உபாகமம் 5:1-11
உபாகமம் 5:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மோசே இஸ்ரயேலர் எல்லோரையும் அழைத்துச் சொன்னதாவது: இஸ்ரயேலரே கேளுங்கள், நான் இன்று உங்களுக்கு அறிவிக்கும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கேளுங்கள். அவற்றைக் கற்று, அவைகளைப் பின்பற்றும்படி கவனமாயிருங்கள். நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே, நம்முடன் ஒரு உடன்படிக்கை செய்தார். அவர் அந்த உடன்படிக்கையை யெகோவா நம்முடைய முற்பிதாக்களோடு மட்டும் செய்யவில்லை. இன்று உயிரோடு இருக்கும் நம் அனைவருடனும் அதைச் செய்தார். யெகோவா மலையின்மேலே நெருப்பின் நடுவில் இருந்து உங்களுடன் முகமுகமாய்ப் பேசினார். நீங்கள் நெருப்புக்குப் பயந்து மலைக்குமேல் ஏறாதிருந்தபடியால், நான் அவ்வேளையில் யெகோவாவினுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படியாக யெகோவாவுக்கும், உங்களுக்கும் இடையில் நின்றேன். அவர் சொன்னதாவது: “அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே. “நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே. நீ உனக்காக எந்தவொரு விக்கிரகத்தையும் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், கீழேயுள்ள தண்ணீரிலும் இருக்கிறவைகளின் உருவத்தில் எந்த விக்கிரகத்தையும் செய்யாதே. நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம்; ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து, வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன். ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன். உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தமது பெயரைத் தவறான முறையில் பயன்படுத்தும் எவனையும் குற்றமற்றவனாகக் கருதமாட்டார்.
உபாகமம் 5:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார். அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார். யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார். யெகோவாவுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே நான் யெகோவாவுக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்: நீங்கள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா நானே. என்னைத்தவிர உனக்கு வேறு தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவாவாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன். உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
உபாகமம் 5:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம், “இஸ்ரவேல் ஜனங்களே! நான் இன்று உங்களிடம் கூறும் சட்டங்களையும் நியாயங்களையும் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். நீங்கள் அவற்றை மனதில் கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும். நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். கர்த்தர் இந்த உடன்படிக்கையை நமது முற்பிதாக்களுடன் செய்து கொள்ளாமல், இன்று உயிரோடு வாழ்கின்ற நம் எல்லோருடனுமே செய்துகொண்டார். மலையிலே கர்த்தர் உங்களிடம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார். அவர் அக்கினியின் நடுவிலிருந்து உங்களிடம் பேசினார். ஆனால், அந்த அக்கினியைக் கண்டு நீங்கள் பயந்தீர்கள். அதனால் நீங்கள் மலையில் ஏறாமல் இருந்தீர்கள். எனவே, கர்த்தர் சொல்வதை உங்களுக்கு அறிவிக்க நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன். அப்பொழுது கர்த்தர் சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் எகிப்தில் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியேறச் செய்தேன். எனவே நான் கூறும் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். “என்னைத் தவிர அந்நிய தெய்வங்களை நீங்கள் தொழுதுகொள்ளக்கூடாது. “மேலே ஆகாயத்திலோ, கீழே பூமியிலோ அல்லது பூமிக்குக் கீழே தண்ணீரிலோ உள்ளவைகளின் சிலைகளையோ உருவங்களையோ உண்டாக்கக்கூடாது. நீங்கள் எத்தகைய விக்கிரகங்களையும் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! என் ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நான் வெறுக்கின்றேன். எனக்கு எதிராக அவ்வாறு பாவம் செய்யும் ஜனங்கள் என் எதிரிகள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் அவர்களின் குழந்தைகளையும்கூடத் தண்டிப்பேன். ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்! “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைத் தவறான வழியில் பயன்படுத்தாதே. அவ்வாறு, ஒருவன் கர்த்தருடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் அவன் தண்டிக்கப்படுவான். அவன் கர்த்தரால் குற்றமற்றவனாகக் கருதப்படமாட்டான்.
உபாகமம் 5:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார். அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார். கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார். கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் , உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்: உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.