பிரசங்கி 9:1-18

பிரசங்கி 9:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்குமுன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான். எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும். எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள். சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று. ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன். மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள். யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

பிரசங்கி 9:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே நான் இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தேன். அப்போது நீதிமான்களும், ஞானமுள்ளவர்களும், அவர்களின் செயல்களும் இறைவனின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு மனிதனும், இந்த வாழ்க்கையில் இறைவனின் அன்போ வெறுப்போ தனக்காக எது காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறான். நீதியானவனும் கொடுமையானவனும், நல்லவனும் கெட்டவனும், சுத்தமுள்ளவனும் சுத்தமில்லாதவனும், பலி செலுத்துகிறவனும் பலி செலுத்தாதவனும். ஆகிய எல்லாருக்கும் ஒரு பொதுவான நியதியே உண்டு. நல்லவனுக்குப் போலவே பாவிக்கும் நிகழ்கிறது. சத்தியம் செய்கிறவனுக்குப் போலவே சத்தியங்களைச் செய்யப் பயப்படுகிறவனுக்கும் நிகழ்கிறது. சூரியனுக்குக் கீழே எல்லாவற்றிலும் உள்ள தீமை இதுவே: எல்லோருக்கும் ஒரே நியதியே ஏற்படுகிறது. மனிதனுடைய இருதயங்கள் தீமையினால் நிறைந்திருக்கின்றன, அவர்கள் வாழும்போது அவர்களின் இருதயத்தில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது; அதின்பின் இறந்துவிடுகிறார்கள். உயிருள்ளவரை ஒருவனுக்கு நம்பிக்கை உண்டு; உயிரோடிருக்கும் நாய், செத்த சிங்கத்தைவிடச் சிறந்தது! உயிரோடிருப்பவர்கள் தாங்கள் சாவோம் என அறிந்திருக்கிறார்கள், இறந்தவர்களோ ஒன்றும் அறியார்கள்; அவர்களுக்கு இனி எந்த பலனுமில்லை. அவர்களைப்பற்றிய நினைவும்கூட மறக்கப்பட்டிருக்கும். அவர்களுடைய அன்பு, வெறுப்பு, பொறாமை ஆகியவையும்கூட எப்பொழுதோ மறைந்துவிட்டன; இனி ஒருபோதும் சூரியனுக்குக் கீழே நிகழும் எதிலும் அவர்கள் பங்குகொள்வதில்லை. நீ போய் உன் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடு, மகிழ்ச்சியான இருதயத்துடன் திராட்சை இரசத்தைக் குடி; ஏனெனில் இதை இறைவன் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறார். எப்பொழுதும் நல்ல உடைகளை உடுத்தியவனாகவும், உன் தலையில் நறுமணத்தைலம் பூசியவனாகவும் இரு. சூரியனுக்குக் கீழே, இறைவன் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த அர்த்தமற்ற வாழ்வில், உன் அர்த்தமற்ற நாட்களில், நீ அன்பாய் இருக்கும் உன் மனைவியுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவி. உன் வாழ்க்கையிலும், உன் கடும் உழைப்பிலும் சூரியனுக்குக் கீழே உன் பங்கு இதுவே. செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. சூரியனுக்குக் கீழே இன்னும் ஒன்றையும் நான் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் வேகமாய் ஓடுகிறவரே வெற்றி பெறுவார் என்றில்லை, பலசாலியே யுத்தத்தில் வெற்றி பெறுவார் என்றில்லை; ஞானமுள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில்லை, புத்தியுள்ளவர்களுக்குச் செல்வம் கிடைக்கும் என்பதில்லை, கல்விமான்களுக்குத் தயவு கிடைக்கும் என்பதில்லை; ஆனால் சரியான நேரமும் வாய்ப்பும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அத்துடன் ஒரு மனிதனும் துக்கவேளை எப்பொழுது வருமென்று அறியாதிருக்கிறான்: மீன்கள் கொடிய வலையில் பிடிபடுகின்றன, பறவைகள் கண்ணியில் அகப்படுகின்றன, அதுபோலவே மனிதர்களும் தீமையான காலங்களில் அகப்படுகின்றார்கள்; அவை அவர்கள்மேல் எதிர்பாராதவிதமாய் வருகின்றன. சூரியனுக்குக் கீழே என் உள்ளத்தை வெகுவாய்த் தொட்ட ஞானத்தின் உதாரணத்தையும் நான் கண்டேன். ஒருகாலத்தில் ஒரு சிறிய நகரம் இருந்தது. அங்கு சிறுதொகை மக்களே இருந்தனர். ஒரு வலிமையான