உபாகமம் 5:1-11

உபாகமம் 5:1-11 TAERV

மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம், “இஸ்ரவேல் ஜனங்களே! நான் இன்று உங்களிடம் கூறும் சட்டங்களையும் நியாயங்களையும் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். நீங்கள் அவற்றை மனதில் கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும். நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். கர்த்தர் இந்த உடன்படிக்கையை நமது முற்பிதாக்களுடன் செய்து கொள்ளாமல், இன்று உயிரோடு வாழ்கின்ற நம் எல்லோருடனுமே செய்துகொண்டார். மலையிலே கர்த்தர் உங்களிடம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார். அவர் அக்கினியின் நடுவிலிருந்து உங்களிடம் பேசினார். ஆனால், அந்த அக்கினியைக் கண்டு நீங்கள் பயந்தீர்கள். அதனால் நீங்கள் மலையில் ஏறாமல் இருந்தீர்கள். எனவே, கர்த்தர் சொல்வதை உங்களுக்கு அறிவிக்க நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவில் நின்றேன். அப்பொழுது கர்த்தர் சொன்னார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் எகிப்தில் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை வெளியேறச் செய்தேன். எனவே நான் கூறும் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். “என்னைத் தவிர அந்நிய தெய்வங்களை நீங்கள் தொழுதுகொள்ளக்கூடாது. “மேலே ஆகாயத்திலோ, கீழே பூமியிலோ அல்லது பூமிக்குக் கீழே தண்ணீரிலோ உள்ளவைகளின் சிலைகளையோ உருவங்களையோ உண்டாக்கக்கூடாது. நீங்கள் எத்தகைய விக்கிரகங்களையும் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! என் ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நான் வெறுக்கின்றேன். எனக்கு எதிராக அவ்வாறு பாவம் செய்யும் ஜனங்கள் என் எதிரிகள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் அவர்களின் குழந்தைகளையும்கூடத் தண்டிப்பேன். ஆனால், என்னிடத்தில் அன்பு காட்டி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களிடம் மிகவும் இரக்கம் காட்டுவேன். அவர்களின் குடும்பங்களின் மீது ஆயிரம் தலைமுறைகள் வரை இரங்கி அருள்வேன்! “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பெயரைத் தவறான வழியில் பயன்படுத்தாதே. அவ்வாறு, ஒருவன் கர்த்தருடைய பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் அவன் தண்டிக்கப்படுவான். அவன் கர்த்தரால் குற்றமற்றவனாகக் கருதப்படமாட்டான்.