யாத்திராகமம் 15:1-11

யாத்திராகமம் 15:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள். ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது. உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று. தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான். உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

யாத்திராகமம் 15:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது: “நான் யெகோவாவைப் பாடுவேன், அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். குதிரையையும், அதை ஓட்டியவனையும் அவர் கடலுக்குள் வீசியெறிந்தார். “யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார், அவரே என் இரட்சிப்புமானார். அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன். அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன். யெகோவா யுத்தத்தில் வீரர்; யெகோவா என்பதே அவரது பெயர். அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும் கடலுக்குள் தள்ளிவிட்டார். பார்வோனின் அதிகாரிகளில் சிறந்தவர்கள் செங்கடலில் அழிந்தார்கள். ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது; ஒரு கல்லைப்போல் ஆழத்திலே அவர்கள் அமிழ்ந்தார்கள். யெகோவாவே, உமது வலதுகரம் வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது. யெகோவாவே, உமது வலதுகரமே எதிரியை நொறுக்கியது. “உமது மாட்சிமையின் மகத்துவத்தினால் உம்மை எதிர்த்தவர்களை கீழே விழத்தள்ளினீர். உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்; அது அவர்களை வைக்கோலைப்போல் எரித்தது. உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்தது. பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப்போல உறுதியாய் நின்றன; ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்துபோயிற்று. பகைவன் பெருமையாக, ‘நான் பின்தொடர்வேன், அவர்களைப் பிடிப்பேன். நான் கொள்ளையைப் பங்கிடுவேன்; அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன். என் வாளை உருவுவேன், என் கை அவர்களை அழிக்கும்’ என பேசினான். ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர், கடல் அவர்களை மூடியது. அவர்கள் ஈயத்தைப் போல் பெரும் தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள். யெகோவாவே, தெய்வங்களுக்குள் உம்மைப்போல் யார் உண்டு? பரிசுத்தத்தில் மாட்சிமையும், மகிமையில் வியக்கத்தக்கவரும், அதிசயங்களையும் செய்கிற உம்மைப்போல் யார் உண்டு?

யாத்திராகமம் 15:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம். பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள். ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது. உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது. உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது. தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான். உம்முடைய காற்றை வீசச்செய்தீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். யெகோவாவே, தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

யாத்திராகமம் 15:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்: “நான் கர்த்தரைப் பாடுவேன்! அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார், அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார். கர்த்தரே எனது பலம். அவர் என்னை மீட்கிறார். நான் அவரைத் துதித்துப்பாடுவேன் கர்த்தரே எனது தேவன், நான் அவரைத் துதிப்பேன். கர்த்தர் எனது முற்பிதாக்களின் தேவன். நான் அவரை மதிப்பேன். கர்த்தர் யுத்தத்தில் சிறந்தவர், கர்த்தர் என்பது அவரது பெயர். பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார். பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர். ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது. அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர். “உமது வலது கரம் வியக்கத்தகும் வல்லமை உடையது. கர்த்தாவே, உமது வலது கரம் பகைவர்களைச் சிதறடித்தது. உமது பெருமையால் உமக்கு எதிராக நின்ற ஜனங்களை நீர் அழித்தீர். உமது கோபம் அவர்களை வைக்கோலில் பற்றும் நெருப்பைப் போல அழித்தது. உமது உக்கிரத்தின் பெருமூச்சால் தண்ணீர் மேலெழும்பிற்று, ஒழுகும் தண்ணீர் திடமான சுவராயிற்று. ஆழத்தின் அஸ்திபாரம்வரைக்கும் கடல் தண்ணீர் திடன் கொண்டது. “நான் தொடர்ந்து பிடிப்பேன், ‘நான் அவர்கள் செல்வத்தைப் பறிப்பேன். எனது வாளால் அவற்றை அபகரிப்பேன். நான் எல்லாவற்றையும் எனக்காக எடுப்பேன்’ என்று பகைவன் சொன்னான். ஆனால் நீர் அவர்கள் மேல் ஊதி, கடலால் அவர்களை மூடினீர். ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள். “கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ? இல்லை! உம்மைப்போன்ற தேவர்கள் எவருமில்லை! நீர் மேலான பரிசுத்தமானவர்! நீர் வியக்கத்தக்க ஆற்றல் வாய்ந்தவர்! நீர் மாபெரும் அற்புதங்கள் செய்பவர்!