உபாகமம் 30:11-20
உபாகமம் 30:11-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை, நீங்கள் விளங்கிக்கொள்வதற்கு அதிக கடினமானதும் அல்ல. கைக்கொள்வதற்கு இயலாததும் அல்ல. அது வானத்தின் உயரத்தில் இருப்பதும் அல்ல. ஆகவே, “யார் வானத்திற்கு ஏறி அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி, அதை எங்களுக்கு அறிவிப்பவன் யார்?” என்று நீங்கள் கேட்கவேண்டும். அது கடலுக்கு அப்பால் உள்ளதும் அல்ல. ஆகவே, “யார் கடலைக் கடந்து, அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அதை எங்களுக்கு அறிவிப்பான்” என்றும் நீங்கள் கேட்கவேண்டியதில்லை. அந்த வார்த்தை உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. நீங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அது உங்கள் வாயிலும், உங்கள் இருதயத்திலும் இருக்கிறது. பாருங்கள், இன்று நான் வாழ்வையும் செல்வச் செழிப்பையும், அத்துடன் மரணத்தையும் அழிவையும் உங்கள்முன் வைக்கிறேன். ஏனெனில், இன்று உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் அன்பு வைக்கவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கைக்கொள்வீர்களானால் நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார். ஆனால் உங்களுடைய இருதயம் விலகி, நீங்கள் கீழ்ப்படியாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றை வழிபடும்படி இழுப்புண்டு போவீர்களானால், நிச்சயமாய் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று இந்த நாளில் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் அந்நாட்டிலே நீடித்து வாழமாட்டீர்கள். நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்பதற்கு, வானத்தையும் பூமியையும் உங்களுக்கு விரோதமான சாட்சிகளாக இன்று அழைக்கிறேன். இப்பொழுது வாழ்வைத் தெரிந்தெடுத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் வாழ்வடைவீர்கள். இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்பு செலுத்துங்கள். அப்பொழுது அவருடைய குரலுக்குச் செவிகொடுத்து அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்வீர்கள். ஏனெனில் யெகோவாவே உங்கள் வாழ்வாயிருக்கிறார். அவர் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்ட நாட்டில் உங்களை நீண்ட நாட்கள் வாழச்செய்வார்.
உபாகமம் 30:11-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“நான் இன்று உனக்கு கொடுக்கிற கட்டளை உனக்கு மிகக் கடினமானதும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக வானத்திற்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல; நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல; நீ அந்த வார்த்தையின்படியே செய்வதற்கு, அது உனக்கு மிகவும் சமீபமாக உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. “இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்பாக வைத்தேன். நீ பிழைத்து, பெருகுவதற்கும், நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பதற்கும், நீ உன் தேவனாகிய யெகோவாவில் அன்புசெலுத்தவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன். நீ கேட்காதபடி, மனம் தடுமாறி, இழுக்கப்பட்டு, மற்ற தெய்வங்களைப் பணிந்து, அவர்களை வணங்கினால், நீங்கள் சொந்தமாக்குவதற்கு யோர்தான் நதியைக் கடந்துபோகிற தேசத்தில் நீண்டநாட்கள் வாழாமல், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன்பாக வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சியாக வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, யெகோவா உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படி, உன் தேவனாகிய யெகோவாவில் அன்புசெலுத்தி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு வாழ்க்கையும், நீண்ட ஆயுளுமானவர்” என்றான்.
உபாகமம் 30:11-20 பரிசுத்த பைபிள் (TAERV)
“இன்று நான் உனக்கு கொடுக்கிற இந்த கட்டளைகள் கடினமானவை அல்ல, உங்களுக்குத் தூரமானதும் அல்ல. ‘பரலோகத்துக்குச் சென்று, எங்களுக்காக அதனைக் கொண்டுவருவது யார்? அப்பொழுதுதான் எங்களால் அதைக் கேட்கவும் அதன்படி நடக்கவும் முடியும்’ என்று நீ சொல்லாதபடிக்கு அது பரலோகத்தில் உள்ளதும் அல்ல. ‘கடல் கடந்துபோய் நாங்கள் கேட்கவும், செய்யவும் யார் கொண்டு வருவார்கள்?’ என்று நீ சொல்லாதபடிக்கு அது கடலுக்கு அக்கரையிலும் இல்லை. இந்த வார்த்தை உனக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அது உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது. எனவே நீ அதற்குக் கீழ்ப்படிய முடியும். “இன்று நான் வாழ்வையும், மரணத்தையும், நன்மையையும், தீமையையும் உனக்கு முன்பாகத் தெரிந்துகொள்ளும்படியாகக் கொடுக்கிறேன். உனது தேவனாகிய கர்த்தரை நேசிக்கும்படி இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். அவரைப் பின்பற்றும்படியும் அவரது சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியுமாறு நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். பிறகு நீ வாழ்வாய், உனது ஜனம் பெரிதாக வளரும். உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைகின்ற இந்த நாட்டில் உன்னை, உனது தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிப்பார். ஆனால் கர்த்தரிடமிருந்து விலகி நீ அவருக்குச் செவிசாய்க்க மறுத்து நீ அவரை தொழுதுகொள்வதிலிருந்து விலகி பிற பொய்த் தெய்வங்களுக்கு சேவை செய்தால். நீ அழிக்கப்படுவாய். நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்த்தரிடமிருந்து விலகினால், உனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நீ நுழைந்து கொண்டிருக்கிற யோர்தானைக் கடந்து போகிற நாட்டில் நீண்டகாலம் வாழமாட்டாய். “இன்று நான் உனக்கு முன்பாக இரண்டு வழிகளை வைத்தேன். உனது தேர்வுக்கு பரலோகத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்தேன். நீ வாழ்வு அல்லது மரணத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். நீ வாழ்வைத் தெரிந்தெடுத்தால் அது ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். நீ மரணத்தைத் தெரிந்தெடுத்தால் அது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். எனவே வாழ்வைத் தேர்ந்தெடு. பிறகு நீயும் உனது பிள்ளைகளும் வாழலாம். நீ உனது தேவனாகிய கர்த்தரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவரைவிட்டு விலகக்கூடாது. ஏனென்றால், கர்த்தரே உனது வாழ்வு. உனது முற் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்கு கர்த்தர் வாக்களித்த நாட்டில் நீண்ட காலம் வாழும்படி அவர் உன்னை ஆசீர்வதிப்பார்.”
உபாகமம் 30:11-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல; நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக்கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல; நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன். நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால், நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.