பிரசங்கி 2:11-17

பிரசங்கி 2:11-17 TCV

அப்படியிருந்தும் என் கைகள் செய்த எல்லாவற்றையும், அவற்றை அடைய நான் பட்ட பிரசாயத்தையும் பார்த்தபோது, இவை யாவும் அர்த்தமற்றவையாகவே இருந்தன, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பின்பு நான் ஞானத்தை ஆராய்ந்து பார்க்கவும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் அறிந்துகொள்ளவும் என் மனதை திருப்பினேன். அரசனுக்குப்பின் அவனுடைய இடத்தில் வருகிறவன், முன்பு அவனால் செய்யப்பட்டதைப் பார்க்கிலும் இவனால் அதிகமாய் என்ன செய்யமுடியும்? இருளைப் பார்க்கிலும் வெளிச்சம் நல்லதாய் இருப்பதுபோலவே, மூடத்தனத்தைப் பார்க்கிலும் ஞானம் நல்லது எனக் கண்டேன். ஒரு ஞானமுள்ளோரின் கண்கள் வெளிச்சத்தை நோக்கியிருக்கின்றன, மூடரோ இருளில் நடப்பார்கள்; ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரே முடிவே ஏற்படுகிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். பின்பு நான், மூடரின் முடிவே என்னையும் மேற்கொள்ளும், “ஆகவே ஞானமுள்ளவனாய் இருப்பதால் நான் பெறும் இலாபம் என்ன?” என்று என் இருதயத்தில் சிந்தித்தேன். “இதுவும் அர்த்தமற்றதே” என்று என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன். மூடரைப் போலவே ஞானமுள்ளோரும் நெடுங்காலம் ஞாபகத்தில் இருக்கமாட்டார்கள்; வருங்காலத்தில் இருவரும் மறக்கப்பட்டுப் போவார்கள். மூடரைப் போலவே, ஞானமுள்ளோரும் இறந்துபோவார்கள். சூரியனுக்குக் கீழே செய்யப்படுவதெல்லாம் எனக்குத் துக்கமாகவே இருந்தது, ஆதலால் நான் வாழ்க்கையை வெறுத்தேன். அவையாவும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சிக்கு ஒப்பானது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரசங்கி 2:11-17