பிரசங்கி 2:11-17

பிரசங்கி 2:11-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான். இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன். ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரே விதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன். மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன். மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான். ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

பிரசங்கி 2:11-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும், அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது, இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பின்பு நான் ஞானத்தை ஆராய்ந்து பார்க்கவும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் அறிந்துகொள்ளவும் என் மனதை திருப்பினேன். அரசனுக்குப்பின் அவனுடைய இடத்தில் வருகிறவன், முன்பு அவனால் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் இவனால் அதிகமாய் என்ன செய்யமுடியும்? இருளைப் பார்க்கிலும் வெளிச்சம் நல்லதாய் இருப்பதுபோலவே, மூடத்தனத்தைப் பார்க்கிலும் ஞானம் நல்லது எனக் கண்டேன். ஒரு ஞானமுள்ளோரின் கண்கள் வெளிச்சத்தை நோக்கியிருக்கின்றன, மூடரோ இருளில் நடப்பார்கள்; ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே முடிவே ஏற்படுகிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். பின்பு நான், மூடரின் முடிவே என்னையும் மேற்கொள்ளும், “ஆகவே ஞானமுள்ளவனாய் இருப்பதால் நான் பெறும் இலாபம் என்ன?” என்று என் இருதயத்தில் சிந்தித்தேன். “இதுவும் அர்த்தமற்றதே” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன். மூடரைப் போலவே ஞானமுள்ளோரும் நெடுங்காலம் ஞாபகத்தில் இருக்கமாட்டார்கள்; வருங்காலத்தில் இருவரும் மறக்கப்பட்டுப் போவார்கள். மூடரைப் போலவே, ஞானமுள்ளோரும் இறந்துபோவார்கள். சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது.

பிரசங்கி 2:11-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனிதன் என்ன செய்யமுடியும்? செய்ததையே செய்வான். இருளைவிட வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாக மதியீனத்தைவிட ஞானம் உத்தமமென்று கண்டேன். ஞானியின் கண்கள் அவனுடைய முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லோருக்கும் ஒரே விதமாக நடக்கிறது என்று கண்டேன். மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான். ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செயல்களெல்லாம் எனக்கு வருத்தமாக இருந்தது; எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.

பிரசங்கி 2:11-17 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆனால் பின்னர் நான் செய்த அனைத்தையும் கவனித்தேன். நான் செய்த கடின உழைப்பை எல்லாம் நினைத்துப் பார்த்தேன். அவை அனைத்தும் காலவிரயம் என்று முடிவுசெய்தேன். இது காற்றைப் பிடிப்பதுபோன்றது. நம் வாழ்க்கையில் நாம் செய்த அனைத்திலிருந்தும் இலாபகரமானது எதுவுமில்லை. ஒரு ராஜாவால் செய்ய முடிந்ததைவிட ஒரு மனிதனால் அதிகமாகச் செய்யமுடியாது. சில ராஜாக்கள் ஏற்கெனவே நீங்கள் செய்ய விரும்புவதையே செய்திருக்கிறார்கள். அந்த ராஜாக்கள் செய்தவையும் காலவிரயம் என்று நான் கற்றுக்கொண்டேன். எனவே மீண்டும் நான் ஞானமுள்ளவனாக இருப்பதைப்பற்றியும், அறிவற்றவனாக இருப்பதைப்பற்றியும் பைத்தியக்காரத்தனமான செயல்களைப்பற்றியும் எண்ணினேன். இருட்டைவிட ஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிட ஞானம் சிறந்தது என்று கண்டேன். ஞானமுள்ளவன் தான் செல்லுமிடத்தை அறிய சிந்தனையைக் கண்களாகப் பயன்படுத்துகிறான். ஆனால் முட்டாளோ, இருட்டில் நடப்பவனைப் போன்றுள்ளான். ஆனால் ஞானமுள்ளவனுக்கும் முட்டாளுக்கும் ஒரே வழியிலேயே முடிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டேன். இருவரும் மரித்துப்போகின்றனர். நான் எனக்குள், “ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும் எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று எண்ணினேன். நான் எனக்குள், “ஞானமுள்ளவனாக இருப்பதும் பயனற்றதே” என்று சொன்னேன். ஞானமுள்ளவனும் முட்டாளும் மரித்துப்போகின்றனர். ஜனங்கள் ஞானவான்களையும், முட்டாள்களையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில் தாங்கள் செய்தவற்றையெல்லாம் ஜனங்கள் மறந்துபோகிறார்கள். எனவே ஞானமுள்ளவனும் முட்டாளும் உண்மையில் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது. இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்ற எண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப் பிடிப்பதுபோன்ற முயற்சி.