அரசன் அதற்கு எதிராக வந்து அதைச் சுற்றிவளைத்து அதற்கு எதிராக அரண்களைக் கட்டினான். அந்த நகரத்தில் ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான், அவன் தன் ஞானத்தினால் அந்த நகரத்தை விடுவித்தான். ஆனால் யாருமே அந்த ஏழை மனிதனை நினைவில்கொள்ளவில்லை. ஆகவே வலிமையைவிட ஞானமே சிறந்ததாய் இருந்தாலும், ஏழையின் ஞானமோ உதாசீனம் செய்யப்படும். அவனுடைய வார்த்தைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் நான் அறிந்தேன். மூடர்களை ஆளுகிறவனின் உரத்த சத்தத்தைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் அமைதியான வார்த்தைகளை அதிகமாய் கவனத்தில் கொள்ளவேண்டும். போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான்.

பிரசங்கி 9:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான். எல்லோருக்கும் எல்லாம் ஒரேவிதமாக நடக்கும்; நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், நல்லகுணமும் சுத்தமும் உள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாக நடக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாக நடக்கும். எல்லோருக்கும் ஒரேவிதமாக நடக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீமை ஆகும்; ஆதலால் மனுமக்களின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாள்வரை அவர்களுடைய இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் மரித்து, இறந்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். இதற்கு நீங்கலாக இருக்கிறவன் யார்? உயிரோடு இருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கை உண்டு; செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் சிறப்பானது. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் இறப்பதை அறிவார்களே, இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பெயர்கூட மறக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய அன்பும், அவர்களுடைய பகையும், அவர்களுடைய பொறாமையும் ஒழிந்துபோனது; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறது ஒன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கு இல்லை. நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார். உன்னுடைய ஆடைகளை எப்பொழுதும் வெள்ளையாகவும், உன்னுடைய தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக. சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே செய்கிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே பார்த்தது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு வீரர்களின் வீரம் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு அறிவில் தேறினவர்களின் அறிவும் போதாது; அவர்கள் எல்லோருக்கும் நேரமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள். சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் பார்த்தேன்; அது என்னுடைய பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினது. ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய முற்றுகைச் சுவரைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன். மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள். யுத்த ஆயுதங்களைவிட ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

பிரசங்கி 9:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் இவை அனைத்தையும்பற்றி வெகு கவனமாகச் சிந்தித்தேன். தேவன், நல்லவர்களும் ஞானவான்களும் செய்வதையும் அவர்களுக்கு ஏற்படுவதையும் கட்டுப்படுத்துவதை நான் பார்த்தேன். அவர்கள் அன்பு செலுத்தப்படுவார்களா அல்லது வெறுக்கப்படுவார்களா என்று அவர்களுக்குத் தெரியாது. எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், நாம் அனைவரும் மரிக்கிறோம். இது அனைவருக்கும் நிகழ்கிற ஒன்று. மரணம் நல்லவர்கள் தீயவர்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது. சுத்தமானவர்கள் சுத்தமில்லாதவர்கள் என அனைத்து ஜனங்களுக்கும் மரணம் ஏற்படுகின்றது. பலி