யாத்திராகமம் 16:4-18

யாத்திராகமம் 16:4-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “நான் வானத்திலிருந்து உங்களுக்கு அப்பத்தைப் பொழிவேன். இந்த மக்கள் ஒவ்வொரு நாளும் வெளியே போய் அந்நாளுக்குப் போதுமானதைச் சேர்க்கவேண்டும். அதன்மூலம் அவர்கள் என் அறிவுறுத்தலின்படி நடப்பார்களோ இல்லையோ என்று அவர்களைப் சோதித்துப் பார்ப்பேன். ஆறாம்நாளிலோ, மற்றநாட்களில் சேர்ப்பதுபோல் இருமடங்கு சேர்க்கவேண்டும். அந்த நாளிலே அவர்கள் எடுத்துவந்ததைத் தயாரித்து வைக்கவேண்டும்” என்றார். ஆகவே, மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலரிடம், “யெகோவாவே உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்தார் என்பதை இன்று மாலையில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள், காலையிலோ யெகோவாவின் மகிமையைக் காண்பீர்கள்; ஏனெனில் அவருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்பை அவர் கேட்டார். நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுப்பதற்கு நாங்கள் யார்?” என்றார்கள். மேலும் மோசே அவர்களிடம், “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்கு இறைச்சியையும், காலையில் வேண்டிய அளவு அப்பத்தையும் தருவார்; ஏனெனில் அவருக்கு எதிரான உங்கள் முறுமுறுப்பை யெகோவா கேட்டிருக்கிறார். அப்பொழுது நீங்கள் யெகோவாவே இதைத் தருகிறார் என்பதை அறிந்துகொள்வீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக அல்ல, யெகோவாவுக்கு எதிராகவே முறுமுறுக்கிறீர்கள். எங்களுக்கு எதிராய் முறுமுறுக்க நாங்கள் யார்?” என்றார்கள். அதன்பின் மோசே ஆரோனிடம் சொன்னதாவது: “நீ முழு இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமும், ‘எல்லோரும் யெகோவாவுக்கு முன்பாக வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறார்’ என்று சொல்” என்றான். ஆரோன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தோடும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் பாலைவனத்தை நோக்கிப் பார்த்தபோது, யெகோவாவின் மகிமை மேகத்திலே தோன்றியது. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நான் இஸ்ரயேலருடைய முறுமுறுப்புகளைக் கேட்டேன். நீ அவர்களிடம், ‘நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, காலையில் அப்பத்தினால் திருப்தியாவீர்கள். அப்பொழுது நானே உங்கள் இறைவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்’ என்று சொல்” என்றார். அந்த மாலை வேளையிலேயே காடைகள் வந்து அவர்கள் முகாமை மூடிக்கொண்டன. காலையில் முகாமைச் சுற்றி ஒரு பனிப்படலம் படிந்தது. பனி விலகிய பின்பு, தரையின்மீது உறைபனி போன்ற மெல்லிய துகள்கள் பாலைவனத்தில் காணப்பட்டன. அதை இஸ்ரயேலர் கண்டபோது, ஒருவரையொருவர் பார்த்து, “இது என்ன?” என்றார்கள். ஏனெனில், அது என்ன என்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அப்பொழுது மோசே அவர்களிடம், “இதுதான் நீங்கள் உண்பதற்காக யெகோவா கொடுத்திருக்கும் அப்பம். யெகோவா கட்டளையிட்டிருப்பது இதுவே: ‘ஒவ்வொருவரும் தான் சாப்பிடக்கூடியதைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் கூடாரத்தில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஒரு ஓமர் அளவுப்படி, ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளுங்கள்’ ” என்றான். இஸ்ரயேலர் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே செய்தார்கள். சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். அவர்கள் சேர்த்தவற்றை ஓமரால் அளந்த போது அதிகமாகச் சேர்த்தவனிடம் தேவைக்கதிகமாக இருந்ததில்லை, குறைவாகச் சேர்த்தவனிடம் போதாமல் இருக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தனக்குவேண்டிய அளவையே சேர்த்தார்கள்.

யாத்திராகமம் 16:4-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்; அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள். பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான். அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான். ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது. யெகோவா மோசேயை நோக்கி: “இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார். மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம். யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான். இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.

யாத்திராகமம் 16:4-18 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்கு அது உணவாகும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். இப்படி நான் அவர்களைச் சோதித்து, என் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “இன்றிரவு நீங்கள் கர்த்தரின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கர்த்தரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளைக் காலையில் கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்” என்றார்கள். மோசே தொடர்ந்து, “நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்” என்றான். மோசே ஆரோனை நோக்கி, “இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’” என்றான். ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும்போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்டேன். எனவே அவர்களிடம் ‘இன்றிரவு நீங்கள் இறைச்சி உண்பீர்கள், காலையில் உங்களுக்கு வேண்டிய ரொட்டி கிடைக்கும். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பலாம் என்று அறிவீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார். அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது. பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?” என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே. ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்” என்றான். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர். ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக்கொண்டான்.

யாத்திராகமம் 16:4-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார். அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்; விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள். பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திருப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான். அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான். ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம். கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான். இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள். பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.