யாத்திராகமம் 3:7-18

யாத்திராகமம் 3:7-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன். அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும். இப்பொழுதும் இஸ்ரயேலரின் அழுகுரல் எனக்கு எட்டியிருக்கிறது; எகிப்தியர் அவர்களை ஒடுக்கும் விதத்தைக் கண்டிருக்கிறேன். ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார். ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய், இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றான். அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்: நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள்” என்றார். அப்பொழுது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் முற்பிதாக்களின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றான். அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ” மேலும் இறைவன் மோசேயிடம், “ ‘ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். “இதுவே என்றென்றும் என் பெயராய் இருக்கிறது, இந்தப் பெயராலேயே நான் தலைமுறை தலைமுறையாக அழைக்கப்பட வேண்டும். “நீ போய், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களைக் கூட்டி அவர்களிடம், ‘ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா எனக்குக் காட்சியளித்துச் சொன்னதாவது: நான் உங்களில் கண்ணோக்கமாயிருந்து, எகிப்தில் உங்களுக்கு செய்யப்பட்டதைக் கண்டேன். உங்களை எகிப்திலுள்ள அவலத்திலிருந்து விடுவித்து, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களின் நாடான, பாலும் தேனும் நிரம்பிவழியும் செழிப்புள்ள நாட்டிற்குக் கொண்டுவருவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன்’ என்று சொல். “இஸ்ரயேலருடைய சபைத்தலைவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள். அதன்பின் நீயும் சபைத்தலைவர்களும் எகிப்தின் அரசனிடம் போய், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்திருக்கிறார். இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிகளை செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, பாலைவனத்துக்குப்போக எங்களுக்கு அனுமதி தாரும்’ என்று சொல்லுங்கள்.

யாத்திராகமம் 3:7-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம். நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல். அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.

யாத்திராகமம் 3:7-18 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது கர்த்தர், “எகிப்தில் என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். எகிப்தியர்கள் அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்களிடும் கூக் குரலை நான் கேட்டேன். அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன். நான் இப்போது இறங்கிப்போய், எகிப்தியரிடமிருந்து என் ஜனங்களை மீட்பேன். அந்நாட்டிலிருந்து தொல்லைகளில்லாமல் சுதந்திரமாக வாழத்தக்க ஒரு நல்ல நாட்டிற்கு அவர்களை அழைத்துச் செல்வேன். அந்நாடு நல்ல பொருட்களால் நிரம்பியதாகும். கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற ஜனங்கள் அந்நாட்டில் வாழ்கிறார்கள். நான் இஸ்ரவேல் ஜனங்களின் கூக்குரலைக் கேட்டேன். எகிப்தியர்கள் அவர்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியதையும் கண்டேன். நான், உன்னை இப்போது பார்வோனிடம் அனுப்புகிறேன். நீ போய் எனது ஜனங்களாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்து!” என்றார். ஆனால் மோசே தேவனிடம், “நான் பெரிய மனிதன் அல்ல, நான் எவ்வாறு பார்வோனிடம் போய், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தக் கூடும்?” என்று கேட்டான். தேவன், “நான் உன்னோடு இருப்பேன். எனவே நீ இதைச் செய்ய முடியும். நான் உன்னை அனுப்புகிறேன் என்பதற்கு இதுவே சான்றாகும்! ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்திய பிறகு, நீ வந்து இம்மலையின் மேல் என்னைத் தொழுவாய்!” என்றார். அப்போது மோசே தேவனை நோக்கி, “நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவன் என்னை அனுப்பினார்’ என்று கூறினால், அவர்கள், ‘அவரது பெயரென்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்லட்டும்?” என்று கேட்டான். அப்போது தேவன் மோசேயை நோக்கி, “அவர்களிடம் ‘இருக்கிறவராக இருக்கிறேன்’ என்று கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ போகும்போது, ‘இருக்கிறேன்’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார், என்று சொன்னார் என்று சொல்” என்றார். மோசேயிடம் தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார். மேலும் கர்த்தர், “போய் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒருமித்துக் கூடி வரச் செய்து அவர்களுக்கு, ‘உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யேகோவா, எனக்குத் தரிசனமளித்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரின் தேவன் என்னிடம் பேசினார்.’ கர்த்தர், ‘நான் உங்களை நினைவுகூர்ந்து, எகிப்தில் உங்களுக்கு நடந்ததையும் கண்டேன். எகிப்தில் நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடிவு செய்தேன். இப்போது கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் போன்ற வெவ்வேறு ஜனங்களுக்குச் சொந்தமான தேசத்திற்கு உங்களை அழைத்துச் செல்வேன். பல நல்ல பொருட்களால் நிரம்பிய தேசத்திற்கு உங்களை வழிநடத்துவேன்’ என்று சொன்னார்” என்று சொல். “மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய ராஜாவிடம் செல்லுங்கள். நீ ராஜாவிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள்.

யாத்திராகமம் 3:7-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார். அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம். நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு. அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்