக்குப் பின்னர் அபிமெலேக்கும் பிகோலும் ஆபிரகாமோடு பேசினர். பிகோல் அபிமெலேக்கின் படைத் தளபதி. அவர்கள் ஆபிரகாமிடம், “நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவன் உன்னோடு இருக்கிறார். எனவே இப்போது எனக்கு தேவனுக்கு முன்பு ஒரு வாக்குறுதி கொடு. நீ என்னோடும், என் பிள்ளைகளோடும் நியாயமாக நடந்துகொள்வேன் என்றும், நீ என்னோடும், நீ வாழ்கிற இந்தத் தேசத்தோடும் கருணையாய் இருப்பேன் என்றும் வாக்குறுதிகொடு. நான் உன்னோடு கருணையாய் இருப்பதுபோன்று நீ என்னோடு கருணையாய் இருப்பதாக உறுதியளி” என்று கேட்டனர். ஆபிரகாமோ, “நீங்கள் என்னை நடத்துவது போன்று நானும் உங்களை நடத்துவேன்” என்று சொன்னான். பிறகு ஆபிரகாம் அபிமெலேக்கிடம் ராஜாவின் ஆட்கள் அவனது கிணற்றை அபகரித்துக்கொண்டதாய் முறையிட்டான். ஆனால் அபிமெலேக்கோ, “யார் இதைச் செய்தது என்று எனக்குத் தெரியாது, இதற்கு முன் நீ எனக்கு இதைப்பற்றி சொல்லவில்லை” என்று கூறினான். ஆகவே, அபிமெலேக்கும் ஆபிரகாமும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி ஆபிரகாம் ராஜாவுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் ஒப்பந்தத்தின் அத்தாட்சியாகக் கொடுத்தான். ஆபிரகாம் ஏழு பெண் ஆட்டுக்குட்டிகளையும் தனியாக அபிமெலேக்கு முன்பு நிறுத்தினான். அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “ஏன் இவற்றைத் தனியாக இதுபோல் நிறுத்தியிருக்கிறாய்” என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம், “என்னிடத்திலிருந்து நீ இவற்றை ஏற்றுக்கொண்டால், அது நான் இந்தக் கிணற்றைத் தோண்டியதற்கு அடையாளமாகும்” என்றான். அதற்குப் பிறகு அந்தக் கிணறு பெயெர்செபா என்று அழைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்ட இடம் என்று இதற்குப் பொருள். இவ்வாறு அபிமெலேக்கும் ஆபிரகாமும் அந்த இடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் அபிமெலேக்கும் அவனது படையும் அந்த இடத்தை விட்டு பெலிஸ்தருடைய நாட்டுக்குத் திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் பெயெர்செபாவில் ஒரு புதிய மரத்தை நட்டு என்றென்றும் ஜீவிக்கும் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். ஆபிரகாம் பெலிஸ்தருடைய நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தான்.

ஆதியாகமம் 21:22-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான். அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான். ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான். அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக்கேட்ட தேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான். அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக் குட்டிகளைத் தனியே நிறுத்தினான். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான். அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்பட்டது. அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாதிபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.