ஆதியாகமம் 19:15-38

ஆதியாகமம் 19:15-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பொழுது விடியும்போது, தூதர்கள் லோத்தைப் பார்த்து, “இங்கே இருக்கும் உன் மனைவியையும், உன் இரு மகள்களையும் கூட்டிக்கொண்டு, விரைவாக வெளியேறு; இல்லாவிட்டால் இப்பட்டணம் தண்டிக்கப்படும்போது நீயும் அழிந்துபோவாய்” என்றார்கள். லோத்து வெளியேபோகத் தயங்கியபோது, யெகோவா லோத்தின் குடும்பத்தார்மேல் இரக்கமாயிருந்தபடியால், அந்த மனிதர் அவனுடைய கையையும், அவன் மனைவி மற்றும் இரு மகள்களுடைய கைகளையும் பிடித்துப் பட்டணத்திற்கு வெளியே பாதுகாப்பாய்க் கொண்டுபோய்விட்டார்கள். அவர்கள் வெளியே வந்ததும், அவர்களில் ஒருவன் அவர்களிடம், “உயிர்தப்பும்படி ஓடிப்போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் தங்காமல் மலைகளுக்கே ஓடிப்போங்கள்; இல்லாவிட்டால் நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான். அதற்கு லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே, தயவுசெய்து அப்படி வேண்டாம். நான் உங்கள் கண்களிலே தயவு பெற்றிருக்கிறேன். எனக்குப் பெரிதான தயவுகாட்டி என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். ஆனால் மலைகளுக்குத் தப்பியோட என்னாலோ முடியாது. இந்த பேராபத்து என்னை மேற்கொண்டு நான் இறந்து விடுவேனே. இதோ நான் ஓடிப்போகக் கூடிய அளவுக்கு அருகாமையில் ஒரு சிறிய பட்டணம் இருக்கிறதே. அங்கே நான் தப்பியோட என்னை விடுங்கள். அது மிகவும் சிறிய பட்டணம்தானே. அப்பொழுது நான் உயிர்பிழைப்பேன்” என்றான். அதற்கு அந்த தூதன் லோத்திடம், “நல்லது, இந்த வேண்டுகோளையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ சொன்ன அப்பட்டணத்தை நான் அழிக்கமாட்டேன். ஆனால் நீ விரைவாக அங்கே தப்பியோடு, ஏனென்றால், நீ அங்கேபோய்ச் சேரும்வரை என்னால் எதுவுமே செய்யமுடியாது” என்றார். அதனால் அப்பட்டணம் சோவார் என அழைக்கப்பட்டது. லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, அந்த நாட்டின் மேலாகச் சூரியன் உதித்திருந்தது. அப்பொழுது யெகோவா எரியும் கந்தகத்தை சோதோமின் மேலும், கொமோராவின் மேலும் பொழியப்பண்ணினார். அது யெகோவாவிடமிருந்து வானத்திலிருந்தே வந்தது. இவ்வாறு அவர் அந்தப் பட்டணங்களை அதில் வாழ்ந்த எல்லோருடனும் சேர்த்து, சமபூமி முழுவதையும் அழித்தார். அந்த நாட்டிலுள்ள தாவரங்களையும் அழித்தார். ஆனாலும் லோத்தின் மனைவியோ போகும்போது திரும்பிப் பார்த்ததினால், உப்புத்தூண் ஆனாள். அடுத்தநாள் அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து, தான் முன்பு யெகோவாவின் முன்னிலையில் நின்ற இடத்திற்குத் திரும்பிப்போனான். அங்கிருந்து அவன் சோதோம், கொமோரா பட்டணங்களையும், சமபூமி முழுவதையும் நோக்கிப் பார்த்தபோது, சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் அந்த நாட்டிலிருந்து பெரும்புகை எழும்புவதைக் கண்டான். இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில்கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்த பேரழிவிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து தப்புவித்தார். அதன்பின், லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்ததினால், தன் இரு மகள்களுடன் சோவாரைவிட்டுப் புறப்பட்டு, மலைநாட்டுக்குப் போய், ஒரு குகையில் வசித்தான். ஒரு நாள், மூத்த மகள் இளையவளிடம், “நம் தகப்பன் வயது முதிர்ந்தவரானார்; உலக வழக்கத்தின்படி, நம்மை திருமணம் செய்து நம்முடன் உறவுகொள்ள இப்பகுதியில் ஆண்கள் யாரும் இல்லை. நமது தகப்பனை திராட்சை மதுவைக் குடிக்கப்பண்ணி அவருடன் உறவுகொண்டு, அவர் மூலமாய் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள். அப்படியே அவர்கள் அன்றிரவு தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்த மகள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ அவன் அறியவில்லை. மறுநாள் மூத்த மகள் இளையவளிடம், “நேற்றிரவு நம்முடைய தகப்பனுடன் நான் உறவுகொண்டேன். இன்றிரவு மறுபடியும் நாம் அவருக்குக் குடிக்கக் கொடுப்போம். இன்றிரவு நீ அவருடன் போய் உறவுகொள். இவ்விதமாய் நம் தகப்பன் மூலமாய், நாம் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள். அப்படியே அன்றிரவும் தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். இளையவள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ இம்முறையும் அவன் அறியவில்லை. இவ்விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனால் கர்ப்பமானார்கள். மூத்த மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். இக்காலத்து மோவாபியரின் தகப்பன் இவனே. இளையமகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பென்னமி என்று பெயரிட்டாள். இக்காலத்திலுள்ள அம்மோனியரின் தகப்பன் இவனே.

