உபாகமம் 18:15-22

உபாகமம் 18:15-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினனை உங்களுக்காக எழுப்புவார். நீங்கள் அவருக்குச் செவிகொடுக்கவேண்டும். ஓரேபிலே பரிசுத்த சபை கூடிய நாளிலே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நாம் கேளாமல் இருப்போம்; அவருடைய இந்தப் பெரிய நெருப்பைத் தொடர்ந்து பார்க்காமல் இருப்போம். பார்த்தால் நாங்கள் சாவோம்” என்று நீங்கள் சொன்னபோது கேட்டுக்கொண்டது இதுவே. அப்பொழுது யெகோவா என்னிடம் சொன்னதாவது: “அவர்கள் சொல்வது நல்லதே. அவர்களுடைய சகோதரருள் இருந்து அவர்களுக்காக உன்னைப்போன்ற இறைவாக்கு உரைப்பவன் ஒருவரை எழுப்புவேன். என் வார்த்தைகளை அவர் வாயில் வைப்பேன். நான் கட்டளையிட்டதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார். அந்த இறைவாக்கினன் என் பெயரில் சொல்லும் என் வார்த்தைகளுக்கு யாராவது செவிகொடாமல்போனால், நான் நானே அவனிடம் கணக்குக்கேட்பேன். ஆனால் நான் கட்டளையிடாத வார்த்தையை என் பெயரில் பேசத் துணியும் இறைவாக்கு உரைப்போனும், வேறு தெய்வங்களின்பேரில் பேசுகிற தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டும்.” “இந்தச் செய்தி யெகோவாவினால் கொடுக்கப்படாதது என்று நாங்கள் எப்படி அறிவோம்?” என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் எண்ணிக்கொள்ளலாம். ஒரு இறைவாக்கினன் யெகோவாவின் பெயரில் அறிவிப்பது நடக்காமலும், உண்மையாய் நிறைவேறாமலும் போனால், அது யெகோவாவினால் பேசப்படாத செய்தி. அத்தீர்க்கதரிசி துணிகரமாய் பேசுபவன், நீங்கள் அவனுக்குப் பயப்படவேண்டாம்.

உபாகமம் 18:15-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உன் தேவனாகிய யெகோவா என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்வார்; அவர் சொல்வதைக் கேட்பீர்களாக. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய யெகோவாவை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரர்களிடத்திலிருந்து எழும்பச்செய்து, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தெய்வங்களின் பெயராலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். யெகோவா சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி யெகோவாவின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடக்காமலும் செயல்படாமலும் போனால், அது யெகோவா சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

உபாகமம் 18:15-22 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். “கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே. நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான். அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார். “ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். ‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.

உபாகமம் 18:15-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தைகளை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.