உபாகமம் 18:1-14
உபாகமம் 18:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக. அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம். ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமானபாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
உபாகமம் 18:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
லேவியரான ஆசாரியருக்கு அதாவது, முழு லேவிகோத்திரத்தாருக்கும் இஸ்ரயேலருடன் நிலப்பங்கோ, உரிமைச்சொத்தோ இருக்கக்கூடாது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளாலேயே அவர்கள் வாழவேண்டும். ஏனெனில், அதுவே அவர்களின் உரிமைச்சொத்து. தங்கள் சகோதரருக்குள் அவர்களுக்கு உரிமைச்சொத்து இருக்கக்கூடாது. யெகோவா அவர்களுக்கு வாக்குக் கொடுத்தபடி யெகோவாவே அவர்களுடைய உரிமைச்சொத்தாய் இருக்கிறார். மாட்டையோ, செம்மறியாட்டையோ மக்கள் பலியிடும்போது, முன்னந்தொடைகளும், தாடைகளும், உள்ளுறுப்புகளும் ஆசாரியருக்குப் பங்காகக் கொடுக்கப்படவேண்டும். நீங்கள் உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பலன்களையும், ஆடுகளை மயிர் கத்தரிக்கும்போது அதன் முதல் ஆட்டுமயிரையும் ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாவின் பெயரில் எப்பொழுதும் நிற்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் அவர்களையும், அவர்கள் சந்ததிகளையும் தெரிந்துகொண்டார். லேவியன் ஒருவன் இஸ்ரயேல் நாட்டிலே எங்காவது தான் வாழும் உங்கள் பட்டணங்கள் ஒன்றிலிருந்து புறப்பட்டு, யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்கு வாஞ்சையுடன் வருவானாகில், யெகோவாவுக்குமுன் பணிசெய்யும் தன் உடனொத்த எல்லா லேவியர்களைப்போல, தன் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் அங்கே அவனும் பணிசெய்யலாம். குடும்பச் சொத்துக்களை விற்றதிலிருந்து அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டாலும்கூட, ஆசாரியருக்குக் கிடைப்பவற்றில் சமமான பங்கை அவனும் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போய்ச்சேர்ந்ததும், அங்கிருக்கும் நாடுகளின் அருவருப்பான நடைமுறைகளைக் கைக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டாம். உங்களில் யாராவது தனது மகனையோ, மகளையோ தீக்கடக்கப் பண்ணக்கூடாது. குறிபார்ப்பவனோ, மாந்திரீகம் செய்பவனோ, சகுனங்களுக்கு வியாக்கியானம் சொல்லுகிறவனோ, சூனியம் செய்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. மந்திரித்துக் கட்டுபவனோ, ஆவி உலகுடன் தொடர்புகொள்பவனோ, செத்தவர்களிடத்தில் ஆலோசனை கேட்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. இப்படிப்பட்டவைகளைச் செய்கிற எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன். இப்படி அருவருப்பான செயல்களின் காரணமாகவே அந்த நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாகத் துரத்துவார். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும். நீங்கள் வெளியேற்றப்போகும் நாட்டவர்கள் மாந்திரீகம் செய்கிறவர்களுக்கும், குறிசொல்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். ஆனால் உங்களுக்கோ அப்படிச் செய்வதற்கு உங்கள் இறைவனாகிய யெகோவா அனுமதிகொடுக்கவில்லை.
உபாகமம் 18:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
“லேவியர்களாகிய ஆசாரியர்களும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் மக்களுடன் பங்கும் உரிமையும் இல்லாதிருப்பதாக; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளையும் அவருக்கு உரிமையானவைகளையும் அவர்கள் சாப்பிடலாம். அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து. மக்களிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியர்களுக்குரிய வரவானது: மக்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். உன் தானியம், திராட்சைரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். அவனும் அவனுடைய மகன்களும் எல்லா நாட்களும் யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஆராதனைசெய்ய நிற்பதற்காக, உன் தேவனாகிய யெகோவா உன் கோத்திரத்தார் எல்லோருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். “இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்கு மனப்பூர்வமாக வந்தால், அங்கே யெகோவாவுடைய சந்நிதியில் நிற்கும் லேவியர்களாகிய தன் எல்லா சகோதரர்களைப்போலவும் தன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை முன்னிட்டு ஊழியம்செய்வான். அப்படிப்பட்டவர்கள் தங்கள் முற்பிதாக்களுடைய சொத்தின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காக சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள். “உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், வசியக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்பான செயலின் காரணமாக உன் தேவனாகிய யெகோவா அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ உத்தமனாயிருப்பாயாக. “நீ துரத்திவிடப்போகிற இந்த மக்கள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய யெகோவா உத்திரவுகொடுக்கமாட்டார்.
உபாகமம் 18:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
“லேவியின் கோத்திரம் இஸ்ரவேலில் எவ்வித சொத்தும், நிலமும் பெறுவதில்லை. அவர்கள் ஆசாரியர்களாக சேவை செய்வார்கள். தகன பலியாக கர்த்தருக்குச் செலுத்தும் உணவுப் பொருட்களே இவர்களுக்கு பிழைப்பூட்டும் சுதந்திர வீதமாக இருக்கிறது. அதுவே லேவியர்களின் பங்கு ஆகும். இந்த லேவியர்கள், மற்ற கோத்திரங்கள் வைத்திருப்பதைப்போன்று எவ்வித பங்கும், சுதந்திரமும் பெற்றிருப்பவர்கள் அல்ல. கர்த்தர் அவர்களுக்குக் கூறியதுபோல் கர்த்தரே அவர்களது சொத்து. “நீங்கள் மாட்டையோ, ஆட்டையோ, பலியிட்டால் அவற்றின் சில பகுதியினை ஆசாரியர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும் பகுதிகள் எதுவென்றால் அந்த ஆடு மாடுகளின் முன் தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் அறுவடை செய்த முதல் பலன்களின் ஒரு பகுதியையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் தானியங்கள், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதல் பலன்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் ஆடுகளில் கத்தரிக்கும் முதல் பங்கான ஆட்டு ரோமங்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாக் கோத்திரங்களையும் பார்த்து அவர்களிலிருந்து, லேவியரையும் அவர்களது சந்ததியினரையும் என்றென்றும் ஆசாரிய சேவை செய்ய தேர்ந்தெடுத்துள்ளார். “உங்களில் வசிக்கின்ற ஒவ்வாரு லேவியனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் பணி செய்வான். ஆனால், அவன் மேலும் அதிக நேரம் அங்குப் பணியாற்ற விரும்பினால் அவன் எப்பொழுது வேண்டுமானாலும் பணி செய்யலாம். இஸ்ரவேலில் எந்த ஊர்களிலும், எந்தப் பகுதிகளிலும் வசித்து வருகின்ற யாதொரு லேவியனும் அவன் வசிக்கிக்கின்ற வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வரலாம். எந்த நேரத்திலும் அங்கு வந்து சேவை செய்யலாம். அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம். இந்த லேவியன் தனது குடும்பம் வழக்கமாகப் பெறுகின்ற பங்குடன் மற்ற லேவியரின் சமபங்கையும் பெற்றுக்கொள்வான். “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் குமாரர்களையோ, குமாரத்திகளையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாது. குறி சொல்கிறவன், நாள் பார்ப்பவன், மை போட்டு பார்ப்பவன், மந்திரவாதி, அல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார். நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். “நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார்.