பிரசங்கி 8

8
ஞானமும் வல்லமையும்
1ஒரு ஞானமுள்ளவனைப்போன்று எவராலும் ஒன்றைப் புரிந்துக்கொள்ளவும், விளக்கவும் முடியாது. அவனது ஞானம் அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. இது ஒருவனது சோகமுள்ள முகத்தை மகிழ்ச்சியுள்ளதாக மாற்றும்.
2நீங்கள் ராஜாவின் கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீ இதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய். 3ராஜாவுக்கு ஆலோசனை சொல்ல அஞ்சவேண்டாம். தவறான ஒன்றுக்கு ஆதரவு செலுத்தவேண்டாம் ராஜா தனக்குப் பிடித்தமான ஆணைகளையே தருகிறான். 4ராஜாவுக்கு ஆணைகளைத் தரும் அதிகாரம் உள்ளது. எதைச் செய்ய வேண்டும் என்று எவரும் அவனுக்குச் சொல்வதில்லை. 5ராஜாவின் ஆணைகளுக்குக் கீழ்படிந்தால் ஒருவன் பாதுகாப்பாக இருப்பான். இதைச் செய்ய வேண்டிய சரியான கால்த்தை ஞானமுள்ளவன் அறிவான். சரியானவற்றை எப்போது செய்யவேண்டும் என்பதையும் அவன் அறிவான்.
6எல்லாவற்றையும் செய்ய ஒருவனுக்குச் சரியான காலமும், சரியான வழியும் உள்ளன. எனவே ஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு எதைச் செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் குழப்பம் இருந்தாலும், பல துன்பங்களில் உழன்றாலும் ஒருவன் அதனைச் செய்யவேண்டும். 7ஏனென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவரும் அவனிடம் சொல்வதில்லை.
8எவருக்கும் தன் ஆவியை விடாமல் தங்கவைக்கும் வலிமை இல்லை. எவருக்கும் தன் சாவைத் தடுக்கும் அதிகாரமில்லை. போர்க் காலத்தில் தன் விருப்பப்படி போய்வர ஒரு போர் வீரனுக்கு சுதந்திரம் இல்லை. இதுபோலவே, ஒருவன் பாவம் செய்தால் அது அவனை சுதந்திரம் உள்ளவனாக இருக்கும்படி செய்யாது.
9நான் அனைத்தையும் பார்த்தேன். உலகில் நடைபெறுகிற அத்தனையையும் பற்றி நான் கடுமையாகச் சிந்தித்தேன். ஜனங்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஆள்வதற்கான வல்லமையைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன். இது அவர்களுக்குக் கெட்டது.
10தீய ஜனங்களுக்கு அழகான சிறந்த சவ அடக்கங்கள் நடைபெறுவதை நான் பார்த்தேன். அடக்கச் சடங்கு முடிந்து ஜனங்கள் வீட்டிற்குப் போனதும் மரித்துப்போன தீயவர்களைப்பற்றி நல்லவற்றைக் கூறினார்கள். இத்தகைய காரியங்கள் தீயவன் வாழ்ந்த அதே நகரத்திலேயே நடந்து வருகின்றன. இது அர்த்தமற்றது.
நியாயம், வெகுமதிகள், தண்டனை
11சில நேரங்களில் ஜனங்கள் தாம் செய்கிற தீமைக்கு உடனே தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான தண்டனை மெதுவாக வரும். இது மற்றவர்களையும் தீமை செய்யும்படி தூண்டும்.
12ஒரு பாவி நூற்றுக்கணக்கான தீமைகளைச் செய்யலாம். அவனுக்கு நீண்ட வாழ்க்கையும் இருக்கலாம். ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதும் மரியாதை செலுத்துவதும் இன்னும் சிறந்ததாக நான் கருதுகிறேன். 13தீயவர்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துவதில்லை. எனவே அவர்கள் நல்லவற்றைப் பெறுவதில்லை. அவர்கள் நீண்ட வாழ்க்கையைப் பெறுவதில்லை. சூரியன் அஸ்தமிக்கும்போது நிழல் நீண்டு தோன்றுவதுபோன்று, அவர்களின் வாழ்க்கை வளருவதில்லை.
14நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில் நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும், நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும். ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும் தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும் அவை நல்லதன்று. 15எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக்கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும்.
தேவன் செய்வதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை
16இந்த வாழ்வில் ஜனங்கள் செய்வதை எல்லாம் நான் கவனமாகப் படித்திருக்கிறேன். ஜனங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். அவர்கள் இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை. 17நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

பிரசங்கி 8: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்