உபாகமம் 8:7-14

உபாகமம் 8:7-14 TAERV

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஒரு நல்ல தேசத்திலே வசிக்க அழைத்துக்கொண்டு வருகிறார். அங்கு பள்ளத்தாக்குகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் புறப்படுகின்ற ஆறுகளும், ஊற்றுகளும், ஏரிகளும் தண்ணீர்வளம் நிறைந்தது. அந்த நிலம் கோதுமையையும், பார்லியையும், திராட்சைக் கொடிகளையும், அத்தி மரங்களையும், மாதுளஞ் செடிகளையும் விளைவிக்கும் வளமான நிலம். அது ஒலிவ மரங்களையும், எண்ணெய், தேன் ஆகியவற்றையும் கொடுக்கவல்ல நிலமாகும். அங்கே நீங்கள் தாராளமாக உண்டு வாழலாம். உங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். அது, பாறைகள் இரும்பாக இருக்கும் தேசமாக உள்ளது. அங்குள்ள மலைகளிலிருந்து செம்பு உலோகத்தை நீங்கள் வெட்டி எடுக்கலாம், அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள். “எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பின், நீங்கள் தாராளமான திருப்தியான உணவை உண்ணலாம். வசதியான வீடுகளை நீங்கள் கட்டி அவைகளை அனுபவித்து வாழலாம். உங்களது ஆடு, மாடு, வெள்ளாடுகள் பெருகி வளார்ச்சியடையும். பொன்னும், வெள்ளியும் மிகுதியாகப் பெறலாம். நீங்கள் எல்லாவற்றையும் தாராளமாக அடையலாம்! இவற்றையெல்லாம் அனுபவிக்கும்போது நீங்கள் கர்வம் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் கர்த்தர் உங்களை விடுவித்து அங்கிருந்து வெளியேற்றி இங்கு அழைத்து வந்தார்.