ஆதியாகமம் 11:1-8

ஆதியாகமம் 11:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது. மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள். அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள். பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள். மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார். யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார். அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார்.

ஆதியாகமம் 11:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார். அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார். அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.

ஆதியாகமம் 11:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். ஜனங்கள், “நாம் செங்கற்களைச் செய்து, நெருப்பில் அவற்றைச் சுடுவோம். அது பலமுடையதாகும்” என்றனர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டினர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர். மேலும் ஜனங்கள், “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்றனர். கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார். கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று.

ஆதியாகமம் 11:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.