உபாகமம் 8:7-14

உபாகமம் 8:7-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வளமான நாட்டிற்குக் கொண்டுவரப்போகிறார். அது ஆறுகளும் நீரோடைகளும் ஏரிகளும் நிறைந்து பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்ந்தோடும் நாடு. அது கோதுமையும் வாற்கோதுமையும், திராட்சைத் தோட்டங்களும், அத்திமரங்களும், மாதுளம்பழங்களும், ஒலிவ எண்ணெயும், தேனும் நிறைந்த நாடு. அது உணவு குறைவுபடாத நாடு, அங்கு உங்களுக்குக் குறைவே இருக்காது; அந்த நாட்டின் கற்பாறைகள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் இருந்து செம்பைத் தோண்டி எடுக்கலாம். நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த அந்த வளமான நாட்டிற்காக அவரைத் துதியுங்கள். நீங்கள் இறைவனை மறந்து நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவினுடைய கட்டளைகளையும், சட்டங்களையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளத் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் நீங்கள் சாப்பிட்டுத் திருப்தியாயிருக்கும்போதும், நல்ல வீடுகளைக் கட்டி, அங்கு குடியிருக்கும்போதும், உங்கள் மாட்டு மந்தைகளும், உங்கள் ஆட்டு மந்தைகளும் பெருகும்போதும், உங்கள் வெள்ளியும் தங்கமும் அதிகரித்து, உங்களிடம் உள்ளவைகள் எல்லாம் பெருகும்போதும் கவனமாயிருக்க வேண்டும். அப்பொழுது உங்கள் இருதயங்கள் பெருமையடைந்து, அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து உங்களை மீட்டுக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவாவை நீங்கள் மறந்துவிடவேண்டாம்.

உபாகமம் 8:7-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உன் தேவனாகிய யெகோவா உன்னை நல்ல தேசத்திலே நுழையச்செய்கிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும், வாற்கோதுமையும், திராட்சைச்செடிகளும், அத்திமரங்களும், மாதுளம்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும், தேனுமுள்ள தேசம்; அது குறையில்லாமல் அப்பம் சாப்பிடத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அதின் கற்கள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டியெடுக்கத்தக்க மலைகள் உள்ளதுமான தேசம். ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக. “உன் தேவனாகிய யெகோவாவை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ சாப்பிட்டுத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் மிகுதியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் பெருகும்போதும், உன் இருதயம் பெருமைகொள்ளாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தவரும்

உபாகமம் 8:7-14 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு நல்ல தேசத்திலே வசிக்க அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கு பள்ளத்தாக்குகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் புறப்படுகின்ற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளும் தண்ணீர்வளம் நிறைந்தது. அந்த நிலம் கோதுமையையும், பார்லியையும், திராட்சைக் கொடிகளையும், அத்தி மரங்களையும், மாதுளஞ் செடிகளையும் விளைவிக்கும் வளமான நிலம். அது ஒலிவ மரங்களையும், எண்ணெய், தேன் ஆகியவற்றையும் கொடுக்கவல்ல நிலமாகும். அங்கே நீங்கள் தாராளமாக உண்டு வாழலாம். உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அது, பாறைகள் இரும்பாக இருக்கும் தேசமாக உள்ளது. அங்குள்ள மலைகளிலிருந்து செம்பு உலோகத்தை நீங்கள் வெட்டி எடுக்கலாம், அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள். “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பின், நீங்கள் தாராளமான திருப்தியான உணவை உண்ணலாம். வசதியான வீடுகளை நீங்கள் கட்டி அவைகளை அனுபவித்து வாழலாம். உங்களது ஆடு, மாடு, வெள்ளாடுகள் பெருகி வளார்ச்சியடையும். பொன்னும், வெள்ளியும் மிகுதியாகப் பெறலாம். நீங்கள் எல்லாவற்றையும் தாராளமாக அடையலாம்! இவற்றையெல்லாம் அனுபவிக்கும்போது நீங்கள் கர்வம் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் கர்த்தர் உங்களை விடுவித்து அங்கிருந்து வெளியேற்றி இங்கு அழைத்து வந்தார்.

உபாகமம் 8:7-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்; அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம். ஆகையால், நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்