யாத்திராகமம் 5:1-9

யாத்திராகமம் 5:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போகவிடு என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள். அதற்குப் பார்வோன், “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களைப் போகவிட அவர் யார்? எனக்கு யெகோவாவைத் தெரியாது, நான் இஸ்ரயேலரைப் போகவிடமாட்டேன்” என்றான். அப்பொழுது அவர்கள், “எபிரெயரின் இறைவன் எங்களைச் சந்தித்திருக்கிறார். இப்பொழுது நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்து, இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிசெலுத்தும்படி எங்களைப் போகவிடும். இல்லாவிட்டால் கொள்ளைநோயினாலோ வாளினாலோ அவர் எங்களைத் தண்டிப்பார்” என்றார்கள். அதற்கு எகிப்தின் அரசன், “மோசே, ஆரோன் நீங்கள் ஏன் மக்களை வேலைசெய்வதிலிருந்து குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைக்குத் திரும்பிப்போங்கள்!” என்றான். மேலும் பார்வோன், “பாருங்கள், இப்பொழுது இந்த நாட்டில் உங்கள் மக்கள் பெருகியிருக்கிறார்கள்; அப்படியிருக்க நீங்கள் அவர்கள் வேலைசெய்வதைத் தடுக்கிறீர்களே!” என்றான். அன்றைய தினமே பார்வோன், அடிமைகளை நடத்தும் கண்காணிகளிடமும், மக்களுக்குப் பொறுப்பாயிருந்த தலைவர்களிடமும் கொடுத்த உத்தரவு இதுவே: “நீங்கள் இனிமேல் செங்கல் சுடுவதற்கு மக்களுக்கு வைக்கோல் கொடுக்கக்கூடாது; அவர்களே போய் வைக்கோலைச் சேகரித்து வரட்டும். ஆனால் நீங்கள் அவர்களிடம் முன்பு செய்த அளவு செங்கற்களைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளுங்கள்; அந்த அளவைக் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகள்; அதனால்தான் அவர்கள், ‘நாங்கள் போய் எங்கள் இறைவனுக்குப் பலிசெலுத்த அனுமதியும்’ என்று கூக்குரலிடுகிறார்கள். அந்த மனிதர்கள் தொடர்ந்து வேலைசெய்யும்படிக்கும், பொய்களை நம்பாதபடிக்கும் அவர்களுடைய வேலையை இன்னும் கடினமாக்குங்கள்.”

யாத்திராகமம் 5:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய்: “இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா வனாந்திரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என்னுடைய மக்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார்” என்றார்கள். அதற்குப் பார்வோன்: “நான் இஸ்ரவேலைப் போகவிடக் யெகோவாவின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? எனக்கு யெகோவாவை தெரியாது; நான் இஸ்ரவேலைப் போகவிடமாட்டேன்” என்றான். அப்பொழுது அவர்கள்: “எபிரெயர்களுடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்திரத்தில் மூன்றுநாட்கள் பயணமாக போய், எங்கள் தேவனாகிய யெகோவாவிற்கு பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாமலிருந்தால், அவர் கொள்ளைநோயையும், பட்டயத்தையும் எங்கள்மேல் வரச்செய்வார்” என்றார்கள். எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: “மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் மக்களைத் தங்களுடைய வேலைகளைவிட்டுக் கலையச்செய்கிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள்” என்றான். பின்னும் பார்வோன்: “இதோ, தேசத்தில் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதைவிட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே” என்றான். அன்றியும், அந்த நாளிலே பார்வோன் மக்களின் மேற்பார்வையாளர்களையும் அவர்களுடைய தலைவர்களையும் நோக்கி: “செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி மக்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும். அவர்கள் முன்பு செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்களுடைய தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள். அந்த மனிதர்கள்மேல் முன்பைவிட அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; அவர்கள் வீண்வார்த்தைகளைக் கேட்கவிடாதீர்கள்” என்று கட்டளையிட்டான்.

யாத்திராகமம் 5:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை கௌரவப்படுத்துவதற்கு என் ஜனங்களை நீ போகவிடு’ என்று கூறுகிறார்” என்றனர். ஆனால் பார்வோன், “யார் உங்கள் கர்த்தர்? நான் ஏன் அவருக்குக் கீழ்ப்படியவேண்டும்? இஸ்ரவேலரை நான் ஏன் போக அனுமதிக்கவேண்டும்? இந்த கர்த்தர் யாரென்று கூட எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலரைப் போக அனுமதிக்கமாட்டேன்” என்றான். அப்போது ஆரோனும் மோசேயும், “எபிரெய ஜனங்களின் தேவன் எங்களுடன் பேசினார். பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செல்வதற்கு எங்களை அனுமதிக்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம். அங்கு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்துவோம். இதை நாங்கள் செய்யவில்லையென்றால், அவர் கோபங்கொண்டு நோய் அல்லது யுத்தத்தினால் நாங்கள் அழியும்படியாகச் செய்வார்” என்றனர். ஆனால் பார்வோன் அவர்களை நோக்கி, “மோசேயே, ஆரோனே, நீங்கள் வேலை செய்கிறவர்களைத் தொந்தரவு செய்கிறீர்கள். அவர்கள் அவர்களது வேலையைச் செய்யட்டும். உங்கள் வேலையை நீங்கள் கவனியுங்கள். ஏராளமான வேலையாட்கள் உள்ளார்கள். தம் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் அவர்களை தடுக்கிறீர்கள்” என்றான். அதே நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் இன்னும் கடினமாக உழைக்கும்படியாக பார்வோன் ஒரு கட்டளையிட்டான். அடிமைகளின் மேற்பார்வையாளர்களிடமும் எபிரெயர்களைக் கண்காணிப்பவர்களிடமும் பார்வோன், “ஜனங்களுக்கு எப்போதும் நீங்கள் வைக்கோலை கொடுத்து வந்தீர்கள். அவர்கள் அதைப் பயன்படுத்திச் செங்கல் செய்தார்கள். ஆனால் இப்போது செங்கல் செய்வதற்குத் தேவையான வைக்கோலை அவர்களே சேகரித்து வரும்படி கூறுங்கள். ஆனால் முன்னால் செய்தபடியே, அதே எண்ணிக்கை செங்கற்களை தினமும் அவர்கள் செய்யவேண்டும். அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர், எனவே தான் தங்களை அனுப்பும்படியாக அவர்கள் என்னைக் கேட்கிறார்கள். அவர்கள் செய்வதற்குப் போதிய வேலை இல்லை. எனவேதான் அவர்கள் தங்கள் தேவனுக்குப் பலிகள் செலுத்தவேண்டுமென என்னைக் கேட்கிறார்கள். எனவே இந்த மனிதர்கள் கடினமாக வேலை செய்யும்படிச் செய்யுங்கள். அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அப்போது அவர்களுக்கு மோசேயின் பொய்களை நம்புவதற்குப் போதிய நேரமிராது” என்றான்.

யாத்திராகமம் 5:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள். அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான். அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளைநோயும் பட்டயமும் எங்கள் மேல் வரப்பண்ணுவார் என்றார்கள். எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளை விட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான். பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான். அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி: செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும். அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள். அந்த மனிதர்மேல் முன்னிலும் அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; வீண்வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவிடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.