எசேக்கியேல் 28:1-10
எசேக்கியேல் 28:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர்: “மனுபுத்திரனே, தீருவின் ஆளுநனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘நீ உன் இருதயத்தில், “நான் ஒரு தெய்வம்; கடல்களின் நடுவே ஒரு தெய்வ அரியணையிலே நான் வீற்றிருக்கிறேன்” என பெருமையில் பேசுகிறாய். ஒரு தெய்வத்தைப்போன்ற ஞானியென உன்னை நீ எண்ணிக்கொண்டாலும் நீ மனிதனேயன்றி தெய்வமல்ல; தானியேலைவிட நீ அறிவாளியோ? உனக்கு மறைவான இரகசியம் இல்லையோ? நீ உன் ஞானத்தினாலும், விளங்கும் ஆற்றலினாலும் உனக்காகச் செல்வத்தைச் சம்பாதித்தாய். தங்கத்தையும் வெள்ளியையும் உன் களஞ்சியங்களில் குவித்தாய்! வர்த்தகத்தில் உனக்குள்ள திறமையினால் உன் செல்வத்தை நீ பெருக்கிக்கொண்டாய்: உன் செல்வத்தால் உன் இருதயமும் மேட்டிமையடைந்தது. “ ‘ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘நீ ஒரு தெய்வத்தைப்போல் ஞானமுள்ளவன் என எண்ணியபடியால், நாடுகளில் இரக்கமே இல்லாத பிறநாட்டினரை நான் உனக்கு விரோதமாகக் கொண்டுவரப் போகிறேன். அவர்கள் உன் அழகுக்கும் அறிவுக்கும் விரோதமாகத் தங்கள் வாள்களை உருவி, துலங்குகின்ற உன் சிறப்பைக் குத்திப்போடுவார்கள். அவர்கள் உன்னைக் குழியிலே தள்ளுவார்கள். நீ கடல்களின் நடுவே ஒரு அவலமான சாவுக்கு உள்ளாவாய்! அப்பொழுது நீ, உன்னைக் கொலைசெய்வோர் முன்னிலையில் “நான் ஒரு தெய்வம்” என்று சொல்வாயோ? உன்னைக் கொலைசெய்வோர் கைகளில் நீ தெய்வமல்ல, மனிதனேதான். பிறநாட்டாரின் கைகளிலே நீ விருத்தசேதனம் அற்றவனைப்போல சாவாய். “நானே இதைச் சொன்னேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
எசேக்கியேல் 28:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல. இதோ, தானியேலைவிட நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. நீ உன்னுடைய ஞானத்தினாலும் உன்னுடைய புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன்னுடைய கருவூலங்களில் சேர்த்துக்கொண்டாய். உன்னுடைய வியாபாரத்தினாலும் உன்னுடைய மகா ஞானத்தினாலும் உன்னுடைய பொருளைப் பெருகச்செய்தாய்; உன்னுடைய இருதயம் உன்னுடைய செல்வத்தினால் மேட்டிமையானது. ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், இதோ, தேசங்களில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாக வரச்செய்வேன்; அவர்கள் உன்னுடைய ஞானத்தின் அழகுக்கு விரோதமாகத் தங்களுடைய வாள்களை உருவி, உன்னுடைய சிறப்புகளைக் குலைத்துப்போடுவார்கள். உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ கடலின் நடுவே கொலை செய்யப்பட்டு மரணமடைகிறவர்கள்போல் மரணமடைவாய். உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனிதனேயல்லாமல் தேவனல்லவே. மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் மரணமடைகிறதுபோல மரிப்பாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
எசேக்கியேல் 28:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, தீருவின் ராஜாவிடம் கூறு: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “‘நீ மிகவும் பெருமைகொண்டவன்! நீ சொல்கிறாய்: “நான் தெய்வம்! கடல்களின் நடுவே தெய்வங்கள் வாழும் இடங்களில் நான் அமருவேன்.” “‘நீ ஒரு மனிதன். தெய்வம் அல்ல! நீ தேவன் என்று மட்டும் நினைக்கிறாய். நீ தானியேலைவிட புத்திசாலி என்று நினைக்கிறாய்! உன்னால் எல்லா இரகசியங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறாய்! உனது ஞானத்தாலும், புத்தியினாலும் நீ உனது செல்வத்தை பெற்றாய். நீ பொன்னையும் வெள்ளியையும் உன் செல்வத்தில் சேர்த்துக்கொண்டாய். உன் ஞானத்தாலும் வியாபாரத்தாலும் செல்வத்தை வளரச்செய்தாய். அச்செல்வத்தால் இப்பொழுது பெருமைகொள்கிறாய். “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: தீரு, நீ ஒரு தேவனைபோன்று உன்னை நினைத்தாய். உனக்கு எதிராகச் சண்டையிட நான் அந்நியரை அழைப்பேன். அவர்கள், நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்! அவர்கள் தம் வாளை உருவி, உனது ஞானத்தால் கொண்டுவந்த அழகிய பொருட்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் உன் சிறப்பைக் குலைப்பார்கள். அவர்கள் உன்னைக் குழியிலே விழத் தள்ளுவார்கள். நீ கடலின் நடுவே கொலையுண்டு மரிக்கிற பயணிகளைப்போன்று மரிப்பாய். அம்மனிதன் உன்னைக் கொல்வான். “நான் ஒரு தேவன்” என்று இனியும் சொல்வாயா? இல்லை! அவன் தனது வல்லமையால் உன்னை அடைவான். நீ தேவனில்லை, மனிதன் என்பதை நீ அறிவாய். அந்நியர்கள் உன்னை வெளிநாட்டவரைப்போல நடத்தி கொலை செய்வார்கள்! அவை நிகழும், ஏனென்றால், நான் கட்டளையிட்டேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
எசேக்கியேல் 28:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல. இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய். உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள். உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய். உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே. மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் சாவதுபோல் சாவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.