யாத்திராகமம் 12:37-51
யாத்திராகமம் 12:37-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாகப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதுமன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க இராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய இராத்திரி இதுவே. மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம். பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம். அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம். அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள். அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம். சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார். இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
யாத்திராகமம் 12:37-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அன்று இஸ்ரயேல் மக்கள் ராமசேஸை விட்டு சுக்கோத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, ஆண்கள் மட்டும் ஆறுலட்சம் பேர் இருந்தார்கள். அவர்களுடன் அநேக வேறு மக்கள் கூட்டமும் போனார்கள்; ஏராளமான ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் அவர்களுடன் சென்றன. எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவினால் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டார்கள். அந்த மாவு புளிப்பில்லாதிருந்தது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கான உணவைத் தயாரிக்கும் முன்பே எகிப்திலிருந்து துரத்தப்பட்டார்கள். இஸ்ரயேலர் எகிப்தில் வாழ்ந்த காலம் நானூற்று முப்பது வருடங்களாகும். நானூற்று முப்பதாவது வருடம் முடிவடையும் கடைசி நாளிலே, யெகோவாவின் எல்லா கோத்திரப்பிரிவுகளும் எகிப்தைவிட்டு வெளியேறின. எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவதற்கு, அந்த இரவு யெகோவா விழித்திருந்தபடியால், யெகோவாவை மகிமைப்படுத்தும்படி, இந்த இரவில் தலைமுறைதோறும் இஸ்ரயேலர் விழித்திருக்க வேண்டும். யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது: “பஸ்காவுக்கான விதிமுறைகள் இவையே: “பிறநாட்டினன் ஒருவனும் அதைச் சாப்பிடக்கூடாது. எனினும், நீ விலைக்கு வாங்கிய எந்த அடிமையும் விருத்தசேதனம் செய்யப்பட்டபின் அதை சாப்பிடலாம். தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதை சாப்பிடக்கூடாது. “அது ஒரு வீட்டிற்குள்ளே சாப்பிடப்பட வேண்டும்; அந்த இறைச்சியில் சிறிதளவைக்கூட வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக்கூடாது. எலும்புகளில் எதையாவது முறிக்கவும் கூடாது. இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அதைக் கொண்டாடவேண்டும். “யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பும் உங்களுடன் வாழும் பிறநாட்டினன், தன் வீட்டிலுள்ள ஆண்களையெல்லாம் விருத்தசேதனம் செய்விக்க வேண்டும்; அதன்பின் அந்நாட்டு குடிமகனைப்போல், அதில் பங்குபெறலாம். ஆனால் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஒரு ஆணும் அதைச் சாப்பிடக்கூடாது. நாட்டுக் குடிமக்களுக்கும், உங்களுடன் குடியிருக்கும் பிறநாட்டினனுக்கும் ஒரே சட்டமே இருக்கவேண்டும்.” யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் கட்டளையிட்டபடி இஸ்ரயேலர் எல்லோரும் செய்தார்கள். யெகோவா அந்த நாளிலேயே இஸ்ரயேலரை அவர்களின் கோத்திரப்பிரிவுகளின்படியே, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
யாத்திராகமம் 12:37-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுக் கால்நடையாகப் பயணம்செய்து, சுக்கோத்திற்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் ஆண்களாக இருந்தார்கள். அவர்களுடன் கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை. இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருடங்கள். நானூற்றுமுப்பது வருடங்கள் முடிந்த அன்றைய நாளே யெகோவாவுடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்ததால், இது அவருக்கென்று முக்கியமாக அனுசரிக்கத்தக்க இரவானது; இஸ்ரவேல் சந்ததியார் எல்லோரும் தங்கள் தலைமுறைதோறும் யெகோவாவுக்கு முக்கியமாக அனுசரிக்கவேண்டிய இரவு இதுவே. மேலும், யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “பஸ்காவின் கட்டளையாவது, அந்நியனில் ஒருவனும் அதை சாப்பிடவேண்டாம். பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம். அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம். அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாப்பிடவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் அதை அனுசரிக்கவேண்டும். அந்நியன் ஒருவன் உன்னிடம் தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை அனுசரிக்கவேண்டும்; அவன் சொந்த தேசத்தில் பிறந்தவனாக இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் சாப்பிடவேண்டாம். சொந்த தேசத்தில் பிறந்தவனுக்கும் உங்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கட்டும்” என்றார். இப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். அன்றைக்கே யெகோவா இஸ்ரவேலை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.
யாத்திராகமம் 12:37-51 பரிசுத்த பைபிள் (TAERV)
ராமசேசிலிருந்து சுக்கோத்துக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்தனர். சமார் 6,00,000 புருஷர்கள் இருந்தனர். குழந்தைகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர். ரொட்டி மாவை புளிக்கவைக்க ஜனங்களுக்கு நேரம் இருக்கவில்லை. பயணத்திற்காக எந்த விசேஷ உணவையும் அவர்கள் தயாரிக்கவில்லை. எனவே புளிப்பற்ற ரொட்டியையே சுட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 430 ஆண்டுகள் வாழ்ந்திருந்தனர். சரியாக 430 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நாளில் கர்த்தரின் சேனைகள் எகிப்தை விட்டுச் சென்றனர். கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள். கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, “பஸ்கா பண்டிகையின் விதிகள் இவை: அந்நியன் யாரும் பஸ்காவை உண்ணக் கூடாது. ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம். ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது. “ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம். இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் இப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும். உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்குகொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப்போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப்படுவான். அவன் பஸ்கா உணவில் பங்குகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது. இந்த விதிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இஸ்ரவேலின் குடி குமாரன் அல்லது உங்கள் நாட்டில் வசிக்கும் இஸ்ரவேல் அல்லாத எல்லோருக்கும் விதிகள் பொதுவானதாகவே இருக்கும்” என்றார். கர்த்தர் மோசேக்கும், ஆரோனுக்கும் கொடுத்த கட்டளைகளின்படி இஸ்ரவேலின் ஜனங்கள் குழுக்களாக எல்லோரும் எகிப்தை விட்டுபோனார்கள். அதே நாளில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினார். ஜனங்கள் குழுக்களாக புறப்பட்டனர்.