ஆதியாகமம் 11:1-8

ஆதியாகமம் 11:1-8 TCV

அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது. மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள். அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள். பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள். மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார். யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார். அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார்.