யாத்திராகமம் 3:7-18

யாத்திராகமம் 3:7-18 TCV

பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன். அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும். இப்பொழுதும் இஸ்ரயேலரின் அழுகுரல் எனக்கு எட்டியிருக்கிறது; எகிப்தியர் அவர்களை ஒடுக்கும் விதத்தைக் கண்டிருக்கிறேன். ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார். ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய், இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றான். அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்: நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள்” என்றார். அப்பொழுது மோசே இறைவனிடம், “நான் இஸ்ரயேலரிடம் போய், ‘உங்கள் முற்பிதாக்களின் இறைவன் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று சொன்னால், அவர்கள் என்னிடம், ‘அவருடைய பெயர் என்ன?’ என்று கேட்பார்கள். அப்பொழுது நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றான். அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ” மேலும் இறைவன் மோசேயிடம், “ ‘ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்’ என்று இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். “இதுவே என்றென்றும் என் பெயராய் இருக்கிறது, இந்தப் பெயராலேயே நான் தலைமுறை தலைமுறையாக அழைக்கப்பட வேண்டும். “நீ போய், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களைக் கூட்டி அவர்களிடம், ‘ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா எனக்குக் காட்சியளித்துச் சொன்னதாவது: நான் உங்களில் கண்ணோக்கமாயிருந்து, எகிப்தில் உங்களுக்கு செய்யப்பட்டதைக் கண்டேன். உங்களை எகிப்திலுள்ள அவலத்திலிருந்து விடுவித்து, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களின் நாடான, பாலும் தேனும் நிரம்பிவழியும் செழிப்புள்ள நாட்டிற்குக் கொண்டுவருவதாக வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன்’ என்று சொல். “இஸ்ரயேலருடைய சபைத்தலைவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்கள். அதன்பின் நீயும் சபைத்தலைவர்களும் எகிப்தின் அரசனிடம் போய், ‘எபிரெயரின் இறைவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்திருக்கிறார். இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிகளை செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, பாலைவனத்துக்குப்போக எங்களுக்கு அனுமதி தாரும்’ என்று சொல்லுங்கள்.

யாத்திராகமம் 3:7-18 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்