உபாகமம் 18:15-22

உபாகமம் 18:15-22 TCV

உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினனை உங்களுக்காக எழுப்புவார். நீங்கள் அவருக்குச் செவிகொடுக்கவேண்டும். ஓரேபிலே பரிசுத்த சபை கூடிய நாளிலே, “எங்கள் இறைவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நாம் கேளாமல் இருப்போம்; அவருடைய இந்தப் பெரிய நெருப்பைத் தொடர்ந்து பார்க்காமல் இருப்போம். பார்த்தால் நாங்கள் சாவோம்” என்று நீங்கள் சொன்னபோது கேட்டுக்கொண்டது இதுவே. அப்பொழுது யெகோவா என்னிடம் சொன்னதாவது: “அவர்கள் சொல்வது நல்லதே. அவர்களுடைய சகோதரருள் இருந்து அவர்களுக்காக உன்னைப்போன்ற இறைவாக்கு உரைப்பவன் ஒருவரை எழுப்புவேன். என் வார்த்தைகளை அவர் வாயில் வைப்பேன். நான் கட்டளையிட்டதையெல்லாம் அவர் அவர்களுக்குச் சொல்லுவார். அந்த இறைவாக்கினன் என் பெயரில் சொல்லும் என் வார்த்தைகளுக்கு யாராவது செவிகொடாமல்போனால், நான் நானே அவனிடம் கணக்குக்கேட்பேன். ஆனால் நான் கட்டளையிடாத வார்த்தையை என் பெயரில் பேசத் துணியும் இறைவாக்கு உரைப்போனும், வேறு தெய்வங்களின்பேரில் பேசுகிற தீர்க்கதரிசியும் கொல்லப்படவேண்டும்.” “இந்தச் செய்தி யெகோவாவினால் கொடுக்கப்படாதது என்று நாங்கள் எப்படி அறிவோம்?” என்று நீங்கள் உங்கள் இருதயத்தில் எண்ணிக்கொள்ளலாம். ஒரு இறைவாக்கினன் யெகோவாவின் பெயரில் அறிவிப்பது நடக்காமலும், உண்மையாய் நிறைவேறாமலும் போனால், அது யெகோவாவினால் பேசப்படாத செய்தி. அத்தீர்க்கதரிசி துணிகரமாய் பேசுபவன், நீங்கள் அவனுக்குப் பயப்படவேண்டாம்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த உபாகமம் 18:15-22