யாத்திராகமம் 5:1-9

யாத்திராகமம் 5:1-9 TCV

அதன்பின் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போகவிடு என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள். அதற்குப் பார்வோன், “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களைப் போகவிட அவர் யார்? எனக்கு யெகோவாவைத் தெரியாது, நான் இஸ்ரயேலரைப் போகவிடமாட்டேன்” என்றான். அப்பொழுது அவர்கள், “எபிரெயரின் இறைவன் எங்களைச் சந்தித்திருக்கிறார். இப்பொழுது நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்து, இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிசெலுத்தும்படி எங்களைப் போகவிடும். இல்லாவிட்டால் கொள்ளைநோயினாலோ வாளினாலோ அவர் எங்களைத் தண்டிப்பார்” என்றார்கள். அதற்கு எகிப்தின் அரசன், “மோசே, ஆரோன் நீங்கள் ஏன் மக்களை வேலைசெய்வதிலிருந்து குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைக்குத் திரும்பிப்போங்கள்!” என்றான். மேலும் பார்வோன், “பாருங்கள், இப்பொழுது இந்த நாட்டில் உங்கள் மக்கள் பெருகியிருக்கிறார்கள்; அப்படியிருக்க நீங்கள் அவர்கள் வேலைசெய்வதைத் தடுக்கிறீர்களே!” என்றான். அன்றைய தினமே பார்வோன், அடிமைகளை நடத்தும் கண்காணிகளிடமும், மக்களுக்குப் பொறுப்பாயிருந்த தலைவர்களிடமும் கொடுத்த உத்தரவு இதுவே: “நீங்கள் இனிமேல் செங்கல் சுடுவதற்கு மக்களுக்கு வைக்கோல் கொடுக்கக்கூடாது; அவர்களே போய் வைக்கோலைச் சேகரித்து வரட்டும். ஆனால் நீங்கள் அவர்களிடம் முன்பு செய்த அளவு செங்கற்களைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளுங்கள்; அந்த அளவைக் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகள்; அதனால்தான் அவர்கள், ‘நாங்கள் போய் எங்கள் இறைவனுக்குப் பலிசெலுத்த அனுமதியும்’ என்று கூக்குரலிடுகிறார்கள். அந்த மனிதர்கள் தொடர்ந்து வேலைசெய்யும்படிக்கும், பொய்களை நம்பாதபடிக்கும் அவர்களுடைய வேலையை இன்னும் கடினமாக்குங்கள்.”