எசேக்கியேல் 28:1-10

எசேக்கியேல் 28:1-10 TCV

யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர்: “மனுபுத்திரனே, தீருவின் ஆளுநனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘நீ உன் இருதயத்தில், “நான் ஒரு தெய்வம்; கடல்களின் நடுவே ஒரு தெய்வ அரியணையிலே நான் வீற்றிருக்கிறேன்” என பெருமையில் பேசுகிறாய். ஒரு தெய்வத்தைப்போன்ற ஞானியென உன்னை நீ எண்ணிக்கொண்டாலும் நீ மனிதனேயன்றி தெய்வமல்ல; தானியேலைவிட நீ அறிவாளியோ? உனக்கு மறைவான இரகசியம் இல்லையோ? நீ உன் ஞானத்தினாலும், விளங்கும் ஆற்றலினாலும் உனக்காகச் செல்வத்தைச் சம்பாதித்தாய். தங்கத்தையும் வெள்ளியையும் உன் களஞ்சியங்களில் குவித்தாய்! வர்த்தகத்தில் உனக்குள்ள திறமையினால் உன் செல்வத்தை நீ பெருக்கிக்கொண்டாய்: உன் செல்வத்தால் உன் இருதயமும் மேட்டிமையடைந்தது. “ ‘ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘நீ ஒரு தெய்வத்தைப்போல் ஞானமுள்ளவன் என எண்ணியபடியால், நாடுகளில் இரக்கமே இல்லாத பிறநாட்டினரை நான் உனக்கு விரோதமாகக் கொண்டுவரப் போகிறேன். அவர்கள் உன் அழகுக்கும் அறிவுக்கும் விரோதமாகத் தங்கள் வாள்களை உருவி, துலங்குகின்ற உன் சிறப்பைக் குத்திப்போடுவார்கள். அவர்கள் உன்னைக் குழியிலே தள்ளுவார்கள். நீ கடல்களின் நடுவே ஒரு அவலமான சாவுக்கு உள்ளாவாய்! அப்பொழுது நீ, உன்னைக் கொலைசெய்வோர் முன்னிலையில் “நான் ஒரு தெய்வம்” என்று சொல்வாயோ? உன்னைக் கொலைசெய்வோர் கைகளில் நீ தெய்வமல்ல, மனிதனேதான். பிறநாட்டாரின் கைகளிலே நீ விருத்தசேதனம் அற்றவனைப்போல சாவாய். “நானே இதைச் சொன்னேன்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”