எஸ்தர் 9:1-19

எஸ்தர் 9:1-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளில், அரசனால் கட்டளையிடப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளிலே யூதர்களின் பகைவர்கள் யூதர்களை மேற்கொள்ளும்படி எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் மாறி தங்களைப் பகைத்தவர்களுக்கு மேலாக யூதர்களின் கை ஓங்கியது. யூதர்கள் தங்களை அழிக்கும்படி தேடியவர்களைத் தாக்குவதற்காக, அகாஸ்வேரு அரசனின் எல்லா நாடுகளிலும் உள்ள தங்கள் பட்டணங்களில் ஒன்றுகூடினார்கள். அவர்களை எதிர்த்து ஒருவனாலும் நிற்க முடியவில்லை. ஏனெனில், மற்ற எல்லா நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவர்களைக் குறித்துப் பயமடைந்திருந்தார்கள். நாடுகளின் எல்லா உயர்குடி மனிதரும், அரச பிரதிநிதிகளும், ஆளுநர்களும், அரசனின் நிர்வாகிகளும் யூதர்களுக்கு உதவி செய்தார்கள். ஏனெனில், மொர்தெகாயைப் பற்றிய பயம் அவர்களைப் பிடித்துக்கொண்டது. மொர்தெகாய் அரண்மனையில் முதன்மை பெற்றிருந்தான். அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது. அவன் அதிகம் அதிகமாய் வலிமையடைந்தான். யூதர்கள் தங்கள் எல்லாப் பகைவர்களையும் வாளினால் வெட்டி வீழ்த்தி, அவர்களைக் கொன்றொழித்து, தங்களை வெறுத்தவர்களுக்கு தாங்கள் விரும்பியபடி செய்தார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதர்களை யூதர்கள் கொன்றொழித்தார்கள். அத்துடன் அவர்கள் பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, பொராதா, அதலியா, அரிதாத்தா, பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்ஸாதா ஆகியோரையும் கொன்றார்கள். இந்த பத்துப்பேரும் யூதர்களின் பகைவனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானின் மகன்களாவர். ஆனாலும் அவர்கள் கொள்ளையிடத் தங்கள் கைகளை நீட்டவில்லை. சூசான் கோட்டைப் பட்டணத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்த நாளிலே அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர் சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதரைக் கொன்று ஒழித்துவிட்டார்கள். ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள். அரசனின் மீதியான மாகாணங்களிலும் அவர்கள் என்ன செய்திருக்கிறார்களோ, இப்பொழுதும் உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது உனக்கு வழங்கப்படும்” என்றான். அதற்கு எஸ்தர், “அரசருக்குப் பிரியமானால், இந்தக் கட்டளையை நாளைக்கும் செயல்படுத்த சூசானிலிருக்கிற யூதர்களுக்கு அனுமதிகொடும். ஆமானின் பத்து மகன்களின் உடல்களும் தூக்கு மரத்தில் தொங்கவிடப்படட்டும்” என்றாள். எனவே அரசன் இவ்விதம் செய்யப்படும்படி கட்டளையிட்டான். சூசானில் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் ஆமானின் பத்து மகன்களின் உடல்களையும் தொங்கவிட்டார்கள். ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளிலே சூசானிலுள்ள யூதர்கள் எல்லாம் ஒன்றாய் கூடிவந்து, சூசானில் முந்நூறு மனிதர்களைக் கொன்றார்கள். ஆனாலும் கொள்ளையிடும்படி அவர்கள் தங்கள் கைகளை நீட்டவில்லை. இதற்கிடையில் அரசனின் மாகாணங்களிலுள்ள மற்ற யூதர்கள் தங்களைப் பாதுகாக்கும்படிக்கும், தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களை விடுவிக்கும்படிக்கும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள். ஆனால் கொள்ளையிடும்படி தங்கள் கைகளை நீட்டவில்லை. இது ஆதார் மாதத்தில் பதிமூன்றாம் நாளிலே நடந்தது. அடுத்தநாள் அவர்கள் ஓய்ந்திருந்து அந்த நாளை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள். ஆயினும் சூசானிலிருந்த யூதர்கள் பதிமூன்றாம் நாளிலும், பதினான்காம் நாளிலும் சபைகூடினார்கள். பின்பு பதினைந்தாம்நாள் ஓய்ந்திருந்து அதை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள். அதனால்தான் கிராமங்களில் வாழும் கிராமப்புற யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளை, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை கொடுக்கின்ற, விருந்துண்டு மகிழும் ஒரு நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

