எஸ்தர் 2:7-11

எஸ்தர் 2:7-11 TCV

மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான். அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக பெண்கள் சூசான் கோட்டைப் பட்டணத்திற்கு கொண்டுவரப்பட்டு யேகாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்குக் அழைத்துச்செல்லப்பட்டு, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் கொடுக்கப்பட்டாள். இந்தப் பெண் அவனுக்குப் பிரியமுள்ளவளாயிருந்து அவனிடத்தில் தயவு பெற்றாள். அவன் உடனடியாக அவளுக்கு அழகுபடுத்தும் பொருட்களையும், விசேஷ உணவையும் கொடுத்தான். அவன் அரசனுடைய அரண்மனையிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு தோழிகளையும் அவளுக்குக் கொடுத்து, அவளையும், அவளது தோழிகளையும் அந்தப்புரத்தின் மிகச்சிறந்த இடத்துக்கு மாற்றினான். எஸ்தர் தான் எந்த இனம் என்றோ, தனது குடும்ப விபரம் என்னவேன்றோ வெளிப்படுத்தவில்லை. ஏனெனில் மொர்தெகாய் அப்படிச் செய்யவேண்டாம் என்று அவளுக்குச் சொல்லியிருந்தான். ஒவ்வொரு நாளும் மொர்தெகாய் எஸ்தர் எப்படியிருக்கிறாள் என்றும், அவளுக்கு என்ன நடக்கிறது என்றும் அறிவதற்கு அந்தப்புரத்தின் முற்றத்தின் அருகே, அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.

எஸ்தர் 2:7-11 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்