ஆதியாகமம் 13:1-9

ஆதியாகமம் 13:1-9 TCV

ஆகையால், ஆபிராம் தன் மனைவியுடனும் தன் எல்லா உடைமைகளுடனும், எகிப்திலிருந்து நெகேப்புக்குப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் வளர்ப்பு மிருகங்களையும், தங்கத்தையும் வெள்ளியையும் கொண்ட பெரிய செல்வந்தனாக இருந்தான். அவன் நெகேப்பிலிருந்து இடம்விட்டு இடம்பெயர்ந்து பெத்தேலுக்கு வந்து, அங்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் தான் முன்பு கூடாரம் போட்டிருந்த இடத்துக்கு வந்தான். அவன் தான் முதலாவதாகப் பலிபீடத்தைக் கட்டியிருந்த இடத்துக்குச் சென்று, அங்கே ஆபிராம் யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். ஆபிராமுடன் பயணம் செய்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் இருவரது உடைமைகளும் ஏராளமாய் இருந்தபடியால், அவர்கள் சேர்ந்து வாழ அங்கிருந்த நிலவளம் போதாமல் இருந்தது. அதனால் ஆபிராமின் மந்தை மேய்ப்பர்களுக்கும், லோத்தின் மந்தை மேய்ப்பர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உண்டாயின. அக்காலத்தில் கானானியரும், பெரிசியரும் அதே நாட்டில் குடியிருந்தார்கள். இதனால் ஆபிராம் லோத்திடம், “எனக்கும் உனக்கும் இடையிலோ அல்லது எனது மந்தை மேய்ப்பருக்கும் உனது மந்தை மேய்ப்பருக்கும் இடையிலோ சச்சரவுகள் வேண்டாம்; ஏனெனில் நாம் நெருங்கிய உறவினர்கள். இதோ நாடு முழுவதும் உனக்கு முன்பாக இருக்கிறது அல்லவா? நாம் இருவரும் பிரிந்து போவோம். நீ இடது பக்கம் போனால், நான் வலதுபக்கம் போவேன்; நீ வலதுபக்கம் போனால் நான் இடது பக்கம் போவேன்” என்றான்.