ஆதியாகமம் 21:22-34

ஆதியாகமம் 21:22-34 TCV

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தளபதி பிகோலும் ஆபிரகாமிடம், “நீர் செய்யும் எல்லாவற்றிலும் இறைவன் உம்முடனேகூட இருக்கிறார். ஆகையால் நீர் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, எனது சந்ததிகளுக்கோ எவ்விதத் தீங்கும் செய்யமாட்டேன் என்று, இறைவனுக்குமுன் எனக்கு ஆணையிட்டுக்கொடும். நான் உமக்குத் தயவுகாட்டியதுபோல், எனக்கும் நீர் அந்நியனாய் வாழும் இந்நாட்டிற்கும் எப்பொழுதும் தயவுகாட்டும்” என்றான். அதற்கு ஆபிரகாம், “அப்படியே ஆணையிட்டுக் கொடுக்கிறேன்” என்றான். பின்பு அபிமெலேக்கின் வேலைக்காரர் கைப்பற்றிய கிணற்றைப்பற்றி, ஆபிரகாம் அபிமெலேக்கிடம் முறையிட்டான். அதற்கு அபிமெலேக்கு, “இதைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் எனக்கு இதை அறிவிக்கவில்லை; நான் இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டேன்” என்றான். அப்பொழுது ஆபிரகாம், செம்மறியாடுகளையும் மாடுகளையும் கொண்டுவந்து, அபிமெலேக்குக்குக் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். ஆபிரகாம் ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தெடுத்தான். அப்பொழுது அபிமெலேக்கு, “இந்த ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பிரித்து வைப்பதன் பொருள் என்ன?” என்று ஆபிரகாமைக் கேட்டான். அதற்கு ஆபிரகாம், “நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்குச் சாட்சியாக, நீர் இந்த ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளையும் என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், அந்த இடம் பெயெர்செபா என்று அழைக்கப்பட்டது. பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்தபின், அபிமெலேக்கும் அவன் படைத்தளபதி பிகோலும், பெலிஸ்திய நாட்டிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் பெயெர்செபாவிலே தமரிஸ்கு மரத்தை நட்டு, அங்கே நித்திய இறைவனான யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். ஆபிரகாம் பெலிஸ்தியருடைய நாட்டில் அநேக நாட்கள் தங்கியிருந்தான்.