எஸ்தர் 9:1-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதர்களின் பகைவர்கள் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலே, யூதர்களானவர்கள் தங்கள் பகைவர்களை மேற்கொள்ளும்படிக் காரியம் மாறுதலாக முடிந்தது. யூதர்கள் அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்கு தீங்கை கொண்டுவர முயற்சிசெய்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது; அவர்களைப்பற்றி எல்லா மக்களுக்கும் பயமுண்டாயிற்று. நாடுகளின் எல்லா அதிகாரிகளும், ஆளுநர்களும், பிரபுக்களும், ராஜாவின் நிர்வாகிகளும், யூதர்களுக்குத் துணையாக நின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயம் அவர்களைப் பிடித்தது. மொர்தெகாய் ராஜாவின் அரண்மனையில் பெரியவனாக இருந்தான்; அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவன் ஆனான். அப்படியே யூதர்கள் தங்களுடைய விரோதிகளையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று அழித்து, தங்களுக்கு விருப்பமானபடி தங்கள் பகைவர்களுக்குச் செய்தார்கள். யூதர்கள் சூசான் அரண்மனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று அழித்துப்போட்டார்கள். அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் யூதர்களுடைய எதிரியின் மகன்களான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, பொராதா, அதலியா, அரிதாத்தா, பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள். ஆனாலும் அவர்கள் கொள்ளையிடவில்லை. அன்றையதினம் சூசான் அரண்மனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜாவிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டது. அப்பொழுது ராஜா, ராணியாகிய எஸ்தரை நோக்கி: யூதர்கள் சூசான் அரண்மனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ, இப்போதும் உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன்னுடைய மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான். அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், இன்றையநாளின் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர்கள் நாளைக்கும் செய்யவும், ஆமானின் பத்து மகன்களின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்திரவிடவேண்டும் என்றாள். அப்படியே செய்யும்படி ராஜா உத்திரவு கொடுத்தான்; அதற்கு சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்து மகன்களுடைய உடல்களையும் தூக்கிப்போட்டார்கள். சூசானில் இருக்கிற யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையடிக்கத் தங்களுடைய கையை நீட்டவில்லை. ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்களுடைய உயிரைப் பாதுகாக்கவும், தங்கள் பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒன்றாகச்சேர்ந்து, தங்களுடைய எதிரிகளில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையடிக்கத் தங்களுடைய கையை நீட்டவில்லை. ஆதார் மாதத்தின் பதிமூன்றாம்தேதியிலே இப்படிச் செய்து, பதினான்காம்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். சூசானிலுள்ள யூதர்களோ, அந்த மாதத்தின் பதிமூன்றாந்தேதியிலும் பதினான்காம்தேதியிலும் ஏகமாகக்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். ஆதலால் மதில்களில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

எஸ்தர் 9:1-19 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆதார் என்னும் 12ஆம் மாதத்தின் 13வது நாள், ஜனங்கள் ராஜாவின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். அன்றுதான் யூதர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்க நம்பியிருந்த நாள். இப்பொழுது அந்த நிலைமாறி யூதர்கள் தம்மை வெறுத்த பகைவர்களைவிட பலமுள்ளவர்களானார்கள். யூதர்கள் அகாஸ்வேரு ராஜாவின் நாடுகளில் எல்லாம் ஒன்று கூடினர். நம்மை அழிக்க நினைத்தவர்களைத் தாக்க போதுமான பலமுடையவர்களாயினர். எனவே, அவர்களுக்கு எதிராக நிற்க எவருக்கும் பலமில்லை. அந்த ஜனங்கள் யூதர்களுக்குப் பயந்தனர். எல்லா மாகாணங்களின் அதிகாரிகளும், தலைவர்களும், ஆளுநர்களும், யூதர்களுக்கு உதவினார்கள். ஏனென்றால் அவர்கள் மொர்தெகாய்க்கும் பயந்தனர். ராஜாவின் அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். ராஜாவின் மாகாணங்களிலுள்ள அனைவரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும், மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான். யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற்கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள். யூதர்கள் சூசான் தலைநகரில் 500 பேரை கொன்றழித்தார்கள். யூதர்கள் கீழ்க்கண்டவர்களைக் கொன்றனர்: பர்சர்ன்தாத்தா, தல்போன், அஸ்பாதா, பொராதா, அதலியா, அரிதாத்தா, பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா, இவர்கள் ஆமானின் 10 குமாரர்கள். அம்மெதாத்தாவின் குமாரனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை. தலைநகரமான சூசானில் எத்தனை பேர் கொன்று அழிக்கப்பட்டனர் என்று ராஜா கேள்விப்பட்டான். எனவே, ராஜா எஸ்தர் இராணியிடம், “யூதர்கள் சூசானில் ஆமானின் 10 குமாரர்களையும் சேர்த்து 500 பேரை கொன்றுள்ளனர். இப்பொழுது வேறு மாகாணங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? எனக்குச் சொல், நான் அதனை நடத்துவேன். சொல் நான் அதனைச் செய்வேன்” என்றான். எஸ்தர், “அரசருக்கு விருப்பமானால், சூசானில் யூதர்கள் இதைப்போன்றே நாளையும் செய்ய அனுமதி கொடுக்கவேண்டும். ஆமானின் 10 குமாரர்களின் உடலையும் தூக்கில் தொங்கவிட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டாள். எனவே, ராஜா அந்த கட்டளையைக் கொடுத்தான். அந்தச் சட்டம் அடுத்த நாளும் இருந்தது. அவர்கள் ஆமானின் 10 குமாரர்களின் உடல்களை தொங்கவிட்டனர். சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 14வது நாளில் ஒன்று கூடினார்கள். அவர்கள் சூசானில் 300 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. அதே நேரத்தில் வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் ஒன்று கூடினார்கள். அதனால் தம்மைக் காத்துக்கொள்ளும் அளவு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் பகைவர்களைத் தாக்கமுடிந்தது. யூதர்கள் தம் பகைவரான 75,000 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. இது ஆதார் மாதத்தின் 13வது நாளில் நடைபெற்றது, 14வது நாள் அவர்கள் ஓய்வு எடுத்தனர். யூதர்கள் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறை நாளாக ஆக்கினார்கள். சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 13 மற்றும் 14ஆம் நாட்களில் ஒன்று கூடினார்கள். 15வது நாள் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் 15வது நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினர். எனவே, நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த யூதர்கள் 14வது நாளை பூரீம் விழாவாகக் கொண்டாடினார்கள். அதனை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினார்கள். அன்று விருந்தும் ஒருவர்கொருவர் அன்பளிப்பும் கொடுத்து மகிழ்ந்தனர்.

எஸ்தர் 9:1-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது. யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று. நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது. மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான். அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள். யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள். அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, பொராதா, அதலியா, அரிதாத்தா, பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள். ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான். அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாக வேண்டும் என்றாள். அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள். சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. ஆதார் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.