ஆதியாகமம் 19:15-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

விடியற்காலமானபோது அந்தத் தூதர்கள் லோத்தை நோக்கி: “பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாமலிருக்க எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டுபோ” என்று சொல்லி, அவனை அவசரப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, யெகோவா அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவனுடைய மனைவியின் கையையும், அவனுடைய இரண்டு மகள்களின் கையையும் பிடித்து, அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: “உன் உயிர் தப்ப ஓடிப்போ, திரும்பிப் பார்க்காதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாமலிருக்க மலைக்கு ஓடிப்போ” என்றார். அதற்கு லோத்து: “அப்படியல்ல ஆண்டவரே, உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்னுடைய உயிரைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக தெரியச்செய்தீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் இறந்துபோவேன். அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கு ஓடிப்போக அது அருகில் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது; என் உயிர்பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே” என்றான். அதற்கு அவர்: “நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடி, இந்த விஷயத்திலும் உனக்கு தயவுசெய்தேன். விரைவாக அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேரும்வரை நான் ஒன்றும் செய்யமுடியாது” என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் எனப்பட்டது. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. அப்பொழுது யெகோவா சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், யெகோவாவாலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியச்செய்து, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் அனைத்து மக்களையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள். விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் யெகோவாவுக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை, சூளையின் புகையைப்போல எழும்பினது. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடும்போது, லோத்தை அந்த அழிவிலிருந்து தப்பிச்செல்லும்படி அனுப்பிவிட்டார். பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடுகூட அவனுடைய இரண்டு மகள்களும் மலையிலே தங்கினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு மகள்களும் ஒரு குகையிலே குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: “நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடு இணைய பூமியிலே ஒரு மனிதனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடு உறவுகொள்வோம் வா” என்றாள். அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடு உறவுகொண்டாள்: அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: “நேற்று ராத்திரி நான் தகப்பனோடு உறவுகொண்டேன்; இன்று இரவும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீயும் போய் அவரோடு உறவுகொள்” என்றாள். அப்படியே அன்று இரவிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடு உறவுகொண்டாள்; அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இந்த விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். மூத்தவள் ஒரு மகனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். இளையவளும் ஒரு மகனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் வம்சத்தாருக்குத் தகப்பன்.

