பிரசங்கி 8:14-17
பிரசங்கி 8:14-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மேலும் பூமியில் நிகழ்கின்ற வேறு ஒரு அர்த்தமற்ற காரியமும் உண்டு: கொடியவர்களுக்கு வரவேண்டியது, நீதிமான்களுக்கு வருகிறது. நீதிமான்களுக்கு வரவேண்டியது, கொடியவர்களுக்கு வருகிறது. இதுவும் அர்த்தமற்றது என்றே நான் சொல்வேன். எனவே நான் வாழ்க்கையில் இன்பமாயிருக்கச் சொல்கிறேன்; ஏனெனில் சூரியனுக்குக் கீழே மனிதனுக்கு சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாய் இருப்பதைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. அப்பொழுது சூரியனுக்குக் கீழே இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கிற வாழ்நாளெல்லாம், அவனுடைய வேலையில் மகிழ்ச்சியிருக்கும். நான் ஞானத்தை அடையவும், மனிதன் இரவு பகல் நித்திரையின்றி பூமியில் செய்யும் கடின உழைப்பைக் கவனிப்பதற்கும் முயன்றபோது, இறைவன் செய்த எல்லாவற்றையும் நான் கண்டேன். சூரியனுக்குக் கீழே நடப்பதை ஒருவனாலும் விளங்கிக்கொள்ள முடியாது. அதை அறிய முயற்சித்தாலும், அவனால் அதின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஞானமுள்ள ஒருவன் தனக்குத் தெரியும் என்று சொன்னாலும் உண்மையாகவே அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியாது.
பிரசங்கி 8:14-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமும் உண்டு; அதாவது, துன்மார்க்கர்களின் செய்கைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் செய்கைக்கு வருவதுபோல, துன்மார்க்கர்களுக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். ஆகையால் நான் மகிழ்ச்சியைப் புகழ்ந்தேன்; சாப்பிடுவதும் குடிப்பதும் மகிழ்வதுமே தவிர சூரியனுக்குக்கீழே மனிதனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்கு கொடுத்த வாழ்நாளில் அவனுடைய பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே. நான் ஞானத்தை அறியவும், மனிதன் இரவும் பகலும் கண்ணுக்கு தூக்கம் இல்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என்னுடைய மனதை செலுத்தினபோது, தேவன் செய்யும் எல்லா செயல்களையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செய்கையை மனிதன் கண்டுபிடிக்கமுடியாதென்று கண்டேன். அதை அறியும்படி மனிதன் முயற்சித்தாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
பிரசங்கி 8:14-17 பரிசுத்த பைபிள் (TAERV)
நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில் நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும், நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும். ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும் தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும் அவை நல்லதன்று. எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக்கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும். இந்த வாழ்வில் ஜனங்கள் செய்வதை எல்லாம் நான் கவனமாகப் படித்திருக்கிறேன். ஜனங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். அவர்கள் இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை. நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.
பிரசங்கி 8:14-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே. நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது, தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.