கொடுப்பவர்கள் பலிகொடுக்காதவர்கள் என அனைவருக்கும் மரணம் ஏற்படுகின்றது. பாவியைப் போன்றே நல்லவனும் மரித்துப்போகிறான். தேவனுக்குச் சிறப்பான பொருத்தனைகள் செய்கிறவனைப் போன்றே தேவனுக்குப் பொருத்தனை செய்யப் பயப்படுகிறவனும் மரித்துப்போகிறான். நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து காரியங்களிலும் மிக மோசமான காரியம் அனைத்து ஜனங்களும் ஒரே வழியில் முடிந்து போவதுதான். ஜனங்கள் எப்பொழுதும் பாவங்களையும் முட்டாள்தனங்களையும் சிந்தித்துக்கொண்டிருப்பதும் கெட்டதுதான். அவ்வகை எண்ணங்கள் மரணத்திற்கே அழைத்துச் செல்லுகின்றன. வாழ்ந்துகொண்டிருக்கிற எவருக்கும் நம்பிக்கையுண்டு. அவன் யார் என்பது அக்கறையில்லை. ஆனால் “மரித்துப்போன சிங்கத்தைவிட உயிரோடு உள்ள நாய் சிறந்தது” என்னும் கூற்று உண்மையானது. உயிரோடுள்ளவர்கள் தாம் மரித்துப்போவோம் என்பதை அறிந்தவர்கள். ஆனால் மரித்துப்போனவர்கள் எதையும் அறியமாட்டார்கள். மரித்துப் போனவர்களுக்கு எந்த விருதும் இல்லை. ஜனங்கள் அவர்களை விரைவில் மறந்துவிடுவார்கள். ஒருவன் மரித்த பிறகு, அவனது அன்பு, வெறுப்பு, பொறாமை அனைத்தும் போய்விடுகின்றது. மரித்துப்போனவர்களுக்குப் பூமியில் நிகழ்ந்த இத்தனையிலும் பங்கில்லை. இப்போது போய் உனது உணவை உண்டு மகிழ்ச்சியைப் பெறு. உனது திராட்சைரசத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைவாய். நீ இவற்றைச் செய்வது தேவனுக்கு உடன்பாடானதுதான். சிறந்த ஆடைகளை அணிந்து அழகாகக் காட்சியளி. நீ விரும்புகிற மனைவியோடு வாழ்க்கையை அனுபவி. குறுகிய உனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அனுபவி. பூமியில் குறுகிய இந்த வாழ்வை தேவன் உனக்குக்கொடுத்திருக்கிறார். உனக்குரியது எல்லாம் இதுதான். எனவே இவ்வாழ்வில் நீ செய்யவேண்டிய வேலைகளுக்கு மகிழ்ச்சி அடைவாய். எப்பொழுதெல்லாம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ, அதனைச் செய். கல்லறையில் உனக்கு வேலையில்லை. அங்கு சிந்தனையும் அறிவும் ஞானமும் இல்லை. நாம் அனைவரும் மரணம் என்ற இடத்துக்கே போய்க்கொண்டிருக்கிறோம். நான் வாழ்க்கையில் நியாயமற்ற சிலவற்றைப் பார்த்தேன். வேகமாக ஓடுகிறவன் பந்தயத்தில் எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வலுமிக்க படை போரில் எப்பொழுதும் வெற்றிபெறுவதில்லை. ஞானத்தில் சிறந்தவன் எப்பொழுதும் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை. அறிவுக் கூர்மைமிக்கவன் எப்பொழுதும் செல்வத்தைப் பெறுவதில்லை. கல்வி அறிவுமிக்கவன் எப்பொழுதும் தனக்குரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை; நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் தீமையே ஏற்படுகின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால் என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள் அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில் அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்து நடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன் தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான். அது திடீரென்று அவனுக்கு ஏற்படுகின்றது. இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச் செய்வதை நான் பார்த்தேன். எனக்கு அது மிக முக்கியமாகப்பட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம் இருந்தது. ஒரு ராஜா அதனைச் சுற்றி தன் படை வீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான். ஆனால் அந்நகரில் ஒரு ஞானி இருந்தான். அவன் ஏழை. ஆனால் அந்நகரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப் பயன்படுத்தினான். எல்லாம் நடந்து முடிந்தபிறகு, அந்த ஏழையை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன். ஒரு முட்டாள் ராஜாவால் மிகச் சத்தமாகச் சொல்லப்படுகிற வார்த்தைகளைவிட ஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள் சிறந்தவை. போரில் ஞானமானது வாள்களையும் ஈட்டிகளையும்விடச் சிறந்தவை. ஆனால் ஒரு முட்டாளால் பல நல்லவற்றை அழிக்க முடியும்.