யாத்திராகமம் 18
18
எத்திரோ மோசேயை சந்தித்தல்
1இறைவன் மோசேக்கும் தம் மக்களான இஸ்ரயேலருக்கும் செய்தவற்றை மீதியானின் ஆசாரியனான மோசேயின் மாமன் எத்திரோ கேள்விப்பட்டான். அத்துடன் எகிப்திலிருந்து யெகோவா அவர்களை எவ்வாறு வெளியே கொண்டுவந்தார் என்பதையும் கேள்விப்பட்டான்.
2மோசேயின் மாமன் எத்திரோ, மோசேயால் அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி சிப்போராளையும், 3அவனுடைய இரு மகன்களையும் ஏற்றுக்கொண்டான். மோசே, நான் அயல்நாட்டில் ஒரு அயல்நாட்டினர் என்று சொல்லி ஒரு மகனுக்கு கெர்சோம்#18:3 கெர்சோம் என்றால் அயல்நாட்டினர் என்று அர்த்தம். என்று பெயரிட்டிருந்தான். 4என் முற்பிதாக்களின் இறைவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் வாளுக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி மற்றவனுக்கு எலியேசர்#18:4 எலியேசர் என்றால் என் இறைவன் என் துணை என அர்த்தம். என்று பெயரிட்டிருந்தான்.
5இப்பொழுது மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் மகன்களையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு பாலைவனத்துக்கு வந்தான். மோசே இறைவனின் மலையருகே முகாமிட்டிருந்தான். 6“உம்முடைய மாமனாகிய எத்திரோவாகிய நான் உம்முடைய மனைவியுடனும், அவளுடைய இரு மகன்களுடனும் உம்மிடத்திற்கு வருகிறேன்” என்று எத்திரோ மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
7எனவே மோசே தன் மாமனைச் சந்திப்பதற்காக போய், அவனை வணங்கி முத்தமிட்டான். அவர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தி, பின்பு மோசேயின் கூடாரத்திற்குள் போனார்கள். 8அப்பொழுது யெகோவா இஸ்ரயேலருக்காக பார்வோனுக்கும், எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும் மோசே தன் மாமனுக்குச் சொன்னான். வழியிலே தாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும், யெகோவா எப்படித் தங்களைக் காப்பாற்றினார் என்பதையும் சொன்னான்.
9இஸ்ரயேலரை எகிப்தியரின் கைகளிலிருந்து தப்புவித்து, அவர்களுக்கு யெகோவா செய்த நன்மைகள் எல்லாவற்றையும் கேள்விப்பட்ட எத்திரோ மகிழ்ச்சியடைந்தான். 10அப்பொழுது எத்திரோ, “யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் உன்னையும் இஸ்ரயேலரையும் எகிப்தியரின் கைகளிலிருந்தும், பார்வோனின் கைகளிலிருந்தும் தப்புவித்தாரே. 11‘எல்லா தெய்வங்களையும்விட யெகோவாவே பெரியவர்’ என்பதை நான் இப்பொழுது அறிந்துகொண்டேன். ஏனெனில், இஸ்ரயேலரை இறுமாப்பாய் நடத்தியவர்களுக்கு அவர் இப்படிச் செய்தாரே” என்றான். 12மோசேயின் மாமன் எத்திரோ இறைவனுக்குத் தகன காணிக்கையையும் மற்றப் பலிகளையும் கொண்டுவந்தான். அப்பொழுது ஆரோனும் இஸ்ரயேலின் சபைத்தலைவர்களும் இறைவனுக்கு முன்பாக மோசேயின் மாமனுடன் அப்பம் சாப்பிடும்படி வந்தார்கள்.
13மறுநாள் மோசே இஸ்ரயேலரின் நீதிபதியாகப் பணிசெய்ய தனது இருக்கையில் உட்கார்ந்தான். காலையிலிருந்து, மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றார்கள். 14மோசே இஸ்ரயேலருக்குச் செய்யும் எல்லாவற்றையும் கண்ட மோசேயின் மாமன் அவனிடம், “மக்களுக்கு நீ செய்யும் காரியம் என்ன? மக்கள் காலைமுதல் மாலைவரை உன்னைச் சுற்றி நிற்க நீ ஏன் தனியாக நீதிபதியாய் இருக்கிறாய்?” என்று கேட்டான்.
15அதற்கு மோசே தன் மாமனிடம், “மக்கள் தங்கள் பிரச்சனைக்கு இறைவனின் திட்டத்தை அறிந்துகொள்ளவே என்னிடம் வருகிறார்கள். 16அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை என்னிடத்தில் கொண்டுவருகிறார்கள். அப்பொழுது நான் இரு பகுதியினருக்கும் இடையில் நியாயந்தீர்த்து இறைவனின் விதிமுறைகளையும், அவருடைய சட்டங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பேன்” என்றான்.
17அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல; 18இப்படிச் செய்வதினால் நீயும், உன்னிடத்தில்வரும் இந்த மக்களும் களைத்துச் சோர்ந்து போவீர்கள். இந்த வேலை உனக்கு மிகவும் கடினமானது. இதைத் தனியே செய்ய உன்னால் முடியாது. 19இப்பொழுது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை அவரிடம் கொண்டுபோக வேண்டும். 20நீ அவர்களுக்கு இறைவனின் விதிமுறைகளையும், சட்டங்களையும் போதிக்கவேண்டும். அவர்கள் வாழவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய கடமைகளையும் அவர்களுக்குக் காட்டவேண்டும். 21ஆகவே இஸ்ரயேலருக்குள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்கவேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், நீதியற்ற ஆதாயத்தை வெறுக்கிற நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும். 22இவர்களை எல்லா வேளைகளிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணிசெய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கஷ்டமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயந்தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு உன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதால் உனது சுமை இலகுவாகும். 23இறைவன் கட்டளையிடுகிறவிதமாக இதை நீ செய்தால், அந்த வேலைப்பளுவை உன்னால் சமாளிக்க முடியும். இந்த மக்களும் திருப்தியுடன் தங்கள் வீடுகளுக்குப் போவார்கள்” என்றான்.
24மோசேயும் தன் மாமனுக்கு செவிகொடுத்து, அவன் சொன்ன எல்லாவற்றையும் செய்தான். 25மோசே இஸ்ரயேலரின் திறமையுள்ள மனிதரைத் தெரிந்து, அவர்களை மக்களுக்குத் தலைவர்களாகவும் ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் அதிகாரிகளாகவும் நியமித்தான். 26எல்லா வேளைகளிலும் அவர்கள் மக்களுக்கு நீதிபதிகளாகப் பணிசெய்தார்கள். கஷ்டமான வழக்குகளை அவர்கள் மோசேயிடம் கொண்டுவந்தார்கள். இலகுவான வழக்குகளை தாங்களே தீர்த்துக் கொண்டார்கள்.
27பின் மோசே தன் மாமன் எத்திரோவை வழியனுப்பினான், எத்திரோ தன் நாட்டுக்குத் திரும்பிப்போனான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
யாத்திராகமம் 18: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.