ஆதியாகமம் 19:15-38 பரிசுத்த பைபிள் (TAERV)

அடுத்த நாள் காலையில் தேவதூதர்கள் லோத்தை வெளியேற விரைவுபடுத்தினார்கள். அவர்கள், “இந்நகரம் தண்டிக்கப்படும். எனவே, உனது மனைவியையும், இரண்டு பெண்களையும், இன்னும் உன்னோடு வருகிறவர்களையும், அழைத்துக்கொண்டு இந்த இடத்தைவிட்டு விலகிப் போ. அவ்வாறு செய்தால் நீ இந்நகரத்தோடு அழியாமல் இருப்பாய்” என்றனர். லோத்து குழப்பத்துடன் வேகமாகப் புறப்படாமல் இருந்தான், எனவே அந்த இரண்டு தேவதூதர்கள் அவன், அவனது மனைவி, குமாரத்திகள் ஆகியோரின் கையைப் பிடித்து அவர்களைப் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். லோத்தோடும் அவனது குடும்பத்தோடும் கர்த்தர் மிகவும் கருணை உடையவராக இருந்தார். எனவே, இரு தேவதூதர்களும் லோத்தையும் அவன் குடும்பத்தையும் பாதுகாப்பாக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தபின்னர் தூதர்களில் ஒருவன், “இப்போது உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போங்கள். இந்நகரத்தைத் திரும்பிப் பார்க்காதீர்கள். இந்தச் சமவெளியில் எங்கும் நிற்காதீர்கள். மலைக்குப் போய்ச் சேரும்வரை ஓடுங்கள். இடையில் நின்றால் நகரத்தோடு நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான். ஆனால் லோத்து அந்த இருவரிடமும், “ஐயா, அவ்வளவு தூரத்துக்கு ஓடும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். உங்கள் சேவகனாகிய என் மீது நீங்கள் மிகவும் இரக்கம் வைத்திருக்கிறீர்கள். என்னைக் காப்பாற்ற கருணையுடன் இருக்கிறீர்கள். ஆனால் மலைவரை என்னால் ஓட முடியாது. நான் மரித்துப்போய்விட வாய்ப்புண்டு. அருகில் ஒரு சிறிய நகரம் உள்ளது. என்னை அந்நகரத்திற்கு ஓடிப்போகவிடுங்கள். அந்த அளவுக்கு என்னால் ஓடி என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றான். அதற்கு தேவதூதன், “நல்லது, அவ்வாறு செய்ய உன்னை அனுமதிக்கிறேன். நான் அந்நகரத்தை அழிக்கமாட்டேன். ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்) சூரியன் உதயமானபோது லோத்து சோவார் நகரத்திற்குள் நுழைந்தான். அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கோமோராவை அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்து, அந்த நகரங்களையும் அதன் முழு சமவெளியையும், அங்கிருந்த செடிகளையும், ஜனங்களையும் அழித்துவிட்டார். அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள். அதே நாள் அதிகாலையில், ஆபிரகாம் எழுந்து கர்த்தரை தொழுதுகொள்ளும் இடத்துக்குச் சென்றான். அவன் அங்கிருந்து சோதோம், கொமோரா நகரங்கள் இருக்கும் திசையையும், அதன் சமவெளியையும் பார்த்தபோது அங்கிருந்து புகை எழும்புவதைக் கண்டான். அது பெரிய நெருப்பினால் ஏற்படும் புகைபோல் தோன்றியது. தேவன் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களை அழித்துவிட்டார். அப்போது அவர் ஆபிரகாமை நினைத்து, ஆபிரகாமின் உறவினனான லோத்தை அழிக்காமல் விட்டார். பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்குள் லோத்து வாழ்ந்துகொண்டிருந்த அவ்விடங்களை அழிக்கும் முன்பு லோத்தை தேவன் வெளியேற்றினார். சோவாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது குமாரத்திகளும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர். ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை. எனவே, நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்குச் சந்ததி உண்டாக நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றாள். அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவு கொண்டாள். லோத்துவுக்குத் தன் குமாரத்தி தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான். மறுநாள் மூத்தவள் இளையவளிடம்: “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவு கொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவுகொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும்” என்றாள். அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். லோத்து மதுவைக் குடித்திருந்தபடியால் அவள் படுத்ததையும், எழுந்து போனதையும் அறியாமலிருந்தான். லோத்தின் இரு குமாரத்திகளும் கர்ப்பமுற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை. மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான். இளையவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு அவள் பென்னம்மி என்று பெயரிட்டாள். அவன் அம்மோன் ஜனங்களுக்குத் தந்தை ஆனான்.

ஆதியாகமம் 19:15-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே, உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப் பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன். அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன். தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக் கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார். பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப்பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்: அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். மூத்தவள் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். இளையவளும் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.