அன்று இஸ்ரயேல் மக்கள் ராமசேஸை விட்டு சுக்கோத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, ஆண்கள் மட்டும் ஆறுலட்சம் பேர் இருந்தார்கள். அவர்களுடன் அநேக வேறு மக்கள் கூட்டமும் போனார்கள்; ஏராளமான ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் அவர்களுடன் சென்றன. எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவினால் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டார்கள். அந்த மாவு புளிப்பில்லாதிருந்தது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கான உணவைத் தயாரிக்கும் முன்பே எகிப்திலிருந்து துரத்தப்பட்டார்கள். இஸ்ரயேலர் எகிப்தில் வாழ்ந்த காலம் நானூற்று முப்பது வருடங்களாகும். நானூற்று முப்பதாவது வருடம் முடிவடையும் கடைசி நாளிலே, யெகோவாவின் எல்லா கோத்திரப்பிரிவுகளும் எகிப்தைவிட்டு வெளியேறின. எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவதற்கு, அந்த இரவு யெகோவா விழித்திருந்தபடியால், யெகோவாவை மகிமைப்படுத்தும்படி, இந்த இரவில் தலைமுறைதோறும் இஸ்ரயேலர் விழித்திருக்க வேண்டும். யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது: “பஸ்காவுக்கான விதிமுறைகள் இவையே: “பிறநாட்டினன் ஒருவனும் அதைச் சாப்பிடக்கூடாது. எனினும், நீ விலைக்கு வாங்கிய எந்த அடிமையும் விருத்தசேதனம் செய்யப்பட்டபின் அதை சாப்பிடலாம். தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதை சாப்பிடக்கூடாது. “அது ஒரு வீட்டிற்குள்ளே சாப்பிடப்பட வேண்டும்; அந்த இறைச்சியில் சிறிதளவைக்கூட வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக்கூடாது. எலும்புகளில் எதையாவது முறிக்கவும் கூடாது. இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அதைக் கொண்டாடவேண்டும். “யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பும் உங்களுடன் வாழும் பிறநாட்டினன், தன் வீட்டிலுள்ள ஆண்களையெல்லாம் விருத்தசேதனம் செய்விக்க வேண்டும்; அதன்பின் அந்நாட்டு குடிமகனைப்போல், அதில் பங்குபெறலாம். ஆனால் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஒரு ஆணும் அதைச் சாப்பிடக்கூடாது. நாட்டுக் குடிமக்களுக்கும், உங்களுடன் குடியிருக்கும் பிறநாட்டினனுக்கும் ஒரே சட்டமே இருக்கவேண்டும்.” யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் கட்டளையிட்டபடி இஸ்ரயேலர் எல்லோரும் செய்தார்கள். யெகோவா அந்த நாளிலேயே இஸ்ரயேலரை அவர்களின் கோத்திரப்பிரிவுகளின்படியே, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யாத்திராகமம் 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 12:37-51
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்