உபாகமம் 18:1-14

உபாகமம் 18:1-14 TCV

லேவியரான ஆசாரியருக்கு அதாவது, முழு லேவிகோத்திரத்தாருக்கும் இஸ்ரயேலருடன் நிலப்பங்கோ, உரிமைச்சொத்தோ இருக்கக்கூடாது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளாலேயே அவர்கள் வாழவேண்டும். ஏனெனில், அதுவே அவர்களின் உரிமைச்சொத்து. தங்கள் சகோதரருக்குள் அவர்களுக்கு உரிமைச்சொத்து இருக்கக்கூடாது. யெகோவா அவர்களுக்கு வாக்குக் கொடுத்தபடி யெகோவாவே அவர்களுடைய உரிமைச்சொத்தாய் இருக்கிறார். மாட்டையோ, செம்மறியாட்டையோ மக்கள் பலியிடும்போது, முன்னந்தொடைகளும், தாடைகளும், உள்ளுறுப்புகளும் ஆசாரியருக்குப் பங்காகக் கொடுக்கப்படவேண்டும். நீங்கள் உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பலன்களையும், ஆடுகளை மயிர் கத்தரிக்கும்போது அதன் முதல் ஆட்டுமயிரையும் ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும். ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா கோத்திரங்களிலுமிருந்து யெகோவாவின் பெயரில் எப்பொழுதும் நிற்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் அவர்களையும், அவர்கள் சந்ததிகளையும் தெரிந்துகொண்டார். லேவியன் ஒருவன் இஸ்ரயேல் நாட்டிலே எங்காவது தான் வாழும் உங்கள் பட்டணங்கள் ஒன்றிலிருந்து புறப்பட்டு, யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திற்கு வாஞ்சையுடன் வருவானாகில், யெகோவாவுக்குமுன் பணிசெய்யும் தன் உடனொத்த எல்லா லேவியர்களைப்போல, தன் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் அங்கே அவனும் பணிசெய்யலாம். குடும்பச் சொத்துக்களை விற்றதிலிருந்து அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டாலும்கூட, ஆசாரியருக்குக் கிடைப்பவற்றில் சமமான பங்கை அவனும் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குள் போய்ச்சேர்ந்ததும், அங்கிருக்கும் நாடுகளின் அருவருப்பான நடைமுறைகளைக் கைக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டாம். உங்களில் யாராவது தனது மகனையோ, மகளையோ தீக்கடக்கப் பண்ணக்கூடாது. குறிபார்ப்பவனோ, மாந்திரீகம் செய்பவனோ, சகுனங்களுக்கு வியாக்கியானம் சொல்லுகிறவனோ, சூனியம் செய்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. மந்திரித்துக் கட்டுபவனோ, ஆவி உலகுடன் தொடர்புகொள்பவனோ, செத்தவர்களிடத்தில் ஆலோசனை கேட்பவனோ உங்களுக்குள் இருக்கக்கூடாது. இப்படிப்பட்டவைகளைச் செய்கிற எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன். இப்படி அருவருப்பான செயல்களின் காரணமாகவே அந்த நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாகத் துரத்துவார். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும். நீங்கள் வெளியேற்றப்போகும் நாட்டவர்கள் மாந்திரீகம் செய்கிறவர்களுக்கும், குறிசொல்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். ஆனால் உங்களுக்கோ அப்படிச் செய்வதற்கு உங்கள் இறைவனாகிய யெகோவா அனுமதிகொடுக்கவில்லை.