பிரசங்கி 2:17-26

பிரசங்கி 2:17-26 TCV

சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது. சூரியனுக்குக் கீழே நான் பிரயாசப்பட்டு பெற்றதையெல்லாம் நான் வெறுத்தேன். ஏனெனில், அவற்றை நான் எனக்குப்பின் வருவோருக்கு விட்டுச்செல்ல வேண்டுமே. அவர்கள் ஞானமுள்ளோராய் இருப்பார்களோ, அல்லது மூடராயிருப்பார்களோ என்று யார் அறிவார்? சூரியனுக்குக் கீழே என் முயற்சியையும் திறமையையும் உபயோகித்து நான் செய்த எல்லா வேலைகள்மேலும் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்களே. இதுவும் அர்த்தமற்றதே. எனவே சூரியனுக்குக் கீழேயுள்ள என் பிரயாசங்களின் முயற்சி அனைத்தையும் குறித்து, என் இருதயம் விரக்தியடையத் தொடங்கியது. ஏனெனில் ஒரு மனிதர்கள் தன் வேலையை ஞானத்துடனும், அறிவுடனும், திறமையுடனும் செய்கிறார்கள்; ஆகிலும் அவர்கள் தங்களுக்கு உரிமையான அனைத்தையும் அதற்காகப் பிரயாசப்படாத வேறொருவருக்கு விட்டுச்செல்ல நேரிடுகிறதே. இதுவும் அர்த்தமற்றதும், பெரும் தீமையாய் இருக்கிறது. சூரியனுக்குக் கீழே மனிதர்கள் மிகவும் பிரயாசப்பட்டும், கவலையுடன் போராடியும் உழைப்பதினால், அவர்கள் பெறும் இலாபம் என்ன? அவர்களுடைய வாழ்நாளெல்லாம் அவர்கள் செய்யும் வேலை, வேதனையும் துன்பமுமே; இரவிலும் அவர்களுடைய மனம் இளைப்பாறுவதில்லை. இதுவும் அர்த்தமற்றதே. சாப்பிட்டு, குடித்து தங்கள் வேலையில் திருப்தி காண்பதைவிட, அவர்கள் செய்யக்கூடிய நலமானது ஒன்றும் இல்லை. இதுவும் இறைவனின் கரத்திலிருந்து வருகிறது என்று நான் காண்கிறேன். அவராலேயன்றி உணவு சாப்பிடவோ, சந்தோஷமாயிருக்கவோ யாரால் முடியும்? இறைவனைப் பிரியப்படுத்துகிற மனிதருக்கு அவர் ஞானத்தையும், அறிவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறார். ஆனால் பாவிகளுக்கோ, இறைவனைப் பிரியப்படுத்துபவர்களுக்குக் கொடுக்கும்படி, செல்வத்தைச் சேர்த்துக் குவித்து வைக்கும் வேலையைக் கையளிக்கிறார். இதுவும் அர்த்தமற்றதே, காற்றைத் துரத்திப்பிடிக்கும் ஒரு முயற்சியே.