உபாகமம் 28:1-15

உபாகமம் 28:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுவதும் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்து, அவற்றின்படி நடந்தால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை இந்தப் பூமியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் மேலாக உயர்த்துவார். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், இந்த ஆசீர்வாதங்களெல்லாம் உங்கள்மேல் வந்து உங்களோடிருக்கும்: நீங்கள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உங்கள் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்படும், உங்கள் நாட்டின் பயிர்வகையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களான மாட்டு மந்தையின் கன்றுகளும், செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளும் ஆசீர்வதிக்கப்படும். உங்கள் அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்படும். நீங்கள் பட்டணத்தின் உள்ளே வரும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். பட்டணத்தின் வெளியே போகும்போதும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக வரும் பகைவர்கள் உங்களுக்கு முன்பாகத் தோல்வியடையும்படி, யெகோவா செய்வார். அவர்கள் ஒரு திசையிலிருந்து உங்களை எதிர்த்து வருவார்கள். ஆனால் உங்களைவிட்டு ஏழு திசைகளில் சிதறி ஓடுவார்கள். உங்கள் தானியக் களஞ்சியங்களின்மேலும், நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றின்மேலும் யெகோவா ஆசீர்வாதத்தை அனுப்புவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாட்டில் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளையைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா ஆணையிட்டு வாக்குப்பண்ணியபடி, அவர் உங்களை பரிசுத்த மக்களாக நிலைநிறுத்துவார். அப்பொழுது பூமியிலுள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் யெகோவாவின் பெயரால் அழைக்கப்படுவதைக் கண்டு உங்களுக்குப் பயப்படுவார்கள். யெகோவா உங்களுக்கு நிறைவான செழிப்பை வழங்குவார். உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்குக்கொடுத்த நாட்டில், உங்கள் கர்ப்பத்தின் கனியையும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் இளமையானவற்றையும், உங்கள் நிலத்தின் விளைச்சலையும் நிறைவாகச் செழிக்கப்பண்ணுவார். யெகோவா தமது நிறைவான களஞ்சியமான வானத்தைத் திறந்து உங்கள் நாட்டிலே பருவகாலத்தில் மழையை அனுப்புவார். உங்கள் கைவேலைகள் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் அநேக நாட்டவர்களுக்குக் கடன்கொடுப்பீர்கள். ஆனால் ஒருவரிடமும் கடன் வாங்கமாட்டீர்கள். யெகோவா உங்களைத் தலையாக்குவார்; வாலாக்கமாட்டார். இந்த நாளில் நான் உங்களுக்குக் கொடுக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கவனித்து அவற்றைக் கவனமாகப் பின்பற்றினால், நீங்கள் எப்பொழுதும் மேன்மையாய் இருப்பீர்கள். கீழாயாகமாட்டீர்கள். வேறு தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்குப் பணிசெய்வதினால், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளைகள் ஒன்றிலிருந்தும் வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்பவேண்டாம். ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்ப் பின்பற்றாமலும்போனால், இந்த சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வந்து, உங்களை பிடித்துக்கொள்ளும்

உபாகமம் 28:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வயல்வெளிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். “உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் யெகோவா உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். யெகோவா உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். நீ உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடக்கும்போது, யெகோவா உனக்கு வாக்களித்தபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த மக்களாக நிலைப்படுத்துவார். அப்பொழுது யெகோவாவுடைய நாமம் உனக்குச் சூட்டப்பட்டது என்று பூமியின் மக்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். உனக்குக் கொடுப்பேன் என்று யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், யெகோவா உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், யெகோவா உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். இன்று நான் உங்களுக்கு கொடுக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டுவிலகி வேறே தெய்வங்களை வணங்குவதற்கு, நீ வலதுபுறமோ, இடதுபுறமோ சாயாமல், இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், யெகோவா உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். “இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.

உபாகமம் 28:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

“இப்போதும், நான் இன்று உங்களுக்குச் சொன்ன உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையெல்லாம் நீங்கள் கவனமாகக் கடைப்பிடிப்பீர்களேயானால், உங்கள் தேவனாகிய கர்த்தர் பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் விட உங்களை உயர்த்தி வைப்பார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிவீர்களேயானால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு வரும்: “நகரத்திலும் வயலிலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்குப் பல குழந்தைகளைக் கொடுப்பார். அவர் உங்கள் நிலத்தை ஆசீர்வதிப்பார். அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுப்பார். அவர் உங்கள் மிருகங்களை ஆசீர்வதிப்பார். அவற்றுக்கு நிறைய குட்டிகளைப் பெருகச்செய்வார். அவர் உங்களது அனைத்து கன்றுகளையும் மற்றும் ஆட்டுக் குட்டிகளையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களது கூடைகளையும், பாத்திரங்களையும் ஆசீர்வதித்து அவற்றில் உணவை நிரப்புவார். கர்த்தர் உங்களை எல்லா நேரங்களிலும் நீங்கள் செய்கிற அனைத்திலும் ஆசீர்வதிப்பார். “உங்களுக்கு எதிராகச் சண்டைச் செய்ய வருகிற உங்கள் பகைவர்களைத் தோற்கடிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பகைவர்கள் உங்களுக்கு எதிராக ஒரு வழியாக வருவார்கள், ஆனால் அவர்கள் வேறுபட்ட ஏழு வழிகளில் ஓடுவார்கள். “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் களஞ்சியங்களை நிரப்புவார். நீங்கள் செய்கிற அனைத்தையும் அவர் ஆசீர்வதிப்பார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர் உங்களுக்குக் கொடுத்த நாட்டை ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களைத் தமக்கென்று சிறந்த பரிசுத்த ஜனங்களாக, தாம் வாக்குறுதி அளித்தபடி ஆக்குவார். நீங்கள் உங்களது தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் கர்த்தர் இதனைச் செய்வார். பிறகு எல்லா நாட்டினரும் கர்த்தருடைய பெயரால் நீங்கள் அழைக்கப்படுவதைக் கேட்பார்கள். அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள். “கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார். கர்த்தர், தமது வளமான ஆசீர்வாதங்களை வைத்துள்ள சேமிப்பு அறையினைத் திறப்பார். உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையைச் சரியான காலத்தில் அனுப்புவார். நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுக்கிற அளவிற்குப் பணம் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து எதையும் கடனாகப் பெறுகிற தேவை உங்களுக்கு நேரிடாது. கர்த்தர் உங்களை வாலாக இல்லாமல் தலையாக ஆக்குவார். நீங்கள் கீழாக இல்லாமல் மேலாவீர்கள். இன்று நான் சொல்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளைக் கேட்டால், இது நிகழும். நீங்கள் கவனமாக இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது. “ஆனால் நீ உனது தேவனாகிய கர்த்தர் சொல்கின்றவற்றைக் கவனிக்காமல் இருந்தால், நான் இன்று உனக்கு சொல்கின்றபடி அவரது சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு இத்தீமைகள் எல்லாம் உனக்கு ஏற்படும்

உபாகமம் 28:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்