யாத்திராகமம் 13:17-22

யாத்திராகமம் 13:17-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள். மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான். அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

யாத்திராகமம் 13:17-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பார்வோன் இஸ்ரயேலரைப் போகவிட்டபின்பு, பெலிஸ்தியரின் நாட்டின் வழி குறுகியதாக இருந்தபோதிலும், இறைவன் அவர்களை அதன் வழியாக நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “அவர்கள் யுத்தத்தை எதிர்கொண்டால், தங்கள் மனதை மாற்றி எகிப்திற்குத் திரும்பிவிடுவார்கள்” என இறைவன் சொன்னார். அதனால் இறைவன் மக்களை பாலைவனப் பாதைவழியே சுற்றி, செங்கடலை நோக்கி வழிநடத்தினார். இஸ்ரயேலர் ஆயுதம் அணிந்தவர்களாய், எகிப்திலிருந்து புறப்பட்டு யுத்தத்திற்கு ஆயத்தமாய் சென்றார்கள். மோசே யோசேப்பின் எலும்புகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றான். ஏனெனில், யோசேப்பு இஸ்ரயேலின் மகன்களிடம் இவ்வாறு செய்யும்படி சத்தியம் வாங்கியிருந்தான். அவன் அவர்களிடம், “இறைவன் நிச்சயமாய் உங்களுக்கு உதவிக்கு வருவார்; அப்பொழுது நீங்கள் எனது எலும்புகளை இந்த இடத்திலிருந்து உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும்” என்று சொல்லியிருந்தான். அவர்கள் சுக்கோத்திலிருந்து வெளியேறிய பின்பு, பாலைவனத்தின் அருகிலுள்ள ஏத்தாமிலே முகாமிட்டிருந்தார்கள். பகலில் அவர்கள் போகும் வழியாய் அவர்களுக்கு வழிகாட்ட, ஒரு மேகத்தூணாய் அவர்களுக்குமுன் யெகோவா சென்றார். இரவில் அவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக, நெருப்புத்தூணாய் அவர்களுக்குமுன் சென்றார். இப்படியாக அவர்களால் இரவும் பகலும் பயணம் செய்ய முடிந்தது. பகலில் மேகத்தூணும், இரவில் நெருப்புத்தூணும் மக்களுக்குமுன் தன் இடத்தைவிட்டு விலகவில்லை.

யாத்திராகமம் 13:17-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல், செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கோத்திரம் கோத்திரமாக புறப்பட்டுப்போனார்கள். மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான். அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணப்பட்டு, வனாந்திரத்தின் ஓரமாக ஏத்தாமிலே முகாமிட்டார்கள். அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார். பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

யாத்திராகமம் 13:17-22 பரிசுத்த பைபிள் (TAERV)

பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினான். பெலிஸ்தரின் நாட்டின் வழியாக ஜனங்கள் பயணம் செய்வதை கர்த்தர் அனுமதிக்கவில்லை. கடலின் ஓரமாக உள்ள அந்த சாலை குறுக்கு சாலையாக இருந்தது. ஆனால் கர்த்தர், “அவ்வழியே ஜனங்கள் பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் போரிட வேண்டியிருக்கும். அதனால் தங்கள் எண்ணத்தை மாற்றி, எகிப்திற்குத் திரும்பிப் போகக்கூடும்” என்றார். ஆகவே கர்த்தர் அவர்களை வேறு வழியாக நடத்திச் சென்றார். செங்கடல் அருகே பாலைவனத்தின் நடுவே அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது சண்டைக்கு ஆயத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர். யோசேப்பின் எலும்புகளை மோசே தன்னோடு எடுத்துச் சென்றான். (யோசேப்பு மரிக்கும் முன்னர் இஸ்ரவேலின் ஜனங்களிடம் இதைச் செய்ய வேண்டுமென வாக்குறுதி பெற்றிருந்தான். யோசேப்பு, “தேவன் உங்களை மீட்கும்போது, எனது எலும்புகளை எகிப்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள்” என்று கூறியிருந்தான்.) இஸ்ரவேல் ஜனங்கள் சுக்கோத்தை விட்டு நீங்கி ஏத்தாமில் தங்கினார்கள். ஏத்தாம் பாலைவனத்தினருகே இருந்தது. கர்த்தர் பாதை காட்டினார். பகலில், கர்த்தர் ஜனங்களை வழிநடத்த உயரமான ஒரு மேகத்தையும், இரவு வேளையில் வழிநடத்த உயரமான ஒரு நெருப்புதூணையும் பயன்படுத்தினார். அவர்கள் இரவிலும் பயணம் செய்வதற்கேதுவாக இந்த நெருப்பு வெளிச்சம் தந்தது. உயர்ந்த மேகம் பகல் முழுவதும், உயர்ந்த நெருப்பு தூண் இரவு முழுவதும் அவர்களோடிருந்தது.