பிரசங்கி 2:17-26
பிரசங்கி 2:17-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது. சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு பெற்றதையெல்லாம் நான் வெறுத்தேன். ஏனெனில், அவற்றை நான் எனக்குப்பின் வருவோருக்கு விட்டுச்செல்ல வேண்டுமே. அவர்கள் ஞானமுள்ளோராய் இருப்பார்களோ, அல்லது மூடராயிருப்பார்களோ என்று யார் அறிவார்? சூரியனுக்குக் கீழே என் முயற்சியையும் திறமையையும் உபயோகித்து நான் செய்த எல்லா வேலைகள்மேலும் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்களே. இதுவும் அர்த்தமற்றதே. எனவே சூரியனுக்குக் கீழேயுள்ள என் பிரயாசங்களின் முயற்சி அனைத்தையும் குறித்து, என் இருதயம் விரக்தியடையத் தொடங்கியது. ஏனெனில் ஒரு மனிதர்கள் தன் வேலையை ஞானத்துடனும், அறிவுடனும், திறமையுடனும் செய்கிறார்கள்; ஆகிலும் அவர்கள் தங்களுக்கு உரிமையான அனைத்தையும் அதற்காகப் பிரயாசப்படாத வேறொருவருக்கு விட்டுச்செல்ல நேரிடுகிறதே. இதுவும் அர்த்தமற்றதும், பெரும் தீமையாய் இருக்கிறது. சூரியனுக்குக் கீழே மனிதர்கள் மிகவும் பிரயாசப்பட்டும், கவலையுடன் போராடியும் உழைப்பதினால், அவர்கள் பெறும் இலாபம் என்ன? அவர்களுடைய வாழ்நாளெல்லாம் அவர்கள் செய்யும் வேலை, வேதனையும் துன்பமுமே; இரவிலும் அவர்களுடைய மனம் இளைப்பாறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதே. சாப்பிட்டு, குடித்து தங்கள் வேலையில் திருப்தி காண்பதைவிட, அவர்கள் செய்யக்கூடிய நலமானது ஒன்றும் இல்லை. இதுவும் இறைவனின் கரத்திலிருந்து வருகிறது என்று நான் காண்கிறேன். அவராலேயன்றி உணவு சாப்பிடவோ, சந்தோஷமாயிருக்கவோ யாரால் முடியும்? இறைவனைப் பிரியப்படுத்துகிற மனிதருக்கு அவர் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார். ஆனால் பாவிகளுக்கோ, இறைவனைப் பிரியப்படுத்துபவர்களுக்குக் கொடுக்கும்படி, செல்வத்தைச் சேர்த்துக் குவித்து வைக்கும் வேலையைக் கையளிக்கிறார். இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் ஒரு முயற்சியே.
பிரசங்கி 2:17-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செயல்களெல்லாம் எனக்கு வருத்தமாக இருந்தது; எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே. அவன் புத்திமானாக இருப்பானோ, மூடனாக இருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் உழைத்து ஞானமாகச் சம்பாதித்த எல்லா பொருட்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே. ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் செய்த எல்லா பிரயாசத்தின் மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைத்தேடினேன். ஒருவன் புத்தி, அறிவுக்கூர்மை, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆனாலும் அப்படி பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாகவும் இருக்கிறது. மனிதன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லா பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே. மனிதன் சாப்பிட்டுக் குடித்து, தன்னுடைய பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைவிட, அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன். அவனைவிட நிறைவாக சாப்பிடக்கூடியவன் யார்? அவனைவிட விரைவாகச் சம்பாதிக்ககூடியவன் யார்? தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவம்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனிடம் வைத்துவிட்டுப் போகும்படியாகச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.
பிரசங்கி 2:17-26 பரிசுத்த பைபிள் (TAERV)
இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது. இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்ற எண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப் பிடிப்பதுபோன்ற முயற்சி. நான் செய்த கடினமான உழைப்பு அனைத்தையும் வெறுத்தேன். நான் கடினமாக உழைத்திருக்கிறேன். ஆனால் நான் உழைத்தவற்றுக்கான பலனை எனக்குப் பின்னால் வாழ்பவர்களுக்கு வைத்துப் போக வேண்டும். நான் அவற்றை என்னோடு எடுத்துச் செல்ல இயலாது. வேறு ஒருவன் நான் உழைத்ததும், கற்றதுமான அனைத்தையும் ஆளுவான். அவன் ஞானமுள்ளவனா முட்டாளா என்பதை நான் அறியேன். இதுவும் அறிவற்றதுதான். எனவே, நான் செய்த அனைத்து உழைப்பைப்பற்றியும் வருத்தம் அடைந்தேன். ஒருவனால் தனது ஞானம், அறிவு, திறமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உழைக்கமுடியும். ஆனால் அவன் இறந்ததும், அவனது உழைப்பை மற்றவர்கள் பெறுகின்றனர். அவர்கள் எந்த உழைப்பையும் செய்வதில்லை. ஆனால் அனைத்தையும் பெறுகின்றனர். இது எனக்குச் சோர்வுண்டாக்குகிறது. இது நேர்மையற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் உள்ளது. ஒருவனது அனைத்து உழைப்புக்கும் போராட்டங்களுக்கும் பிறகு வாழ்வில் அவனுக்கு என்ன கிடைக்கிறது? அவனது வாழ்வு முழுவதும் வலியும், சலிப்பும், கடின உழைப்புமே மிஞ்சுகிறது. இரவிலும்கூட அவனது மனம் ஓய்வு பெறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதுதான். என்னைவிட வேறு எவராது வாழ்வில் மகிழ்ச்சிபெற முயற்சி செய்ததுண்டா? எனவே ஒரு மனிதன் செய்யவேண்டியது என்னவென்றால் நன்றாக உண்பது, குடிப்பது, செய்யவேண்டியவற்றை மட்டும் மகிழ்ச்சியாக செய்வதுதான். இதையே நான் கற்றுக்கொண்டேன். இவை தேவனிடமிருந்து வருகிறது என்பதையும் நான் பார்த்தேன். ஒருவன் நன்மையைச் செய்து தேவனைப் பிரியப்படுத்தினால், தேவன் அவனுக்கு ஞானம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றைக்கொடுக்கிறார். ஆனால் பாவம் செய்கிறவனுக்கு கூட்டுகிற வேலையையும், சுமக்கிற வேலையையும் தருகிறார். தேவன் கெட்டவர்களிடம் உள்ளவற்றை எடுத்து நல்லவர்களுக்குக்கொடுக்கிறார். ஆனால் இவை அனைத்தும் பயனற்றவை. இது காற்றைப் பிடிக்கும் முயற்சிதான்.
பிரசங்கி 2:17-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே. அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே. ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன். ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது. மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே. மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன். என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்? தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.