பிரசங்கி 9:1-18

பிரசங்கி 9:1-18 TCV

ஆகவே நான் இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தேன். அப்போது நீதிமான்களும், ஞானமுள்ளவர்களும், அவர்களின் செயல்களும் இறைவனின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு மனிதனும், இந்த வாழ்க்கையில் இறைவனின் அன்போ வெறுப்போ தனக்காக எது காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறான். நீதியானவனும் கொடுமையானவனும், நல்லவனும் கெட்டவனும், சுத்தமுள்ளவனும் சுத்தமில்லாதவனும், பலி செலுத்துகிறவனும் பலி செலுத்தாதவனும். ஆகிய எல்லாருக்கும் ஒரு பொதுவான நியதியே உண்டு. நல்லவனுக்குப் போலவே பாவிக்கும் நிகழ்கிறது. சத்தியம் செய்கிறவனுக்குப் போலவே சத்தியங்களைச் செய்யப் பயப்படுகிறவனுக்கும் நிகழ்கிறது. சூரியனுக்குக் கீழே எல்லாவற்றிலும் உள்ள தீமை இதுவே: எல்லோருக்கும் ஒரே நியதியே ஏற்படுகிறது. மனிதனுடைய இருதயங்கள் தீமையினால் நிறைந்திருக்கின்றன, அவர்கள் வாழும்போது அவர்களின் இருதயத்தில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது; அதின்பின் இறந்துவிடுகிறார்கள். உயிருள்ளவரை ஒருவனுக்கு நம்பிக்கை உண்டு; உயிரோடிருக்கும் நாய், செத்த சிங்கத்தைவிடச் சிறந்தது! உயிரோடிருப்பவர்கள் தாங்கள் சாவோம் என அறிந்திருக்கிறார்கள், இறந்தவர்களோ ஒன்றும் அறியார்கள்; அவர்களுக்கு இனி எந்த பலனுமில்லை. அவர்களைப்பற்றிய நினைவும்கூட மறக்கப்பட்டிருக்கும். அவர்களுடைய அன்பு, வெறுப்பு, பொறாமை ஆகியவையும்கூட எப்பொழுதோ மறைந்துவிட்டன; இனி ஒருபோதும் சூரியனுக்குக் கீழே நிகழும் எதிலும் அவர்கள் பங்குகொள்வதில்லை. நீ போய் உன் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடு, மகிழ்ச்சியான இருதயத்துடன் திராட்சை இரசத்தைக் குடி; ஏனெனில் இதை இறைவன் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறார். எப்பொழுதும் நல்ல உடைகளை உடுத்தியவனாகவும், உன் தலையில் நறுமணத்தைலம் பூசியவனாகவும் இரு. சூரியனுக்குக் கீழே, இறைவன் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த அர்த்தமற்ற வாழ்வில், உன் அர்த்தமற்ற நாட்களில், நீ அன்பாய் இருக்கும் உன் மனைவியுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவி. உன் வாழ்க்கையிலும், உன் கடும் உழைப்பிலும் சூரியனுக்குக் கீழே உன் பங்கு இதுவே. செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. சூரியனுக்குக் கீழே இன்னும் ஒன்றையும் நான் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் வேகமாய் ஓடுகிறவரே வெற்றி பெறுவார் என்றில்லை, பலசாலியே யுத்தத்தில் வெற்றி பெறுவார் என்றில்லை; ஞானமுள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில்லை, புத்தியுள்ளவர்களுக்குச் செல்வம் கிடைக்கும் என்பதில்லை, கல்விமான்களுக்குத் தயவு கிடைக்கும் என்பதில்லை; ஆனால் சரியான நேரமும் வாய்ப்பும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. அத்துடன் ஒரு மனிதனும் துக்கவேளை எப்பொழுது வருமென்று அறியாதிருக்கிறான்: மீன்கள் கொடிய வலையில் பிடிபடுகின்றன, பறவைகள் கண்ணியில் அகப்படுகின்றன, அதுபோலவே மனிதர்களும் தீமையான காலங்களில் அகப்படுகின்றார்கள்; அவை அவர்கள்மேல் எதிர்பாராதவிதமாய் வருகின்றன. சூரியனுக்குக் கீழே என் உள்ளத்தை வெகுவாய்த் தொட்ட ஞானத்தின் உதாரணத்தையும் நான் கண்டேன். ஒருகாலத்தில் ஒரு சிறிய நகரம் இருந்தது. அங்கு சிறுதொகை மக்களே இருந்தனர். ஒரு வலிமையான அரசன் அதற்கு எதிராக வந்து அதைச் சுற்றிவளைத்து அதற்கு எதிராக அரண்களைக் கட்டினான். அந்த நகரத்தில் ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான், அவன் தன் ஞானத்தினால் அந்த நகரத்தை விடுவித்தான். ஆனால் யாருமே அந்த ஏழை மனிதனை நினைவில்கொள்ளவில்லை. ஆகவே வலிமையைவிட ஞானமே சிறந்ததாய் இருந்தாலும், ஏழையின் ஞானமோ உதாசீனம் செய்யப்படும். அவனுடைய வார்த்தைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் நான் அறிந்தேன். மூடர்களை ஆளுகிறவனின் உரத்த சத்தத்தைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் அமைதியான வார்த்தைகளை அதிகமாய் கவனத்தில் கொள்ளவேண்டும். போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரசங்கி 9:1-18