எஸ்தர் 4:9-17

எஸ்தர் 4:9-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான். அப்பொழுது எஸ்தர் ஆத்தாகினிடத்தில் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது: யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றபடி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள். மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

எஸ்தர் 4:9-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆத்தாகு திரும்பிப்போய் மொர்தெகாய் சொன்னதை எஸ்தருக்கு அறிவித்தான். அப்பொழுது எஸ்தர் ஆத்தாகுவிடம், மொர்தெகாயினிடத்தில் போய்ச் சொல்லும்படி அறிவுறுத்திச் சொன்னதாவது: “அரசனால் அழைக்கப்படாமல் அவருடைய உள் மண்டபத்துக்குள் அவரை நெருங்கி வருகிற, எந்த ஆணையோ பெண்ணையோ குறித்து, அரச சட்டம் ஒன்று உண்டு. அப்படி நெருங்கி வருகிற அந்த ஆள் கொல்லப்படவேண்டும் என்பதே அந்தச் சட்டம். அரசரின் எல்லா அதிகாரிகளும் அரசருடைய மாகாணத்திலுள்ள மக்களும் இதை அறிவார்கள். அரசன் தனது தங்கச் செங்கோலை அந்த ஆளிடம் நீட்டி, அவனுடைய உயிரைத் தப்புவித்தால் மட்டுமே அந்த ஆள் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கப்படுவான். நானோ அரசனிடம் போகும்படி அழைக்கப்பட்டு முப்பது நாட்கள் ஆகிவிட்டன” என்றாள். எஸ்தரின் வார்த்தைகள் மொர்தெகாய்க்கு அறிவிக்கப்பட்டபோது, மொர்தெகாய் ஆத்தாகுவிடம் சொல்லியனுப்பிய மறுமொழியாவது: “நீ அரசரின் வீட்டில் இருப்பதால், எல்லா யூதர்களிலுமிருந்து நீ மட்டும் தப்பிக்கொள்வாய் என்று எண்ணாதே. நீ இந்தக் காலத்தில் மவுனமாய் இருந்தால், யூதருக்கு விடுதலையும், மீட்பும் இன்னொரு இடத்திலிருந்து வரும். ஆனால் நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். இப்படிப்பட்ட ஒரு காலத்திற்காகத்தான், நீ அரச பதவிக்கு வந்திருக்கிறாயோ என்று யாருக்குத் தெரியும்.” அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும், “நீர் போய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுகூட்டி எனக்காக உபவாசம் பண்ணும். இரவும் பகலுமாக மூன்று நாட்களுக்கு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம். உங்களோடு நானும் எனது தோழிகளும் உபவாசம் பண்ணுவோம். இதைச் செய்து முடித்தபின் சட்டத்திற்கு எதிராய் இருந்தாலும் நான் அரசனிடம் போவேன். நான் அழிவதானால் அழிவேன்” என்று சொன்னாள். அப்படியே மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தரின் அறிவுறுத்தலின்படியெல்லாம் செய்துமுடித்தான்.

எஸ்தர் 4:9-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான். அப்பொழுது எஸ்தர் ஆத்தாகிடம் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது: யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவிடம் வந்தால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படி அவர்களுக்கு நேராக ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு சட்டமுண்டு, இது ராஜாவின் எல்லா வேலைக்காரர்களுக்கும், ராஜாவுடைய நாடுகளிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாட்களாக ராஜாவிடம் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள். மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாக இருந்தால், யூதருக்கு உதவியும் விடுதலையும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன்னுடைய தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: நீர் போய், சூசானில் இருக்கிற யூதர்களையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமலும் குடிக்காமலுமிருந்து, எனக்காக உபவாசம் இருங்கள்; நானும் என்னுடைய பணிவிடைப்பெண்களும் உபவாசம் இருப்போம்; இப்படியே சட்டத்தை மீறி, ராஜாவிடம் போவேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்தான்.

எஸ்தர் 4:9-17 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆத்தாகு எஸ்தரிடம் போய் மொர்தெகாய் சொன்னவற்றையெல்லாம் சொன்னான். பிறகு எஸ்தர் ஆத்தாகிடம், மொர்தெகாயிடம் சொல்லுமாறு சொல்லியனுப்பினது இதுவே: “மொர்தெகாய் ராஜாவின் தலைவர்கள் அனைவரும் ராஜாவின் நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். ராஜாவிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் ராஜாவிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது ராஜாவின் பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. ராஜா அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் ராஜாவைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள். எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ ராஜாவின் அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே. நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான். பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு ராஜாவிடம் செல்வேன். ராஜா அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.” எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.