யாத்திராகமம் 25:8-22

யாத்திராகமம் 25:8-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அதன்பின் அவர்கள் எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அமைக்கட்டும். நான் அவர்கள் மத்தியில் குடியிருப்பேன். இந்த இறைசமுகக் கூடாரத்தையும், அதன் எல்லா பணிமுட்டுகளையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்யவேண்டும். “அவர்கள் சித்தீம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யவேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கவேண்டும். நீ அந்தப் பெட்டியை, உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும். தங்கத்தினால் நான்கு வளையங்கள் வார்ப்பித்து, அவற்றை அதன் நான்கு கால்களிலும் பொருத்து. அவைகள் ஒரு பக்கத்தில் இரண்டும், மறுபக்கத்தில் இரண்டும் பொருத்தப்பட வேண்டும். சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைச் சுத்தத் தங்கத் தகட்டினால் மூடவேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு, அந்தக் கம்புகளை பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களில் மாட்டிவை. பெட்டியின் வளையங்களிலேயே அந்தக் கம்புகள் இருக்கவேண்டும். அவைகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டும். நான் உனக்குத் தரப்போகும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப் பெட்டிக்குள் வை. “சுத்தத் தங்கத்தினால் ஒரு கிருபாசனத்தைச் செய்யவேண்டும். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருக்க வேண்டும். அதன் இரு முனைகளிலும் தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்யவேண்டும். ஒரு கேருபீனை ஒரு முனையிலும், இன்னொன்றை மறு முனையிலும் செய்யவேண்டும். கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் கேருபீன்கள் அமையும்படி, ஒரே தகட்டினாலேயே அவற்றைச் செய்யவேண்டும். அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியபடி மேல்நோக்கி விரிந்திருக்க வேண்டும். அந்த கேருபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தபடி ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கவேண்டும். கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வை. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சியத்தை பெட்டிக்குள் வை. அங்கே கிருபாசனத்தின் மேலும் சாட்சிப்பெட்டியின்மேலும் இருக்கும் இரண்டு கேருபீன்களுக்கிடையில் நான் உன்னைச் சந்தித்து, இஸ்ரயேலருக்கான எல்லா கட்டளைகளையும் உன்னிடம் கொடுப்பேன்.

யாத்திராகமம் 25:8-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள். நான் உனக்குக் காண்பிக்கும் ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாப்பொருட்களின் மாதிரியின்படியும் அதைச் செய்யுங்கள். “சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும். அதை எங்கும் சுத்தப்பொன் தகட்டால் மூடு; நீ அதனுடைய உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதனால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் விளிம்பு உண்டாக்கி, அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து, சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு. அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை அந்தப் பெட்டியிலே வைக்கவேண்டும். “சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கட்டும். பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும். ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும். அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக. கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன்.

யாத்திராகமம் 25:8-22 பரிசுத்த பைபிள் (TAERV)

மேலும் தேவன், “ஜனங்கள் எனக்காக பரிசுத்த பிரகாரத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது நான் அவர்கள் மத்தியில் வாழ்வேன். பரிசுத்தக் கூடாரமும் அதிலுள்ள பொருட்களும் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை நான் உனக்குக் காட்டுவேன். நான் காட்டுகிற மாதிரியின்படியே எல்லாவற்றையும் தவறாமல் செய். “சீத்திம் மரத்தால் விசேஷமான பெட்டி ஒன்றைச் செய். இப்பரிசுத்த பெட்டி 45 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும், 27 அங்குல உயரமும் இருக்க வேண்டும். பெட்டியின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மூடுவதற்காக சுத்தமான தங்கத்தை உபயோகி. பெட்டியின் விளிம்புகளையும் தங்கத் தகட்டால் மூடவேண்டும். பெட்டியைத் தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய். பக்கத்திற்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் தங்க வளையங்களைப் போடு. பின் பெட்டியைத் தூக்கிச் செல்ல கழிகளைச் செய். இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்குத் தண்டுகளைச் செய். அவை சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு பொன்னால் மூடப்பட வேண்டும். பெட்டியின் ஓரங்களிலுள்ள வளையங்களில் அத்தண்டுகளை நுழைக்க வேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்த வேண்டும். இத்தண்டுகள் எப்போதும் பெட்டியின் வளையங்களில் இருக்க வேண்டும். தண்டுகளை அப்புறப்படுத்தக் கூடாது. “நான் உனக்கு உடன்படிக்கையைக் கொடுப்பேன். அந்த உடன்படிக்கையை இப்பெட்டியில் வை. பின் ஒரு கிருபாசனத்தை பசும் பொன்னால் செய். 45 அங்குல நீளமும் 27 அங்குல அகலமும் உள்ளதாக அதைச் செய். பின்பு தங்கத்தினால் இரண்டு கேருபீன்களைச் செய்து அவற்றை கிருபாசனத்தின் இரு முனைகளிலும் வை. தகடாய் அடித்த பொன்னால் அவற்றைச் செய். ஒரு கேருபீனை ஒரு முனையிலும் மற்ற கேருபீனை மறு முனையிலும் வை. இந்த கேருபீன்கள் ஒன்றாக இருக்கும்படி கிருபாசனத்தோடு இணை. பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும். அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூட வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்க வேண்டும். “நான் உனக்கு கொடுக்கும் உடன்படிக்கையைப் பரிசுத்த பெட்டிக்குள் வை. பெட்டியின் மீது கிருபாசனத்தை பொருத்து. நான் உன்னைச் சந்திக்கும்போது, உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கேருபீன்களின் மத்தியிலிருந்து உன்னோடு பேசுவேன். அங்கிருந்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எல்லாக் கட்டளைகளையும் கொடுப்பேன்.

யாத்திராகமம் 25:8-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக. சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. அதை எங்கும் பசும்பொன் தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி, அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து, சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய். அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப்பெட்டியிலே வைப்பாயாக. பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப்பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக. ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்ற கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய். அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக. கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.