எஸ்தரின் சரித்திரம் 4:9-17

எஸ்தரின் சரித்திரம் 4:9-17 TAERV

ஆத்தாகு எஸ்தரிடம் போய் மொர்தெகாய் சொன்னவற்றையெல்லாம் சொன்னான். பிறகு எஸ்தர் ஆத்தாகிடம், மொர்தெகாயிடம் சொல்லுமாறு சொல்லியனுப்பினது இதுவே: “மொர்தெகாய் ராஜாவின் தலைவர்கள் அனைவரும் ராஜாவின் நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். ராஜாவிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் ராஜாவிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது ராஜாவின் பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. ராஜா அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் ராஜாவைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள். எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ ராஜாவின் அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே. நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான். பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு ராஜாவிடம் செல்வேன். ராஜா அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.” எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.

எஸ்தரின் சரித்திரம் 4:9-17 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்