யாத்திராகமம் 25:8-22

யாத்திராகமம் 25:8-22 TCV

“அதன்பின் அவர்கள் எனக்காக ஒரு பரிசுத்த இடத்தை அமைக்கட்டும். நான் அவர்கள் மத்தியில் குடியிருப்பேன். இந்த இறைசமுகக் கூடாரத்தையும், அதன் எல்லா பணிமுட்டுகளையும் நான் உனக்குக் காட்டும் மாதிரியின்படியே செய்யவேண்டும். “அவர்கள் சித்தீம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யவேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கவேண்டும். நீ அந்தப் பெட்டியை, உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும். தங்கத்தினால் நான்கு வளையங்கள் வார்ப்பித்து, அவற்றை அதன் நான்கு கால்களிலும் பொருத்து. அவைகள் ஒரு பக்கத்தில் இரண்டும், மறுபக்கத்தில் இரண்டும் பொருத்தப்பட வேண்டும். சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைச் சுத்தத் தங்கத் தகட்டினால் மூடவேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு, அந்தக் கம்புகளை பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களில் மாட்டிவை. பெட்டியின் வளையங்களிலேயே அந்தக் கம்புகள் இருக்கவேண்டும். அவைகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டும். நான் உனக்குத் தரப்போகும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப் பெட்டிக்குள் வை. “சுத்தத் தங்கத்தினால் ஒரு கிருபாசனத்தைச் செய்யவேண்டும். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருக்க வேண்டும். அதன் இரு முனைகளிலும் தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்யவேண்டும். ஒரு கேருபீனை ஒரு முனையிலும், இன்னொன்றை மறு முனையிலும் செய்யவேண்டும். கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் கேருபீன்கள் அமையும்படி, ஒரே தகட்டினாலேயே அவற்றைச் செய்யவேண்டும். அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியபடி மேல்நோக்கி விரிந்திருக்க வேண்டும். அந்த கேருபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தபடி ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கவேண்டும். கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வை. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சியத்தை பெட்டிக்குள் வை. அங்கே கிருபாசனத்தின் மேலும் சாட்சிப்பெட்டியின்மேலும் இருக்கும் இரண்டு கேருபீன்களுக்கிடையில் நான் உன்னைச் சந்தித்து, இஸ்ரயேலருக்கான எல்லா கட்டளைகளையும் உன்னிடம் கொடுப்பேன்.