எஸ்தர் 2:7-11

எஸ்தர் 2:7-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான். ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள். அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான். எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான்.

எஸ்தர் 2:7-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான். அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக பெண்கள் சூசான் கோட்டைப் பட்டணத்திற்கு கொண்டுவரப்பட்டு யேகாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்குக் அழைத்துச்செல்லப்பட்டு, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் கொடுக்கப்பட்டாள். இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான். எஸ்தர் தான் எந்த இனம் என்றோ, தனது குடும்ப விபரம் என்னவேன்றோ வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் மொர்தெகாய் அப்படிச் செய்யவேண்டாம் என்று அவளுக்குச் சொல்லியிருந்தான். ஒவ்வொரு நாளும் மொர்தெகாய் எஸ்தர் எப்படியிருக்கிறாள் என்றும், அவளுக்கு என்ன நடக்கிறது என்றும் அறிவதற்கு அந்தப்புரத்தின் முற்றத்தின் அருகே, அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.

எஸ்தர் 2:7-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் தன்னுடைய சிறிய தகப்பனின் மகளாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பன் இல்லை; அந்தப் பெண் அழகும் விரும்பத்தக்கவளுமாக இருந்தாள்; அவளுடைய தகப்பனும், தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன்னுடைய மகளாக எடுத்துக்கொண்டான். ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரபலமாகி, அநேக பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரண்மனையிலுள்ள யேகாயினிடத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, பெண்களைக் காவல்காக்கிற யேகாயினிடம் ஒப்புவிக்கப்பட்டாள். அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான். எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்கும் காரியத்தையும் அறிய மொர்தெகாய் தினந்தோறும் கன்னிமாடத்து முற்றத்திற்கு முன்பாக உலாவுவான்.

எஸ்தர் 2:7-11 பரிசுத்த பைபிள் (TAERV)

மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் குமாரத்தியாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை குமாரத்தியாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள். ராஜாவின் கட்டளையை கேட்டபோது பல பெண்கள் தலைநகரமான சூசானுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்பெண்கள் யேகாயின் பொறுப்பில் விடப்பட்டனர். எஸ்தரும் அவர்களுள் ஒருத்தி. எஸ்தர் ராஜாவின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டாள். யேகா, ராஜாவின் பெண்களின் பொறுப்பை ஏற்றிருந்தான். யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். ராஜாவின் பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான். எஸ்தர் யாரிடமும் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவில்லை. அவள் யாரிடமும் தனது குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், மொர்தெகாய் அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தான். ஒவ்வொரு நாளும் ராஜாவின் பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான்.