உபா 28:1-15

உபா 28:1-15 IRVTAM

“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வயல்வெளிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். “உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் யெகோவா உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். யெகோவா உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். நீ உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடக்கும்போது, யெகோவா உனக்கு வாக்களித்தபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த மக்களாக நிலைப்படுத்துவார். அப்பொழுது யெகோவாவுடைய நாமம் உனக்குச் சூட்டப்பட்டது என்று பூமியின் மக்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். உனக்குக் கொடுப்பேன் என்று யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், யெகோவா உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், யெகோவா உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். இன்று நான் உங்களுக்கு கொடுக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டுவிலகி வேறே தெய்வங்களை வணங்குவதற்கு, நீ வலதுபுறமோ, இடதுபுறமோ சாயாமல், இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், யெகோவா உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். “இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.

உபா 28:1-15 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்