உபாகமம் 30:11-20

உபாகமம் 30:11-20 TCV

இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை, நீங்கள் விளங்கிக்கொள்வதற்கு அதிக கடினமானதும் அல்ல. கைக்கொள்வதற்கு இயலாததும் அல்ல. அது வானத்தின் உயரத்தில் இருப்பதும் அல்ல. ஆகவே, “யார் வானத்திற்கு ஏறி அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி, அதை எங்களுக்கு அறிவிப்பவன் யார்?” என்று நீங்கள் கேட்கவேண்டும். அது கடலுக்கு அப்பால் உள்ளதும் அல்ல. ஆகவே, “யார் கடலைக் கடந்து, அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அதை எங்களுக்கு அறிவிப்பான்” என்றும் நீங்கள் கேட்கவேண்டியதில்லை. அந்த வார்த்தை உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. நீங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அது உங்கள் வாயிலும், உங்கள் இருதயத்திலும் இருக்கிறது. பாருங்கள், இன்று நான் வாழ்வையும் செல்வச் செழிப்பையும், அத்துடன் மரணத்தையும் அழிவையும் உங்கள்முன் வைக்கிறேன். ஏனெனில், இன்று உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் அன்பு வைக்கவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கைக்கொள்வீர்களானால் நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார். ஆனால் உங்களுடைய இருதயம் விலகி, நீங்கள் கீழ்ப்படியாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றை வழிபடும்படி இழுப்புண்டு போவீர்களானால், நிச்சயமாய் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று இந்த நாளில் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் அந்நாட்டிலே நீடித்து வாழமாட்டீர்கள். நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்பதற்கு, வானத்தையும் பூமியையும் உங்களுக்கு விரோதமான சாட்சிகளாக இன்று அழைக்கிறேன். இப்பொழுது வாழ்வைத் தெரிந்தெடுத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் வாழ்வடைவீர்கள். இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்பு செலுத்துங்கள். அப்பொழுது அவருடைய குரலுக்குச் செவிகொடுத்து அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்வீர்கள். ஏனெனில் யெகோவாவே உங்கள் வாழ்வாயிருக்கிறார். அவர் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்ட நாட்டில் உங்களை நீண்ட நாட்கள் வாழச்செய்வார்.