யாத்திராகமம் 18:13-23

யாத்திராகமம் 18:13-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் மோசே இஸ்ரயேலரின் நீதிபதியாகப் பணிசெய்ய தனது இருக்கையில் உட்கார்ந்தான். காலையிலிருந்து, மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றார்கள். மோசே இஸ்ரயேலருக்குச் செய்யும் எல்லாவற்றையும் கண்ட மோசேயின் மாமன் அவனிடம், “மக்களுக்கு நீ செய்யும் காரியம் என்ன? மக்கள் காலைமுதல் மாலைவரை உன்னைச் சுற்றி நிற்க நீ ஏன் தனியாக நீதிபதியாய் இருக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு மோசே தன் மாமனிடம், “மக்கள் தங்கள் பிரச்சனைக்கு இறைவனின் திட்டத்தை அறிந்துகொள்ளவே என்னிடம் வருகிறார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகிறார்கள். அப்பொழுது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயந்தீர்த்து இறைவனின் விதிமுறைகளையும், அவருடைய சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்றான். அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல; இப்படிச் செய்வதினால் நீயும், உன்னிடத்தில்வரும் இந்த மக்களும் களைத்துச் சோர்ந்து போவீர்கள். இந்த வேலை உனக்கு மிகவும் கடினமானது. இதைத் தனியே செய்ய உன்னால் முடியாது. இப்பொழுது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை அவரிடம் கொண்டுபோக வேண்டும். நீ அவர்களுக்கு இறைவனின் விதிமுறைகளையும், சட்டங்களையும் போதிக்கவேண்டும். அவர்கள் வாழவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய கடமைகளையும் அவர்களுக்குக் காட்டவேண்டும். ஆகவே இஸ்ரயேலருக்குள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்கவேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், நீதியற்ற ஆதாயத்தை வெறுக்கிற நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும். இவர்களை எல்லா வேளைகளிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணிசெய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கஷ்டமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயந்தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு உன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதால் உனது சுமை இலகுவாகும். இறைவன் கட்டளையிடுகிறவிதமாக இதை நீ செய்தால், அந்த வேலைப்பளுவை உன்னால் சமாளிக்க முடியும். இந்த மக்களும் திருப்தியுடன் தங்கள் வீடுகளுக்குப் போவார்கள்” என்றான்.

யாத்திராகமம் 18:13-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள். மக்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: “நீர் மக்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் தனியாக உட்கார்ந்திருக்கவும், மக்கள் எல்லோரும் காலை துவங்கி மாலைவரை உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது ஏன்” என்றான். அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: “தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான். அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது. இப்பொழுது என்னுடைய சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடு இருப்பார், நீர் தேவசந்நிதியிலே மக்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடம் கொண்டுபோய்; கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும். அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும். இப்படி நீர் செய்வதும், இப்படி தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே சுமக்கமுடியும்; இந்த மக்கள் எல்லோரும் தாங்கள் போகும் இடத்திற்குச் சுகமாகப் போய்ச் சேரலாம்” என்றான்.

யாத்திராகமம் 18:13-23 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள், ஜனங்களை நியாயந்தீர்க்கும் விசேஷ வேலை மோசேக்கு இருந்தது. நாள் முழுவதும் மோசேக்கு முன்னால் காலை முதல் மாலைவரை ஜனங்கள் கூடி நின்றனர். மோசே ஜனங்களை நியாயந்தீர்ப்பதை எத்திரோ பார்த்தான். அவன், “ஏன் இவ்வாறு செய்கிறாய்? ஏன் நீ மட்டும் நியாயந்தீர்க்க வேண்டும்? ஏன் நாள் முழுவதும் ஜனங்கள் உன்னிடம் வந்துகொண்டிருக்கின்றனர்?” என்று கேட்டான். மோசே அவனது மாமனாரை நோக்கி: “ஜனங்கள் என்னிடம் வந்து, அவர்களின் பிரச்சனைகளைப்பற்றிய தேவனின் முடிவைக் கேட்டறிந்து சொல்லுமாறு என்னைக் கேட்கிறார்கள். ஜனங்கள் மத்தியில் விவாதம் எழுந்தால் அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எந்த மனிதன் சரியாகச் செயல்படுகிறான் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வகையில் நான் ஜனங்களுக்கு தேவனின் சட்டங்களையும், போதனைகளையும் கற்பிக்கிறேன்” என்றான். ஆனால் மோசேயின் மாமனார் அவனை நோக்கி, “இதைச் செய்யும் வழி இதுவல்ல, நீ ஒருவனே செய்வதற்கு இது பழுவான வேலையாகும். இவ்வேலையை நீ ஒருவனே செய்ய முடியாது. அது உன்னைக் களைப்படையச் செய்யும். ஜனங்களும் சோர்ந்து போகிறார்கள்! இப்போது நான் சொல்வதைக் கேள். நான் உனக்குச் சில அறிவுரைகளைக் கூறுவேன். தேவன் உன்னோடிருக்கும் பொருட்டு நான் ஜெபம் செய்கிறேன். ஜனங்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து நீ கேட்கவேண்டும், இவற்றைக் குறித்துத் தொடர்ந்து நீ தேவனிடம் பேச வேண்டும். நீ தேவனின் சட்டங்களையும் போதனைகளையும் ஜனங்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். சட்டங்களை மீறக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிடு. தக்க நெறியில் நடக்குமாறு அவர்களுக்குக் கூறு. என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்குக் கூறு. ஆனால் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பதற்காகச் சிலரை நீ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் வேண்டும். “உன் நம்பிக்கைக்குரிய நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள். அம்மனிதர்கள் தேவனை மதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். பணத்திற்காக தங்கள் முடிவுகளை மாற்றாத மனிதர்களைத் தெரிந்துகொள். ஜனங்களுக்குத் தலைவர்களாக அவர்களை நியமித்துவிடு. 1,000 ஜனங்களுக்கும், 100 ஜனங்களுக்கும், 50 ஜனங்களுக்கும், 10 பேருக்கும் கூட தலைவர்கள் இருக்கட்டும். இந்த அதிகாரிகள் ஜனங்களை நியாயந்தீர்க்கட்டும். மிக முக்கியமான வழக்கிருந்தால் அவர்கள் உன்னிடம் வரட்டும், நீ என்ன செய்வதென முடிவெடுக்கலாம். ஆனால் மற்ற வழக்குகளில் இம்மனிதர்கள் உனது வேலையைப் பகிர்ந்துகொள்ளட்டும். இப்படி ஜனங்களை வழி நடத்துவது உனக்கு எளிதாகும். தேவ தயவால் நீ இவற்றைச் செய்தால், நீ உனது பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அதே நேரத்தில் ஜனங்களும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டவர்களாய் வீடு திரும்ப முடியும்” என்றான்.

யாத்திராகமம் 18:13-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள். ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான். அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள். அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான். அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது. இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்; கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும். அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும். இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.