எஸ்தர் 9:1-19

எஸ்தர் 9:1-19 TCV

ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளில், அரசனால் கட்டளையிடப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளிலே யூதர்களின் பகைவர்கள் யூதர்களை மேற்கொள்ளும்படி எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நிலைமை முற்றிலும் மாறி தங்களைப் பகைத்தவர்களுக்கு மேலாக யூதர்களின் கை ஓங்கியது. யூதர்கள் தங்களை அழிக்கும்படி தேடியவர்களைத் தாக்குவதற்காக, அகாஸ்வேரு அரசனின் எல்லா நாடுகளிலும் உள்ள தங்கள் பட்டணங்களில் ஒன்றுகூடினார்கள். அவர்களை எதிர்த்து ஒருவனாலும் நிற்க முடியவில்லை. ஏனெனில், மற்ற எல்லா நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவர்களைக் குறித்துப் பயமடைந்திருந்தார்கள். நாடுகளின் எல்லா உயர்குடி மனிதரும், அரச பிரதிநிதிகளும், ஆளுநர்களும், அரசனின் நிர்வாகிகளும் யூதர்களுக்கு உதவி செய்தார்கள். ஏனெனில், மொர்தெகாயைப் பற்றிய பயம் அவர்களைப் பிடித்துக்கொண்டது. மொர்தெகாய் அரண்மனையில் முதன்மை பெற்றிருந்தான். அவனுடைய புகழ் எல்லா நாடுகளிலும் பிரபலமானது. அவன் அதிகம் அதிகமாய் வலிமையடைந்தான். யூதர்கள் தங்கள் எல்லாப் பகைவர்களையும் வாளினால் வெட்டி வீழ்த்தி, அவர்களைக் கொன்றொழித்து, தங்களை வெறுத்தவர்களுக்கு தாங்கள் விரும்பியபடி செய்தார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதர்களை யூதர்கள் கொன்றொழித்தார்கள். அத்துடன் அவர்கள் பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, பொராதா, அதலியா, அரிதாத்தா, பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்ஸாதா ஆகியோரையும் கொன்றார்கள். இந்த பத்துப்பேரும் யூதர்களின் பகைவனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானின் மகன்களாவர். ஆனாலும் அவர்கள் கொள்ளையிடத் தங்கள் கைகளை நீட்டவில்லை. சூசான் கோட்டைப் பட்டணத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அந்த நாளிலே அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர் சூசான் கோட்டைப் பட்டணத்தில் ஐந்நூறு மனிதரைக் கொன்று ஒழித்துவிட்டார்கள். ஆமானின் பத்து மகன்களையும் கொன்றுபோட்டார்கள். அரசனின் மீதியான மாகாணங்களிலும் அவர்கள் என்ன செய்திருக்கிறார்களோ, இப்பொழுதும் உனது விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உனது வேண்டுகோள் என்ன? அது உனக்கு வழங்கப்படும்” என்றான். அதற்கு எஸ்தர், “அரசருக்குப் பிரியமானால், இந்தக் கட்டளையை நாளைக்கும் செயல்படுத்த சூசானிலிருக்கிற யூதர்களுக்கு அனுமதிகொடும். ஆமானின் பத்து மகன்களின் உடல்களும் தூக்கு மரத்தில் தொங்கவிடப்படட்டும்” என்றாள். எனவே அரசன் இவ்விதம் செய்யப்படும்படி கட்டளையிட்டான். சூசானில் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் ஆமானின் பத்து மகன்களின் உடல்களையும் தொங்கவிட்டார்கள். ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளிலே சூசானிலுள்ள யூதர்கள் எல்லாம் ஒன்றாய் கூடிவந்து, சூசானில் முந்நூறு மனிதர்களைக் கொன்றார்கள். ஆனாலும் கொள்ளையிடும்படி அவர்கள் தங்கள் கைகளை நீட்டவில்லை. இதற்கிடையில் அரசனின் மாகாணங்களிலுள்ள மற்ற யூதர்கள் தங்களைப் பாதுகாக்கும்படிக்கும், தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களை விடுவிக்கும்படிக்கும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள். ஆனால் கொள்ளையிடும்படி தங்கள் கைகளை நீட்டவில்லை. இது ஆதார் மாதத்தில் பதிமூன்றாம் நாளிலே நடந்தது. அடுத்தநாள் அவர்கள் ஓய்ந்திருந்து அந்த நாளை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள். ஆயினும் சூசானிலிருந்த யூதர்கள் பதிமூன்றாம் நாளிலும், பதினான்காம் நாளிலும் சபைகூடினார்கள். பின்பு பதினைந்தாம்நாள் ஓய்ந்திருந்து அதை விருந்துகொண்டாடி மகிழும் ஒரு நாளாக்கினார்கள். அதனால்தான் கிராமங்களில் வாழும் கிராமப்புற யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளை, ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை கொடுக்கின்ற, விருந்துண்டு மகிழும் ஒரு நாளாகக் கொண்டாடுகிறார்கள்.