ஆதி 19:15-38

ஆதி 19:15-38 IRVTAM

விடியற்காலமானபோது அந்தத் தூதர்கள் லோத்தை நோக்கி: “பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாமலிருக்க எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டுபோ” என்று சொல்லி, அவனை அவசரப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, யெகோவா அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவனுடைய மனைவியின் கையையும், அவனுடைய இரண்டு மகள்களின் கையையும் பிடித்து, அவர்களைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: “உன் உயிர் தப்ப ஓடிப்போ, திரும்பிப் பார்க்காதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாமலிருக்க மலைக்கு ஓடிப்போ” என்றார். அதற்கு லோத்து: “அப்படியல்ல ஆண்டவரே, உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்னுடைய உயிரைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக தெரியச்செய்தீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் இறந்துபோவேன். அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கு ஓடிப்போக அது அருகில் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது; என் உயிர்பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே” என்றான். அதற்கு அவர்: “நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடி, இந்த விஷயத்திலும் உனக்கு தயவுசெய்தேன். விரைவாக அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேரும்வரை நான் ஒன்றும் செய்யமுடியாது” என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் எனப்பட்டது. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. அப்பொழுது யெகோவா சோதோமின் மேலும் கொமோராவின்மேலும், யெகோவாவாலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் பொழியச்செய்து, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் அனைத்து மக்களையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள். விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் யெகோவாவுக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை, சூளையின் புகையைப்போல எழும்பினது. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடும்போது, லோத்தை அந்த அழிவிலிருந்து தப்பிச்செல்லும்படி அனுப்பிவிட்டார். பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடுகூட அவனுடைய இரண்டு மகள்களும் மலையிலே தங்கினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு மகள்களும் ஒரு குகையிலே குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: “நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடு இணைய பூமியிலே ஒரு மனிதனும் இல்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடு உறவுகொள்வோம் வா” என்றாள். அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடு உறவுகொண்டாள்: அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: “நேற்று ராத்திரி நான் தகப்பனோடு உறவுகொண்டேன்; இன்று இரவும் மதுவைக் குடிக்கக்கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீயும் போய் அவரோடு உறவுகொள்” என்றாள். அப்படியே அன்று இரவிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடு உறவுகொண்டாள்; அவள் உறவுகொண்டதையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். இந்த விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். மூத்தவள் ஒரு மகனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். இளையவளும் ஒரு மகனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பெயரிட்டாள்; அவன் இந்த நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் வம்சத்தாருக்குத் தகப்பன்.