ஆதியாகமம் 13:1-9

ஆதியாகமம் 13:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகையால், ஆபிராம் தன் மனைவியுடனும் தன் எல்லா உடைமைகளுடனும், எகிப்திலிருந்து நெகேப்புக்குப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் வளர்ப்பு மிருகங்களையும், தங்கத்தையும் வெள்ளியையும் கொண்ட பெரிய செல்வந்தனாக இருந்தான். அவன் நெகேப்பிலிருந்து இடம்விட்டு இடம்பெயர்ந்து பெத்தேலுக்கு வந்து, அங்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் தான் முன்பு கூடாரம் போட்டிருந்த இடத்துக்கு வந்தான். அவன் தான் முதலாவதாகப் பலிபீடத்தைக் கட்டியிருந்த இடத்துக்குச் சென்று, அங்கே ஆபிராம் யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். ஆபிராமுடன் பயணம் செய்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் இருவரது உடைமைகளும் ஏராளமாய் இருந்தபடியால், அவர்கள் சேர்ந்து வாழ அங்கிருந்த நிலவளம் போதாமல் இருந்தது. அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள். இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும் இடையிலோ அல்லது எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையிலோ சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள். இதோ நாடு முழுவதும் உனக்கு முன்பாக இருக்கிறது அல்லவா? நாம் இருவரும் பிரிந்து போவோம். நீ இடது பக்கம் போனால், நான் வலதுபக்கம் போவேன்; நீ வலதுபக்கம் போனால் நான் இடது பக்கம் போவேன்” என்றான்.

ஆதியாகமம் 13:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள். ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான். அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள். அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான்.

ஆதியாகமம் 13:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான். ஆபிராம் மிகவும் செல்வந்தனாக இருந்தான். அவனிடம் ஏராளமான மிருகங்களும் தங்கமும் வெள்ளியும் இருந்தன. ஆபிராம் தொடர்ந்து பயணம் செய்து பாலைவனத்தை விட்டு பெத்தேலுக்குச் சென்று, பெத்தேல் நகரத்திற்கும் ஆயி நகரத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் தங்கினான். அது ஏற்கெனவே அவனும் அவன் குடும்பத்தாரும் தங்கிய இடமாகும். இங்கு தான் ஆபிராம் பலிபீடம் அமைத்திருந்தான். எனவே, ஆபிராம் கர்த்தரை அந்த இடத்தில் தொழுதுகொண்டான். இந்த நேரத்தில் லோத்தும் ஆபிராமோடு பயணம் செய்துகொண்டிருந்தான். லோத்துக்கும் நிறைய மிருகங்களும் கூடாரங்களும் இருந்தன. ஆபிராமிடமும் லோத்திடமும் இருந்த மிருகங்கள் வாழ்கிற அளவிற்கு அந்த நிலம் அவ்வளவு போதுமானதாக இல்லை. அதோடு கானானியர்களும் பெரிசியரும் அவர்களுடன் அங்கு வாழ்ந்து வந்தனர். ஆபிராமின் மேய்ப்பர்களும் லோத்தின் மேய்ப்பர்களும் தங்களுக்குள் சண்டையிட்டனர். எனவே, ஆபிராம் லோத்திடம், “நம்மிருவருக்கும் இடையில் எவ்வித வாக்குவாதமும் வேண்டாம். உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இனி மேல் எந்த விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள். நாம் பிரிந்து விடுவோம். உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக்கொள். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றான்.

ஆதியாகமம் 13:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள். ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.